காஞ்சி மாதங்கேஸ்வரர் ஆலயம் – சோமஸ்கந்தர் வடிவம்

சிறப்பு விருந்தினர் அரவிந்த் படைக்கும் சிறப்பு விருந்து. பலரும் செல்லும் காஞ்சியில் ஒளிந்து இருக்கும் பொக்கிஷம். நண்பர் அரவிந்த் சிலை சிற்பங்கள் மேல் தீராக் காதல் கொண்டவர். சிற்பம் பற்றி பல நல்ல புத்தங்களை சேகரித்து, அவற்றை பல முறை ஆழ்ந்து படித்து, அதன் பின்னர் அங்கு சென்று மீண்டும் மீண்டும் ரசித்து ஆராய்பவர். மேலே படியுங்கள் – இனி ஓவர் டு அரவிந்த்

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

ஒரு நண்பருடன் பேசும்போது, ஆர்வம் மீண்டும் எழுந்தது. கடைசியில், சென்ற வாரம், இப்போதே போக வேண்டும் என்று முடிவெடுத்து – அதுவும் அது ஒரு முழு வாரக் கடைசி – இரண்டு நாட்கள் ஒதுக்கி வைத்து – முடிந்தவரையிலும் அனைத்து இடங்களை இம்முறை பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் புறப்பட்டேன். நண்பர் கோபிநாத ஸ்ரீநிவாஸ் அவரும் உடனே வருகிறேன் என்று சேர்ந்துக்கொண்டார்.

ஒவ்வொரு ஆலயமாக செல்லச் செல்ல, சிற்பங்களின் போதை ஏறியது, வெய்யில் அதிகம் – என்றாலும் முதல் நாள் கைலாசநாதர், கச்சபேஸ்வரர், காமாட்சி அம்மன் , உலகளந்த பெருமாள் என்று சனிக்கிழமை வந்தது தெரியாமல் ஓடியே போய் விட்டது.

அடுத்த நாள் விடியற் காலையிலேயே புறப்பட்டு விட்டோம். மதியம் நடைசாத்தும் முன்னர் முடிந்த வரையிலும் முடிக்க வேண்டும் . ஏகாம்பரேஸ்வரர் தரிசனத்தை முடித்துவிட்டு வைகுண்ட பெருமாள் கோயில் விரைந்தோம். ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளியேஇருந்து பார்த்த பிரம்மாண்டத்திற்கு உள்ளே சிற்பங்கள் அப்படி ஒன்றும் விசேஷமாக இல்லை. ஆனால் வைகுண்ட பெருமாளோ …அப்பாடா – நகர முடியவில்லை – ஒவ்வொரு துணுக்கும் ஏராளமான சிலை, அவை சொல்லும் கதை. ஒரு இடத்தில ஹோங் சென், மல்லை கடற்கரை கோயில், பல்லவ மன்னர்கள் அரியணை ஏறும் வைபவம் என்று எங்கே பார்த்தாலும் சிற்பக் குவியல். அப்போது கோவில் பூசாரி பக்கத்தில் இன்னும் ஒரு நல்ல கோயில் இருக்கிறது – போய்ப் பாருங்கள் என்றார்.

வைகுண்ட பெருமாள் கோயிலில் இருந்து ஒரு இருநூறு மீட்டர் தூரம் தான் . ஆனால் அதை கண்டுபிடிப்பது சுலபம் இல்லை.

பூசாரி – இரண்டாவது வலது ரோட்டில் திரும்ப சொன்னார் – திரும்பியவுடன் கோபுரம் தெரிந்தது. ஆஹா என்று, சென்று பார்த்தால் – உள்ளே செல்லும் வழி தெரியவில்லை. எல்லா பக்கமும் நவீன வீடுகள். திரும்ப ஒருமுறை வந்த வழியே வந்து பார்த்தோம். ஆ , இதோ ஒரு சிறு பாதை. முப்பது அடி உள்ளே – அருமையான கோயில். பல்லவர் கட்டிய சிறு ஆலயம் தான் – மொத்தமே நாலாயிரம் சதுர அடி தான் இருக்கும். எதிரே ஒரு சிறு நந்தி, பக்கத்தில் ஒரு அரச மரம் ( அதுக்கு நல்ல கூட்டம் போல தெரிகிறது )


தரையில் இருந்து பத்து படி ஏறினால் மண்டபம்

உள்ளே – லிங்கம் – அதன் பின்னர் அற்புத சோமஸ்கந்தர் வடிவம். இது எந்த பாணியில் உள்ளது? பார்த்து சொல்லுங்கள்

இந்த ஆலயத்தின் உள்பக்க சுவரிலும், வெளி பிரகாரத்திலும் இன்னும் மிக அற்புத சிற்பங்கள் உள்ளன. இவற்றின் அழகை முழுவதுமாக ரசிக்க மீண்டும் ஒரு முறை வர வேண்டும்.

அற்புத சிற்பங்களையும் இந்த ஆலயத்தின் வரலாற்றையும் பற்றி – தொடரும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

யார் சிறந்த ஓவியன்

“அலைகளையும்,கொழுந்து விட்டெரியும் அழலையும்,காற்றின் போக்கில் விண்ணில் தவழ்ந்து செல்லும் வெண்முகிலின் கூட்டத்தையும் தூரிகையால் ஓவியமாக வடிக்க வல்லவனே மிகச் சிறந்த ஓவியன்.”

விஷ்ணு தர்மோத்தர புராணம், Ch 43 V 28

நான் இதனை முதல் முறையாக திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை அரசு ஓவியக் கல்லூரி ஆசிரியர் , அவர்களின் உரையில் ( அதற்கு அழைப்பு விடுத்த திரு. சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி ) கேட்டேன். உரையின் தொடக்கத்திலேயே மேல்கண்ட அந்த அற்புத வாக்கியத்தைச் சொல்லி எங்கள் ஆர்வத்தைத் தூண்டினார் சிவராமகிருஷ்ணன்.

”ஓர் ஓவியனின் பார்வையில் சிற்பம்” என்பதே உரையின் தலைப்பு – பல அற்புதமான சிற்ப வடிவங்களில் பொதிந்து கிடக்கும் கலை நுட்பங்களை அவர் எங்களுக்கு விளக்கினார். எனினும் என்னை மிகவும் கவர்ந்தது முடிவில் அவர் விளக்க எடுத்துக்கொண்ட ‘அஜந்தாவின் அழியா ஓவியங்கள்’ தலைப்பு (சிவகாமியின் சபதம் – ஆயனச் சிற்பியின் தாக்கம்தான்!!)

நண்பர்கள் பலரும் அஜந்தா சென்று அங்குள்ள அழியா ஓவியங்களைப் பார்த்துவிட்டுப் புளகாங்கிதம் அடைவதைக் கண்டதுண்டு. எனினும் அவர்கள் அவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு அப்படிப் பரவசப் படுகிறார்களா என்று ஒரு கேள்வி மனத்தில் இருந்தது. இங்கேதான் நுண்கலை வல்லுனர்களின் உதவி நம்மைப் போன்ற சாமானியர்களுக்குத் தேவை (இந்தப் பதிவை இட அனுமதி அளித்த திரு. சிவராமகிருஷ்ணன் அவர்களுக்கு மற்றுமொரு முறை நன்றி – இப்பதிவில் உள்ள நல்ல அம்சங்கள் எல்லாம் அவருடையவை; பிழைகள் ஏதேனும் இருந்தால் அவை எனது மட்டுமே )

இப்படித்தான் பொதுவாக அஜந்தா செல்லும் அனைவரும் அங்கிருக்கும் ஓவியங்களைப் பார்க்கின்றனர். சிதைந்து போனாலும் அதில் எஞ்சி இருக்கும் கலையை நாம் உன்னித்துப் பார்த்தால் மேலும் மேலும் ரசிக்கலாம். படத்தின் வலப்புறம் பாருங்கள்.

இது அஜந்தாவின் பதினேழாம் குடைவரையில் இருக்கும் சுவர் ஓவியம். வானுலக தேவதை புத்தரை வழிபட பூலோகம் இறங்கி வரும் காட்சி இது –

அருகில் சென்று ஓவியத்தின் அழகை ரசிப்போம்.

பேரழகுதான் – பொறுங்கள், அதற்குள் ’பேஷ் பேஷ்’ எல்லாம் வேண்டாம். இந்த ஓவியத்தின் நுட்பங்களை முதலில் பார்ப்போம்.

அதற்கும் முன்னர், நண்பர் ஓவியர் திரு பிரசாத் அவர்களை கட கடவென்று இந்த ஓவியத்தின் நகல் ஒன்றை வரைந்து தரச் சொன்னேன். இதோ அது –

ஒவ்வொன்றாக இந்த ஓவியத்தின் உன்னதங்களைப் பார்ப்போம்.

முதலில் – விஷ்ணு தர்மோத்தரத்தின் சித்ர ஸூத்ரம் பகுதியில் இடம்பெற்ற இன்னும் ஒரு வாக்கியத்தைப் பார்ர்ப்போம் ( விஷ்ணு தர்மோத்தரம், *அபிலாஷ்தார்த்த சிந்தாமணி,* சிவதத்வ ரத்நாகரம், சில்ப ரத்நம், நாரத சில்பம், ஸரஸ்வதி சில்பம், ப்ரஜாபதி சில்பம் முதலியவை சித்திரங்கள் பற்றித் தெரிவிக்கும் நூல்களில் குறிப்பிடத் தக்கவையாகும். இந்நூல்கள் ஓவியத்தின் தன்மை, வகைகள், செயல்முறை, வண்ணங்கள், துணைக் கருவிகள், மூலப் பொருட்கள், நற்பண்புகள், குறைகள், நடைமுறை, திறனாய்வு மரபுகள் பற்றிக் கூறுகின்றன. விஷ்ணு தர்மோத்திரத்திலுள்ள ’சித்ர ஸூத்ரம்’ என்று அழைக்கப்படும் பகுதியே பண்டைய ஓவியக் கலை நுட்பம் பற்றித் தெரிவிக்கும் தலைசிறந்த பகுதியாகும். )

// ரேகாம் ப்ரசம்ஸந்தி ஆசார்யா:, வர்ணாத்யாம் இதரே ஜநா://

என்றால் ” வல்லுனர்கள் ஓர் ஓவியத்தைக் கோடுகளை கொண்டே மதிப்பிடுவர்”

நாம் எல்லோருமே ஒருமுறையாவது வர்ணங்களைக் கொண்டு ஓவியம் தீட்ட முயற்சி செய்திருப்போம் ( சிறு வயதிலாவது !!). சிலர் முறையாகப் பயின்றும் இருப்பார். அப்படி நாம் தீட்டும்போது வர்ணத்தில் தோய்த்த தூரிகையை அப்படியே கையை எடுக்காமல் ஒரே மூச்சில் கோடுகளை வரைவது எவ்வளவு சிரமம் என்று அறிவோம். ஆனால் அதுதான் கைதேர்ந்த ஓவியனின் திறமை. இப்போது இந்த அஜந்தா ஓவியத்தின் கண்களையும் புருவத்தையும் பாருங்கள் – ஒரே இழுப்பில் வரையப்பட்ட அழகு – ஒரே இழுப்பு தான் – புருவம் வந்து விட்டது; அடுத்த இழுப்பு கண்களில் தோற்றம்.

அவை வெறும் நேர் கோடுகளும் அல்ல; அந்த வளைவுகளுக்குள் ஒரு நயம் உள்ளது. அந்தச் சிறு நெளிவில் கடைக்கண்ணின் தோற்றத்தின் உயிர்ப்பு மிக்க வெளிப்பாடு. அப்பப்பா ! இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்னொரு வாக்கியம் –

// அபி லகு லிகிதேயம் த்ருச்யதே பூர்ணமூர்த்தி: //

அப்படியென்றால் “முழு உருவத்தையும் வெகு சில கோடுகளைக் கொண்டு உணர்த்த வேண்டும் “

சரி, சம கால ஓவிய முறைகள் அஜந்தாவில் உள்ளனவா? பொதுவாக முப்பரிமாண உருவங்களை இரண்டு பரிமாணத்தில் காட்டுவதே ஓவியம். ஆனால் பார்ப்போருக்கு அது முப்பரிமாணத்தை உணர்த்த வேண்டும்.

இதற்கு எடுத்துக்காட்டாக ஓவியத்தில் உள்ள இரு காதணிகளையும் பாருங்கள்.

இடப்புறக் காதணி – வெறும் இரு நேர் கோடுகள் மட்டுமே கொண்டு தீட்டப்பட்டுள்ளது. அடியில் சற்றே வளைந்த கோடு. ஆனால் இதை வலது தோட்டுடன் ஒப்பிட்டுக் காணும் பொது. இது வட்டமான காதணி தான். எனினும் அங்கேயும் அது வட்டமாக இல்லை – Oval shapeல் இருந்தாலும் அந்த வடிவமைப்பு நமக்கு இரு காதணிகளின் வட்டமான தோற்றத்தை இடைவெளியுடன் முப்பரிமாணத்தில் உணர்த்தும் வகையில் உள்ளது – நமது பார்வையுடன் விளையாடுவதே இதன் நோக்கம்.

முதன்முதலில் சொன்ன வாக்கியத்தில் வற்புறுத்தப்படும் அசைவு -இதுவும் ஓர் ஓவிய முறை – பொருட்களின் அசைவை உயிரோட்டத்துடன் சித்திரிப்பதே ஓவியத்துக்கான இலக்கணம்.

இந்த ஓவியத்தில் உள்ள நிகழ்வு – இறங்கும் தேவதை திடீரென நின்று அருகில் இருப்பவரைப் பார்க்கிறாள். அவள் முகம் சற்றே இடது புறம் திரும்ப ஆரம்பிக்கிறது – கண்கள் இவற்றை முந்திக் கொண்டு விட்டன – கடைசியில் அவள் அணிந்திருக்கும் அணிகலன்கள் – திடீரென நின்று பாருங்கள் – அந்த திடீர் அசைவுக்கு ஈடு கொடுக்க அவை குலுங்கும் வண்ணம் வடித்த ஓவியனின் திறன்…

இது போல இன்னும் பல திறமைகளை இங்கு வெளிக்காட்டுகிறான் ஓவியன். அண்மையில் இருக்கும் பொருட்களைப் பெரிதாகவும் , தொலைவில் இருக்கும் பொருட்களைச் சிறியதாகவும் பார்க்கும் நமது மூளையை – இரு பரிமாணத்தில் இருக்கும் ஓவியத்தை முப்பரிமாணம் என்று நினைக்க வைக்க – அவன் அதை ஓவிய முறையில் கையாளும் உத்தி : கழுத்தில் உள்ள ஹாரத்தின் மணிகளைப் பாருங்கள் – நடுவில் உள்ள மணிகளைப் பெரிதாகவும், தோள்களின் மேல் செல்லும் பொது அவையே சிறிதாகவும் தெரியும்படி தீட்டி – நம்மை மயக்குகிறான் ஓவியன்.

இவனன்றோ சிறந்த ஓவியன் !

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – நான்காம் பாகம்

திருகழுகுன்றம் அல்லது திருக்கழுக்குன்றம், சென்னைவாசிகளுக்கு சுவையான பழைய நினைவுகளை கண்டிப்பாக தரும். ஏனெனில் பள்ளிச் சுற்றுலா என்றாலே அங்குதான் கூட்டிச் செல்வார்கள். அவர்களை சொல்லிக் குற்றம் இல்லை – அந்த நாளில் கையில் இருந்தது மல்லை , மாதவரம் பால் பண்ணை, வேடந்தாங்கல் , கிண்டி பூங்கா. எல்லாம் ஒரே நாளில் சென்று வந்துவிடலாம் , கட்டணம் இல்லை, வார நாட்களில் ஈ காக்கா வராது -பிள்ளைகள் கூட்டத்தில் தொலைந்து போகாது.. கொஞ்சம் பெரிய வகுப்பு என்றால் செஞ்சிக் கோட்டை -எனினும் திருகழுகுன்றம் தனி இடம் பெறும், காரணம், சில வருடங்கள் வரை இங்கே வந்து காலை உணவு அருந்திவிட்டு சென்ற கழுகுகள் !! பக்ஷி தீர்த்தம் .

ஓட்டை பள்ளிப் பேருந்தில் காய்கறி கூடை போல அனைவரையும் அடைத்து, தலத்தில் இறக்கி விடுவார்கள். நல்ல பையன் என்றால் நண்பனுடன் கை கோர்த்து செல்லலாம். சேஷ்டை செய்பவன் என்றால் ஒரு பெண்ணோடு ( அப்போது அது ஒரு பெரும் தண்டனை ) – ஆனால் பாதகர்கள் – எப்படி தான் விவரம் தெரியும் முன்னரே இதை மாத்தி, தனி தனியாய் அமர்திவிட்டர்கள். சரி, அதை விடுவோம் – ஜோடி மாடுகளை போல படிகளை சிரித்துக்கொண்டே ஏறுவோம். அப்போது படிகள் இத்தனை செங்குத்தாக இருந்தாக நினைவில்லை – எல்லாம் சிறிது செழிப்பு / பருமன் செய்யும் வேலையோ??

இதனாலோ என்னவோ , பள்ளி முடிந்தவுடன் எவருமே அந்தப்பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை. மூவர் – அப்பர், சம்பந்தர் , சுந்தரர் பாடிய தலம் . மல்லையில் இருந்து பதினான்கு கிலோமீட்டர் தான். ஆனால் யாரும் போவதில்லை. கழுகுகள் வருகை வேறு நின்று விட்டது ( விமோசனம் பெற்று விட்டனர் போல – இன்னும் ஒரு யுகம் ஆகும் மீண்டும் அவை வர !)

இதனால் அர்விந்த், வா அங்கே போகலாம், என்றதும் சட்டென பணிகளை முடித்துக்கொண்டு காரை திருவான்மியூர் கோயில் குளத்தருகே நிறுத்துவிட்டு விட்டு அவருடன் கிழக்கு கடற் கரை சாலையில் விரைந்தோம். இரண்டு இடங்களில் வழி கேட்டோம் – அப்புறம் மலை கண்ணில் பட்டு தானே வழி காட்டியது.

எங்கள் அதிஷ்டமோ துரதிஷ்டமோ , வழக்கம் போல, தளத்தை பற்றி சரியாக படித்துவிட்டு செல்லவில்லை. பலரை போல் வந்த பல்லவ குடவரை கோயிலை ( ஒருகல் மண்டபம் ) தேடாமல், நேரே மலை மீது உள்ள ஆலயத்திற்கு விரைந்தோம். இந்த மலை மேல் என்பது ஒரு முக்கியமான வாக்கியம். மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதனை அடுத்த பதிவில் குடைவரையை பற்றி பேசும்போது மீண்டும் பார்ப்போம்.

திரு K. R. ஸ்ரீனிவாசன் அவர்களது பல்லவ குடைவரைகள் இந்த பதிவை எழுத மிகவும் உதவியது. ( சென்று வந்த பின்னர் படித்தேன் !! பின் புத்தி )

விடா முயற்சி – சரி சரி விட்டு விட்டு ( பத்து படிக்கு ஒருமுறை மூச்சு வாங்கி ) மேலே ஏறி பார்த்தல் – இந்தனை சிறிய கோயில். அதுவும் கட்டுமான கோயில் – சிற்பங்களும் அவ்வளவு இல்லை. ஏதோ விசேஷம் வேறு – ஒரு சின்ன கிராமமே மூலவர் முன்னர் இருந்தது. அஷ்டகோணமாக வளைந்து – வேதகிரீஸ்வரரை தரிசித்துவிட்டு வெளியே பிரகாரம் வந்தோம் , அங்கே ஒரு புதையல் … சுவர்களில் நடுவில் துவாரம். அதனுள் பல்லவ புடைப்பு சிற்பம். சோமஸ்கந்தர்

பல்லவ சிற்பம் என்றாலே ஒரு தனி பாணி – மிகவும் இயல்பான தோற்றம் , அதிலும் ஒரு கம்பீரம், சிற்பியின் கலைத்திறன் ஆகமங்கள் என்ற கட்டுப்பாடுகளுக்குள் அடைக்கும் முன்னர் பிறந்த படைப்பு.

உடனே படம் எடுத்து விட்டு – உமை வடிவம் எப்படி செதுக்கப்பட்டுள்ளது என்று எட்டி பார்த்தோம். ராஜசிம்ஹ்ன் பாணியிலா , அல்லது அவனுக்கு முன்னர் உள்ள பாணியிலா ?

அப்போது , தமிழ் நாட்டு வரலாற்றில் அழியா இடம் பிடிக்க வேண்டும் என , தமிழக கோயில்களை காக்க வந்த காவலன் என்று தானே பட்டம் சூடிக்கொண்டு திரியும் மடையன் ஒருவன் வந்தான். எங்களை தமிழ் கலாசாரம் தெரியாத மூடர்கள் என்று வேசி படங்கள் எடுக்கும் முட்டாள்கள் என்று கூட்டத்தை கூட்டினான். வேறு வேலையே இல்லாமால் திரியும் கூட்டம், எங்கே வம்பு என்று அலையும் கூட்டம், உடனே சபை கூடியது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம் – நாங்கள் விஷயம் தெரிந்தவர்கள், மூலவரை படம் எடுக்க மாட்டோம், இவை வழிபாட்டில் இருக்கும் சிற்பங்கள் அல்ல. கலை வளர்க்கவே எங்கள் முயற்சி என்று முறையிட்டோம். எனினும் அந்த மூடன், அவனுடன் கூடிய பஞ்சாயத்து – செவிடர்கள் கூட்டமாக மாறியது. புகை படம் எடுக்க கட்டண சீட்டு பெற்றுள்ளோம், படம் எடுக்காதே என்று அறிவிப்பு பலகை எங்கும் இல்லை என்று வாதாடினோம். இடையில் சென்று அடுத்து இருந்த ரிஷப வாஹனத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த சிவனை படம் பிடித்தேன். பல்லவ சிற்பம் – அபாரம்.

கூட்டம் களை கட்டியது. ஆங்காங்கே சரித்திர காவலர்கள் அவதாரம் எடுத்தாற்போல கூச்சல் போட்டனர். மிகவும் வருத்ததுடன் எஞ்சி இருந்த ஒரு சிற்பத்தை படம் எடுக்காமல் திரும்பினோம்.
( நண்பர்கள் உதவியுடன் விரைவில் அந்த படத்தை பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது )

நல்ல காலம். சோமஸ்கந்தர் படம் அருமையாக வந்துள்ளது.

உள்ளே இரு புறம் பிரம்மா , மற்றும் விஷ்ணு

சிவன் மற்றும் உமை. உமை அமர்ந்திருக்கும் பாணி – நீங்களே முடிவு செய்யுங்கள்.

குழந்தை குமரன் – தனது கிரீடத்துடன்.

கண்டிப்பாக ராஜசிம்ஹ்ன் காலத்து சோமஸ்கந்தர் தான். இந்த சிற்பத்தில் ஒரு தனித்தன்மை – சிம்ஹாசனம் அடியில் பாருங்கள். மற்ற ராஜசிம்ஹ்ன் காலத்து சோமஸ்கந்தர் வடிவங்களில் வருவது போல பன்னீர் சொம்பு போல இல்லாமல் இங்கே ஒரு வாய் அகல பாத்திரம் போல உள்ளது.

ஆலயம் பற்றி மேலும் விவரம். மூவர் பாடல்கள்.

http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_103.htm
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru06_092.htm
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru07_081.htm

அவர்கள் பாடியது மேலே உள்ள ஆலயமா – கிழே உள்ள குடவறையா. அவர்கள் காலம் மகேந்திர பல்லவரின் காலம் என்றாலும் அவர்கள் அவனது குடைவரைகள் பற்றி ஒரு பாடல் கூட பாடவில்லை. மேலும் அப்பர் பாடலில்

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

என்று பாடுகிறார். அதனால் மேலே உள்ள ஆலயத்தையே அவர் பாடினார் என்று நாம் அறியலாம். அப்போது லாஜிக் கொஞ்சம் இடிக்கிறதே. மகேந்திரர் காலத்து மூவர் பாடிய கோயிலில் அவனுக்கு மூன்று தலைமுறைக்கு அடுத்து வந்த ராஜசிம்ஹ்ன் பாணியில் சிற்பங்களோ என்ற கேள்வி எழுகிறது ? இப்படி இருக்குமோ – அப்போது அது ஒரு செங்கல் / சுதை கொண்டு கட்டப்பட்ட ஆலயமாக இருந்திருக்கலாம், பின்னர் ராஜசிம்ஹ்ன் காலத்திலோ பின்னரோ மூன்று பெரும் பாறைகளை நிறுத்தி இப்போது உள்ள கோயிலின் கருவறை நிறுவப் பட்டிருக்கலாம் – இதுவே அதனுள் இருக்கும் பிற்காலத்து சோமாஸ்கந்தர் வடிவத்தின் விளக்கம் என்றும் திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் தன் நூலில் குறிப்பிடுகிறார்

அடுத்து வரும் பதிவுகளில் குடவரை கோயிலையும் அதில் உள்ளே கல்வெட்டை கொண்டு இதே கருத்தை எப்படி ஊர்ஜிதம் செய்வது என்பதையும் விரைவில் பார்ப்போம்.

பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம்

அகத்தியர் குழுவில் திரு ஜெயபாரதி ஐயா அவர்களின் பதிவு ஒன்றே இந்த பதிவின் கரு. அவரது விளக்கத்தை படித்துவிட்டு பலரும் குழம்பும் இந்த சிற்பத்தை பற்றி தெரிந்துக்கொண்டோம். இந்த சிற்பம் திருவிளையாடல் புராணத்தில் வரும் பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம் என்பதை அறிந்தோம். இந்த சிற்பத்தை பல இடங்களில் வராஹி என்று தவறாக அடையாளம் காண்கிறார்கள். அதனால் மதுரைக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் செல்லும்போது இந்த சிற்பங்களைத் தேடிச் சென்றோம். எனினும் அங்கு செல்லும் முன்னரே தற்செயலாக தில்லையில் புடைப்புச் சிற்பத்தில் இதைக் கண்டு மகிழ்ந்தோம்.

சிற்பத்தில் இடது புறத்தில் ( பார்க்கும்போது உங்கள் வலது புறம் ) – கை கூப்பி நிற்கும் பன்றி முகம் கொண்டு அடியவர்கள் மனதில் கொள்ளுங்கள். பிறகு ஏன் என்று புரியும்.

சரி, முதலில் கதை

இறைவன் அலகிலா விளையாட்டுடையன் என்று சொல்வர். அவனைப் பொறுத்தமட்டில் உயர்ந்த தேவராயினும், மானிட ஜன்மமும் ஆயினும் சரி, இழிந்த பன்றியாயினும் அனைவரும் சமமே.. அறுபத்து நான்கு திருவிளையாடல் புராணங்களில், பசியால் வாடிய பன்றிக்குக் குட்டிகளுக்கு முலை ஈந்து பால் கொடுத்த பேரருளை மாணிக்கவாசகர் முதற்கொண்டு அருளாளர்கள் வியந்து பாடுவர். திருவிளையாடல் புராணப் பாடல்களின் படி இந்தக் கதை எளிதாகச் சொல்லப்படுகிறது. சுகலன் எனும் வேளான் மதுரைக்கு அருகே இருக்கும் ஆதிமணிமாடமூதூர் எனும் ஊரிலே தன் கற்புடை மனைவியுடன் இறையன்போடு வாழ்ந்தாலும் அவர்களுக்குப் பிறந்த பன்னிரு புதல்வர்கள் தாய் தந்தையருக்கு நேர்மாறாக இருந்தனர். வேண்டாத செயல்களை பெற்றோர் வெறுக்கும் வண்ணம் செய்துகொண்டும் அவப்பெயர் பெற்றும் வளர்ந்தனர். அடிக்கடி கானகம் செல்வதும் வேடர்களோடு கண்டபடி வேட்டையாடியும் பொழுதைப் போக்கினர். அப்படிப்பட்ட சமயத்தில் காட்டில் ஒரு புதர் அருகே ஒரு முனிவர் தவம் செய்யும்போது, அவரைக் கேலி செய்து, கல்லால் அடித்தும், வேடர்களின் அம்பெய்தியும் துன்புறுத்தியதால், முனிவர் அந்த பன்னிருவரரயும் சபித்தார். நீங்கள் செய்யவேண்டிய உழவுத் தொழிலை விடுத்து வேடர்களின் அடாவடித் தொழிலில் கலந்து எம்மைத் துன்புறுத்தியதால் பன்றிகளாகப் பிறந்து குட்டிகளாய் இருக்கும்போதே தாய் தந்தையரை இழந்து அவதிப்படுவதாக சாபம் இட்டார். பிறகுதான் இவர்களுக்கு தாங்கள் செய்த பாவங்கள் உறைக்க, கண்ணீர் வடிய மன்னிப்பும் சாப விமோசனமும் கேட்க, கருணை வடிவமான அந்த முனிவர், உங்களுக்கு சாபவிமோசனம் ஈசனாலேயே அருளப்படும் என்று அன்போடு சொன்னார். சாபம் பெற்றவர்கள் அனைவரும் பன்றிக்கு மகவாகப் பிறக்கையில் காட்டில் வேட்டையாட வந்த பாண்டிய மன்னனால் பன்றிகள் அழிக்கப்பட, இந்த பன்றிக்குட்டிகள் ஏதும் ஆறியாமல் முலைப்பாலுக்காக ஏங்கித் தவிக்கும்போது, அகில உலகத்தையும் தாய் போல நேசிக்கும் ஈசன், தோன்றி முலைப்பலைக் கொடுத்து, அந்தப் பன்றிக்குட்டிகளுக்கும் முக்தி அருளினார் என்பதுதான் கதையின் சாரமாகும்.

திருவிளையாடல் புராணப்பாடல்

இருளைக் கந்தரத்தில் வைத்தோன் தன் இடத்து என்றும் அன்பின்
தெருளைத்தந்து அவட்கு மாறாத் தெரிவையை இசையால் வெல்ல
அருளைத் தந்து அளித்த வண்ணம் அறைந்தனம் தாயாய்ப் பன்றிக்
குருளைக்கு முலை தந்து ஆவி கொடுத்தவாறு

திருவாசகம் (போற்றித் திருவகவல்):

தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி
ஏனக் குருளைக் கருளினை போற்றி
(ஏனக்குருளை – பன்றிக்குட்டிகள்)

கதை தெரிந்த தைரியத்தில் சிற்பம் உள்ள தூணை தேடி அலைந்தோம். மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் இந்த தூண் உண்டு என்று தெரிந்து தேடினோம். உள்ளே இல்லை. ( சென்ற மடலில் படித்த சம்பவங்களுக்கு பிறகு நடந்தவை இவை ) அப்போது ஒருவர் புது மண்டபத்தில் சென்று பாருங்கள், அங்கே இருந்தால் இருக்கும் என்றார். எனினும் அங்கே இப்போது ( இரவு எட்டு மணி ) கடைகள் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கும். ஒன்றுமே தெரியாது என்றும் எச்சரித்தார். காலையில் கடைகள் திறப்பதற்கு முன்னால் வந்து விடுங்கள் – அப்போது காவலர் அனுமதித்தால் படம் நன்றாகவே எடுக்கலாம் என்றும் கூறினார். எனினும் ஆர்வம் தாங்காமல் உடனே சென்றோம்.

மிகவும் கடினம்தான். எங்கும் கடைகள் – கதவுகள். ஒன்றுமே தெரியவில்லை. ஒரு ஷாப்பிங் மால் போல இருந்தது சிற்ப வேலைப்பாடு மிக்க அந்த மண்டபம். எனினும் முடிவாக நாங்கள் நுழைந்த பக்கத்திற்கு நேர் எதிரே ஒருவழியாக தூணைக் கண்டுபிடித்து விட்டோம். அருகில் இருந்த கடைக் காரரை கொஞ்சம் தள்ளி இருக்க சொல்லிவிட்டு படங்களை எடுத்தோம். ( அடுத்த நாளும் விடியற் காலையில் திரும்பி தூணில் அடி பாகத்தில் இருத்த சிற்பங்களையும் படம் எடுத்தோம் )

இது சிவனா வராஹியா

கண்டிப்பாக சிவன் தான். வலது கரத்தில் மழு உள்ளது. இடது கரம் உடைந்துபோய் விட்டது.

தூணின் அடியில் உள்ள சிற்பங்கள் கதையை சொல்கின்றன . தாய் பன்றியை வேட்டை ஆடும் பாண்டிய மன்னன்.

பன்றிக் குட்டிகள் பாலுக்காக ஏங்கி நிற்கும் பாணி அருமை

ஈசனை வணங்கி நிற்கும் சாப விமோசனம் பெரும் முன்னர் பன்றிகள் ( நாற்காலிகள் அடுக்கி இருந்ததால் படம் சரியாக எடுக்க முடியவில்லை )

மதுரையில் கண்டதன் அடிப்படையில் நம்பிக்கையுடன் திருப்பரங்குன்றம் சென்றோம். அங்கே வாயிலிலேயே இருந்தது தூண் சிற்பம். அதே பாணி ( சரி, ஒரு வித்தியாசம் இருக்கும்) ஆனால் அடியில் வராஹி என்று பெயர் இட்டு உடல் முழுவதும் மஞ்சள் பூசி இருந்தது.

இன்னொரு படம், அப்படியே மதுரையில் பார்த்த சிற்பம் போல

இங்கும் பாலுக்கு ஏங்கும் பன்றிக் குட்டிகள்.

சிவன் தானே – ஆயுதங்கள். இங்கே மானும் இருக்கே.

ஒரு வித்தியாசம் என்று சொன்னேன் அல்லவா. இதோ. இங்கே பாண்டிய மன்னன் வேட்டையாடிய தாய் பன்றி இறந்து விழுவது செதுக்கப்ட்டுள்ளது .

அதே படத்தின் அடியில், பார்தீர்களா, அதே அணிவகுப்பு.

அதே படத்தின் அடியில், பாத்தீர்களா, அதே அணிவகுப்பு.

இதே தூண் சிற்பத்தின் துணை சிற்பம் இன்னும் ஒரு அற்புத திருவிளையாடல் புராணத்தை விளக்கியது. அதை அடுத்து பார்ப்போம்.

இதன் ஆதாரம் இப்படி இருக்க, ஈசனின் இந்த திருவிளையாடலை சரியாக பெயர் போடாத அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்..

நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே

இந்த டிசம்பர் மாதம் நாங்கள் பல அற்புத இடங்களுக்கு பயணம் செய்தோம் – பல புதிய தகவல்களை தெரிந்துக் கொண்டோம். அதைவிட மேலாக கற்றது கைமண் அளவு என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்துக்கொண்டோம். நல்லவை நிறைய இருக்க ஒரு நெருடலும் கண்களில் பட்டது. அதனால் அதை பற்றி எழுதுகிறேன்.

இதை ஒரு சிறு பிழை என்று பார்க்கலாம். எனினும் அது இருக்கும் இடம் சிறப்பான இடமாக இருப்பதால் அதை ஒரு நெருடல் எனவும் பெரும் தவறு என்றும் என் கண்ணில் படுகிறது. திருவிளையாடல் புராணத்தில் வருமே, தமிழுக்குச் சங்கம் அமைத்து, ஈசனையே நக்கீரர் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டு, பிறகு ஈசனால் மன்னிக்கப்பெற்ற இடமான பொற்றாமரை குளம் அருகேதான். பல்லாயிரக்கணக்கான தினமும் வந்து செல்லும் இடம். அவர்கள் கண்களில் அருங்காட்சியகம் என்று ஒன்றை அமைத்து அதில் இந்த தவறை தினமும் காட்டும் அவலம்.

முதலில், நாங்கள் மதுரைக்கு வரும் போதே மதியம் ஆகிவிட்டது ( நான், நண்பர் அர்விந்த் , என் அருமை மனைவி பிரியா, ஆசை மகன் பிரித்வி ) – அவசர அவசரமாக கோயில் திறக்கும் போதே சென்று படம் எடுக்க துவங்கினோம். அருமையான கோபுரங்களில் மதி மயங்கி நின்றோம். உதவியர் (கைட்) ஒருவர் வந்து உள்ளே சுற்றிக்காட்டுகிறேன் என்றார். எங்களுக்கு சிற்பங்களை தான் பார்க்க வேண்டும், அங்கே கொண்டு செல்லுங்கள் என்று தொடர்ந்தோம். மூன்று மணிநேரம் பறந்ததே தெரியவில்லை. அடுத்த நாள் காலை மீண்டும் வந்து விட்டு விட்ட கோபுரங்களை படம் எடுக்கலாம் என்று கிளம்பும் தருவாயில் – முது வலி, கை வலி இவைகளை தொந்தரவு கொடுத்தும்…அத்தனை படங்களையும் எடுத்துவிட்டோம். ( அதுவும் கூட கூட்ட நெரிசலில் – எப்படி தான் இவர்கள் சரியாக நாம் படம் எடுக்கும் தருவாயில் குபீர் என்று முன்னால் வந்து குதிப்பார்களோ.. தெரியாது)

ஏழு மணி அளவில், மூட்டை கட்ட துவங்கினோம் ( இட்லி கடை கூப்பிட்டது) – அப்போது தூண் சிற்பங்களை பார்க்கவில்லையே என்றேன். உதவியர் – சார், அது ஒண்ணும் பெருசா இல்லை. விடுங்கள் என்றார். ஆனால் மண்டபத்தின் வெளியில் கட்டண சீட்டு கூடம், வெளியில் காவலர் ஒருவர் கண்டு மனம் உள்ளே செல் என்றது. தூண் சிற்பங்கள் பரவாயில்லை நன்றாகவே இருந்தன. ஆனால், மண்டபத்தின் ஒரு கோடியில், ஒளிவிளக்கு போடாமல் இருட்டாக சற்று தூசியாக இருந்த பகுதிகளில், சிறு சிறு மேடைகள், அவற்றிற்கு மேலே புகை படிந்த கண்ணாடி கூடுகள் இருந்தன. சென்று பார்த்தால் அதிர்ச்சி. ஐம்பதுக்கும் மேலான வெண்கல சிலைகளின் பவனி. அப்போது காவலர் வந்து இன்னும் இருபது நிமிடத்தில் மூடப் போகிறேன் என்றார்.

விலை மதிப்பில்லாத சிலைகள், இப்படி சரியான விளக்கு கூட இல்லாமல் – கண்ணாடி உள்ளே வெளியே தூசு. சரியான படங்களே எடுக்க முடியவில்லை.

எனினும் முதல் அணிவகுப்பிலேயே அந்த சொதப்பல்.

நீங்களே பாருங்கள்.

முதல் படிமம் ந்ருத்தன சம்பந்தன் என்று அடையாளம் கொண்டதை கூர்ந்து பாருங்கள். ( # 70 – Nruthana Sambandan)

சம்பந்தர் சிலையின் தனித்தன்மை , மற்றும் அதை கண்ணனின் சிலைகளுடன் எவ்வாறு பிரித்து பார்ப்பது என்ற முந்தைய பதிவை படித்திருப்பீர்கள்.

சற்று அருகில் சென்று பார்ப்போம்.

தெளிவாக ஸ்ரீவத்சம் தெரிகிறது. எனினும் இதை சம்பந்தன் என்று பட்டியல் இட்டுள்ளனர். அதுவும் சங்கம் வளர்த்து தமிழ் போற்றிய மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில்.. கடைசியில் தருமி போல கூவவேண்டும் போல இருந்தது.. சொக்கா..

ஆலயம் செல்லும் பலருக்கும், அங்கே இருக்கும் உதவியருக்குமே இந்த பொக்கிஷங்கள் இருக்கும் அருங்காட்சியகம், அதுவும் பொற்றாமரைக் குளம் அருகேயே இருப்பது தெரியவில்லை. வாசிக்கும் எவரேனும் ஆலய அதிகாரிகளிடம் சென்று இந்த தவறை சரி செய்ய உதவி செய்யுங்கள்.

இன்னும் ஆயிரம் ஆண்டு காண எழுகிறது – உதவிய நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி

வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். மூன்று வார இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் உங்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. இந்த இடைவெளியில் பல அற்புத இடங்கள் சென்றோம், பல பிரமிக்க வைக்கும் படங்களை எடுத்தோம், நண்பர்கள் , ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் பலரை சந்தித்தோம்.

இந்த பதிவை துவங்கும் போதே இதை நடக்க செய்த வள்ளல்கள் அனைவரையும் வணங்கி துவங்குகிறோம். .

நீங்கள் இந்த பழைய பதிவை பார்த்திருப்பீர்கள், இல்லையெனில் ஒரு முறை பார்த்துவிட்டு தொடருங்கள். 2008 வருடம் ஜூன் மாதம் ஆலயச் சீரமைப்புக்கான இந்த சவாலை ‘ரீச்’ அமைப்பு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது.

ஆயிரம் ஆண்டு தவம்
அரக்க பறக்க எங்கள் பயணத்தில் முதல் இடமாக வேலை எவ்வாறு வந்துள்ளது என்று பள்ளி தேர்வு எழுதிய மாணவர்கள் போல ஆர்வத்துடன் – கொஞ்சம் பயத்துடன் ( ஏனெனில் பல இடங்களில் – இதை பற்றி கொஞ்சம் கூட சிற்ப அறிவோ, அதைத் தெரிந்து கொள்ளும் ஆற்றலோ இல்லாத ஞானசூனியங்கள் ஆலயச் சீரமைப்பு என்ற பெயரில் சுவரில் டைல்ஸ் ஒட்டி, சிற்பங்களுக்கு நீல வண்ணம் அப்பி ஏற்கனவே இருந்த அழகைச் சிதைக்கும் நவீன ‘மாலிக்காபூர்கள்’ செய்யும் அட்டகாசங்களை பார்த்து கலங்கி ) – இதை எப்படி சரியாகச் செய்ய வேண்டும், அதுவும் தனியார் – சாமானியர்கள் பங்கேற்று இந்த தொழிலில் தேர்ச்சி பெற்ற பெரியவர்கள் வழி நடத்த – ஒரு எடுத்துக்காட்டாக இது அமைய வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

நீங்களே பார்த்துவிட்டு எங்கள் பணியை மதிப்பீடு செய்யுங்கள்.

59045881

இன்னும் வருகிறது.

58845860

சுதை சிற்பங்கள் பாரம்பரிய முறையில் செப்பனிடப்பட்டுளன.

58875864

வேலைப்பாடு மிகுந்த விமானம் என்பதால் நமக்கு விருந்து.

58905867

உபயோகம் செய்யும் வண்ணங்கள் ( தஞ்சை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற புராதன முறையை தொடர்ந்துள்ளன ) கண்ணுக்கு குளிர்ச்சியாய்

58935869

பூத ரேகை

58965872

புராதன பாணி துளியும் மாறாமல்

58755899

எப்படியாவது செய்யவேண்டும் என்றில்லாமல் ‘இப்படி தான் செய்ய வேண்டும்’ என்று செய்துள்ள குழுவுக்கு பாராட்டுக்கள்.

59025878

நெஞ்சைக் கொள்ளை கொண்டது கைலாசநாதர் ஆலயம். நல்ல சகுனம், மேகம் கருத்தது, புறப்படும் வேலைவரை தூறல் போடாமல், வாகனத்தில் ஏறிய பிறகே பிளந்தது வானம். இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் காண தன் எழிலை மீண்டும் திரும்பப் பெற்ற விமானம் ஜொலித்தது. ஆஹா!!


இந்த பதிவு இத்துடன் முடியவில்லை. இன்னும் இங்கே சீரமைப்பு பணிகளின் பொது கிடைத்த அற்புத சிற்பங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

இந்த முயற்சி உங்களை இது போல இன்னும் பல முயற்சிகளுக்கு உதவ தூண்டும், அழிவின் விளிம்பில் இருக்கும் இது போன்ற கலை செல்வங்கள், நமது புராதன குல தனங்களை மீட்டுத்தரும் முயற்சியில் ரீச்சுக்கு இது ஒரு துவக்க கொடு – பயணம் தொடரும். நீங்களும் சேர்த்து வழிநடந்தால் வேகம் கூடும்.

( இந்த பதிவு மற்றும் மூன்று வார கால பயணத்தில் நான் எடுத்த படங்கள் அனைத்தும் எனது நண்பர் திரு தினேஷ் சுந்தரேசன் அவர்களின் அதி நவீன கேமரா கொண்டு எடுத்தவை . மிகவும் நல்ல உள்ளம் படைத்தவர், கேட்டவுடன் கேமரா மட்டும் தர மாட்டேன், அதனுடன் சேர்த்து அணைத்துவித உதவிக் கருவிகளையும் எடுத்து சென்றால் தான் தருவேன் என்று கூறி என்னை அசத்திய பெரிய மனம் படைத்தவர். டிசம்பர் 23rd அன்று மாலை ஒரு சாலை விபத்தில் எங்களை விட்டு பிரிந்த அவருக்கு இந்த பதிவின் மூலம் அஞ்சலி செலுத்துகிறேன்)

எல்லோரா கார்த்திகேயனின் ஆடுதலை சேவகர்கள்

எல்லோரா குடைவரைகள் சிற்பக்கலை ஆர்வலர்களுக்கு ஒரு புதையல். அது ஒரு குடைவரை என்பதனால் மட்டும் அல்ல அதில் உள்ள சிற்பங்களின் அழகு மற்றும் கலை நுணுக்கங்களும் தான். இன்று எல்லோரா குடைவரை 21 இல் இருந்து ஒரு அற்புத வடிவத்தை பார்க்கப்போகிறோம்.

அழகிய கார்த்திகேயனின் வடிவம் தான் அது.

படங்களுக்கு நன்றி:

http://www.elloracaves.org/search.php?cmd=search&words=&mode=normal&cave_name=21

அருமையான சிற்பம். சாமபங்கத்தில் கார்த்திகேயன், வலது கையை இடுப்பில் வைத்து ( இதற்கு கட்யவலம்பிதம் என்று பெயர் ) நிற்கும் கோலம்.

செதுக்கப்பட்டபோது நான்கு கைகளுடன் இருந்து சிலை, இப்போது காலத்தின் கோலத்தால் மிகவும் சிதைந்துள்ளது. வலது மேல் கரம் சுத்தமாக காணமுடியவில்லை. இடது மேல் கை, அவர் வாஹனமான மயிலை தடிவியவாறு உள்ளது. கீழே இருக்கும் இடது கையில் ஏதோ பாத்திரம் போல உள்ளது. பூணூல் அணிந்து, கழுத்தில் அணிகலன் பல, அழகிய கிரீடம் என்று ஜொலிக்கிறான் குமரன்.

மயிலும் காலத்தின் பசிக்கு தனது தலையை பறிகொடுத்துவிட்டது, ஆனால் அது மயில்தான் என்பது இறக்கை மூலம் தெளிவாக காட்டுகிறது. கால்கள் தான் கொஞ்சம் தடிமனாக உள்ளன ( முருகனை தூக்கி தூக்கி பலம் ஏறிவிட்டதோ?)

மேலே இரு புறமும் கந்தர்வர்கள். இடது பக்கம் ஆண் பெண் இருவருமே குமரனின் அழகை வியந்து வலது கையை விஸ்மயத்தில் வைத்துள்ளனர். வலது புறம், ஆண் கரம் கூப்பி அஞ்சலியில் உள்ளார். பெண்ணோ, கொஞ்சம் துணுக்காக அமர்திருக்கிறாள்.

இப்போது ஆடு தலைகளுக்கு வருவோம். இருவரும் யார்

குமாரனின் இடது புறத்தில் இருக்கும் ஆடுதலை கொண்ட உருவும், சற்றே நளினமாக தெரிகிறது. அதன் வலது கையில் மலரை கொண்ட முகர்ந்துக் கொண்டு இருக்கிறது. இடது கை இடுப்பில் ஒய்யாரமாக – அந்த தலை சற்றே சாய்ந்திருக்கும் பாணி, அனைத்தும் இது ஒரு பெண் என்று எனக்கு உணர்த்துகிறது – உங்களுக்கு ?

வலது புறம் இருப்பது ஆண். ஆனால் அவர் கைகள் வைத்திருக்கும் முறை புது விதமாக உள்ளது. வலது கை வணக்கம் சொல்ல இருந்தாலும், இடது கை மடக்கி உள்ளது. ( புரூஸ் லீ ‘குங் ஃபூ’ பாணியில் வணக்கம் சொல்வது போல உள்ளது)

இவர்கள் யார். குமரனின் கதைகளில் வரும் ஆடு தலை கொண்ட பெண் – அஜமுகி, சூரபத்மனின் தங்கை, கஸ்யப முனிவர்-மாயா வின் பெண்.

முழு கதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

http://indianmythologytales.blogspot.com/2009/04/tales-of-muruga-part-1.html

சரி, அந்த மற்றொருவர் யார்?. ஆடு தலை கொண்ட ஆண், தக்ஷன் மட்டும் தானே. அப்படியானால் இது தக்ஷனா ? அவனுக்கும் குமரனுக்கும் என்ன சம்மந்தம்?

இரண்டு வாரம் விடுமுறையில் நாளை முதல் செல்கிறேன். தில்லை, தஞ்சை, சீராப்பள்ளி, மதுரை, கோவை என்று பெரிய பயணம் முடிக்க ஆசை – பல அற்புத சிற்பங்களை உங்களுக்கு பரிசாகக் கொண்ட வர திட்டமிட்டுள்ளேன். அதுவரை , வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தோடுடைய செவியன்

சிற்பக்கலையின் அழகு அதன் தோற்றத்திலும் அதனுள் இருக்கும் நுணுக்கங்களினாலுமே மேலும் மெருகு பெரும். திடீரென பார்ப்போருக்கு அதன் தோற்றம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் , எனினும் அது முழுமையான ரசனை அன்று.

மகரிஷி அரவிந்தர் அவர்கள் கலையழகைப் பற்றியும் ரசனையைப் பற்றியும் வெகு அழகாக சொல்லி இருக்கிறார்.

அழகான பண்பாட்டுச் சின்னமாக காணப்படும் கலையழகு என்பது சாதாரணமானதன்று. ஏதோ சுற்றுலா பயணிகள் ஓஹோ என்று போற்றுவதற்காகவோ அல்லது கலையறிவில்லாதோர் தூற்றுவதற்காகவோ படைக்கப்பட்டதன்று. இந்த படைப்பின் கலை ஆழத்தைப் புரிந்து கொள்ள முயலவேண்டும் தனிமையில் அந்தக் கலையழகின் ரகசியத்தை நாம் உணாந்து ரசிக்கவேண்டும். அந்த அழகுடன் நம் மனதை ஒன்றிவிட்டு பார்க்கவேண்டும். மனது ஒன்றிய நிலையில், மனம் தியானத்தின் உச்சத்தில் அந்த அழகின் ரகசியம் புலப்படும்போதுதான் மனிதனின் இயற்கை நிலையும், உலகாயுதமாக மாறிவிட்ட இன்றைய வாழ்க்கை சூழலும் புரியும்

இதில் பிரச்னை என்னவென்றால் காளிதாசனை போன்று ஒரே நாளில் இந்த திறமை வந்துவிடாது. முறையே பயிலவேண்டும். நல்ல ஆசான் தேவை. இன்றோ அப்படிப்பட்ட ஆசான்கள் மிகவும் குறைவு. அப்படி இருக்கையில் அடுத்த படியாக நல்ல நூல்கள் நமக்கு கை கொடுக்கலாம். எனினும் சிற்ப ஆராய்ச்சி வல்லுனர்கள் நம்மை போன்று முதல் முறை சிற்பம் பற்றி படிப்போரை குறி வைத்து நூல்கள் எழுதுவதில்லை. பல புத்தகங்கள், குறைந்த பட்சம் கொஞ்சம் சிற்பக்கலை தெரிந்தவருக்கே சிறிது கடினமாகத்தான் உள்ளன குறிப்பாக அதில் வரும் சிற்பக்கலையை ஒட்டிய சொற்கள் அத்தனை எளியவை அல்ல. நாம் இருக்கும் சாதாரண நிலையில் இந்த புத்தகங்களை எடுத்து படிக்கும் அளவிற்கு எப்படி செல்வது?

இதற்கு ஒரு சில நூல்கள் உள்ளன. ஆங்கிலத்தில் திரு கோபிநாத் ராவ் எழுதிய எலிமென்ட்ஸ் ஆஃப் ஹிந்து ஐகானோகிராபி, என்ற அருமையான புத்தகம் உதவுகிறது. பலதரப்பட்ட சிற்பங்களை விவரித்து உடன் ( நமக்கு மிகவும் உதவியாக ) கோட்டோவியங்களை கொண்டு விளக்குகிறார். உதாரணத்திற்கு காதணிகளை எடுத்துக்கொள்வோம். ‘மகர’ குண்டலம் ‘பத்ர’ குண்டலம் போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே தலை சுற்றுகிறது. எந்த சிற்பக்கலை பற்றிய புத்தகத்தை எடுத்தாலும் முதலில் வருவது இந்த குண்டலங்கள் தான். இவை என்ன?

தில்லி அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த அற்புத நடராஜர் வடிவத்தை பார்ப்போம்.

கூத்தபிரானின் ஆனந்த தாண்டவம் பற்றி தொடர்ந்து எழுதினால் இந்த இழை முடியாது. அதனால் அவனது தோடுகளை மற்றும் பார்ப்போம். தோடுடைய செவியன் ஆயிற்றே அவன்.

இரு காதுகளிலும் வெவ்வேறு அணிகளின் அணிந்திருப்பதை நீங்கள் இப்போது பார்க்கலாம்.

அவனது இடது காதில் வட்டமாக இருப்பது பத்ர குண்டலம். பனை ஓலை குண்டலம் – அந்த காலத்தில் அவ்வளவு தான் – ஒரு பனை மரத்து ஓலை ( இலை) இருந்தால் போதும் ( தங்கம் விலை என்னவோ ?)

வலது காதில் இருப்பது கொஞ்சம் கடினமான வடிவுடைய குண்டலம். மகர குண்டலம். நாம் முன்னரே இந்த மகரத்தை பார்த்தோம், எனினும் இன்று ஜாவா தீவில் ஒரு அற்புத மகர வடிவம் மீண்டும் பாருங்கள்..


( மகரம் – யானையின் தும்பிக்கை, சிங்கத்தின் கால்கள், மேலும் பன்றி, மீன், குரங்கு என்று பல மிருகங்களை உட்கொண்ட ஒரு புராண மிருகம். அழகிய வேலைப்பாடுடைய வால் இதற்கு)

இதை அவன் ஏன் தனது காதில் அணிந்தான் ( அதை பற்றி மேலும் தேட வேண்டும் – அப்படி பார்த்தல் இன்னும் வினோதமான காதணிகளும் உண்டு. அவற்றை பின்னர் பார்ப்போம் ) இப்போது மகர குண்டலம் இதோ .

அப்பாடா – இரு சின்ன காதணிக்கே இப்படிக் கண்ணை கட்டுதே

வாயிற்காப்போனை சூரையாடிய சோழன்.

அரசர்கள் போர் புரிவது என்பதே சர்ச்சைக்குரிய விஷயம். அதிலும் ஒரு நாட்டை வென்று அங்கிருந்து பல பொக்கிஷங்களை சூறையாடி வருவது என்பது இன்னும் பிரச்சினைக்குரியது. எனினும் நம் வரலாற்றில் இதை பல முறை பார்த்திருக்கிறோம். வாதாபி வெற்றியின் போது நரஸிம்ஹ பல்லவரின் படைத் தளபதி பரஞ்சோதி கொண்டு வந்த வாதாபி கணபதி, ஸ்ரீவிஜயத்தை வென்று ராஜேந்திர சோழன் கொண்டு வந்த விஜய தோரணம், இதே வரிசையில் இன்று நாம் பார்க்கும் போர் பரிசு (தாரசுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு) தற்சமயம் தஞ்சை கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சாளுக்ய வாயிற் காப்போன். (படங்களுக்கு நன்றி சதீஷ் மற்றும் ஸ்ரீராம் )

அருமையான வேலைப்பாடு கொண்ட சிற்பம். எனினும் இதை ஏன் சோழன் வெற்றிப் பரிசாக கொண்டு வர வேண்டும். அதை எப்படி எப்பொழுது அதன் பீடத்திலேயே செதுக்கியும் வைத்தான்!

இராஜேந்திர சோழனின் மைந்தன் இராஜாதிராஜன் மேலைச் சாளுக்கியர் தலைநகரான கல்யாணியை வென்றான். அப்பொழுது அங்கிருந்து ஒரு சாளுக்கிய துவாரபாலகர் சிலையை கொண்டுவந்தான். அதன் அடியில் “உடையார் விஜயராஜேந்திர சோழர் கல்யாணபுரம் எரித்துக் கொண்டு வந்த துவாரபாலகர்” என்று எழுதியுள்ளது.

சரி, அருமையான சாளுக்ய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பத்தை முதலில் பார்ப்போம்.

வெறும் கதை பேசிக்கொண்டு நிற்காமல், சுவாரசியமான தகவல்களுக்கு வருவோம். சிற்பத்தின் அடிப்பாகத்தில் செதுக்கப்பட்டிருக்கும் சில உருவங்களை கவனிக்கவும்!

மேலே இருப்பது உடும்பு, வாயிற் காப்போனின் காலுக்கு அடியில் இருப்பது என்ன சுண்டெலியா? அதை அடுத்து ( இடது புறத்தில்) வால் மாதிரி இருக்கிறதே – அது என்ன? வலப் பக்கம் இருக்கும் மிருகம் என்ன வகை?

கீழுள்ள படங்களை ஊன்றிக் கவனிக்கவும்.

இந்த படங்களுக்கு நன்றி
http://picasaweb.google.com/gildubs/IndeDuSud2008#

ஆஹா! ஒரு சுண்டெலியை பிடித்து விளையாடும் பூனை. அதற்கு எதிரில்??


அடடே…! இங்கே பாம்பு ஒன்று எலியை விழுங்குவதைப் போலல்லவா வடிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்ததும் நமக்கு வேறு ஒரு வாயிற்காப்போன் சிலை நினைவுக்கு வருகிறதல்லவா?
தஞ்சை பெரிய கோயில் வாயிற்காப்போன்

ஆம், அது தஞ்சை பெரிய கோயில் வாயிற்காப்போன்தான், நீங்களே பாருங்கள்.

இன்னும் அருகில் சென்று பார்த்தால்!

இராஜராஜசோழன், அப்பர் பெருமானின் பாட்டிற்கிணங்க பெரிய கோயில் விமானத்தை தக்ஷின மேரு என்று கைலாயத்தை ஒப்பிடும் நோக்கத்துடன் பிரம்மாண்டமான சிங்கம், அதை ஒட்டி யானையையே விழுங்கும் பாம்பு, முதலை அல்லது இராட்சத பல்லி ஆகியவற்றை அற்புதமாக வடித்து வைத்தான்.

இந்த வடிவத்தோடு சாளுக்ய சிற்பத்தை பொருத்திப் பார்த்தால் சாளுக்கியன் ஏதோ நையாண்டிக்காக அந்தச் சிலையை வடித்தது போலல்லவா உள்ளது! மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடல்லவா! ஒரு வேளை இதனால் தான் சோழன் இந்த வாயிற்காப்போனை சூரையாடி வந்தானோ?

மல்லை திருமூர்த்தி குடவரை – ஒரு புதிர்

நண்பருடன் ஒரு மின் அரட்டை ( இதை பதிவாக இடுவதற்கு அனுமதி கொடுத்ததற்கு அவருக்கு முதல் நன்றி – பெரும்பாலும் உரையாடலை அப்படியே இடுகிறேன் – சில இடங்களில் சிறிய மாற்றங்கள் – அழகு படுத்த )

N: வணக்கம் விஜய், நேற்று மல்லை சென்றேன்

Me: மிக்க மகிழ்ச்சி, இப்போது உங்கள் படங்களை தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எங்கள் தளத்தை குறிப்பிட்டதற்கு நன்றி.

N: படங்களுக்கு உங்கள் பின்னூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

me: கண்டிப்பாக. சரி, நீங்கள் திருமூர்த்தி குடவரை படங்களை இட்டதனால் அதை ஒட்டி ஒரு புதிரை போடுகிறேன் . விடை சொல்லுங்கள், அங்கே உள்ள மூன்று மூர்த்திகளை யார் யார் என்று அடையாளம் கண்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.

N: பிரம்மா விஷ்ணு சிவன்

me: ஹஹஅஹா , நல்ல பாத்து சொல்லுங்க சார் , அவ்வளவு எளிதாக இருந்தால் புதிர் என்று சொல்லி இருப்பேனா?

N: ஹ்ம்ம்

me: சரி , பல்லவ குடைவரைகளில் உள்ளே இருக்கும் கடவுளை எப்படி அடையாளம் கொள்வீர்கள். இரண்டு முறை உண்டு, பொதுவாக உள்ளே சிலை / சிற்பம் இருந்தால் அதை ஆய்வு செய்து, அதன் அமைப்பு, கைகளில் உள்ள ஆயுதங்கள் என்று பார்ப்போம், உள்ளே சிற்பம் இல்லை என்றால் வெளியில் நிற்கும் வாயிற் காப்போன்களை கொண்டும் ஓரளவிற்கு அடையாளம் கொள்ளலாம். இங்கே உங்களுக்கு எதுவாக இரண்டுமே உள்ளன. நன்றாக பார்த்து சொல்லுங்கள்.

N: போட்டியில் நண்பனை கேட்டு பதில் சொல்வது போல இங்கே உண்டா ? நீங்களே சொல்லுங்கள்

Me: இல்லை, அப்படி எளிதானதல்ல. நீங்கள் சற்று முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் முக்கியம். பின்னாள்களில் இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

N: சரி, நடுவில் இருப்பது சிவன். வலது கையில் மழு உள்ளது லிங்கம் வேறு இருக்கே.

me: ஆமாம், இடது கையில் இருப்பது ருத்ராட்ச மாலை மாதிரி உள்ளது – மான் கண்டிப்பாக இல்லை. எனினும் அந்த லிங்கம் பின்னாளில் வைக்கப்பட்டது.

N: வெளியிலிருப்பது மகிஷாசுரமர்த்தினி
i

me: ஆமாம் , துர்க்கை அம்மன். மேலே அருமையான வேலைபாட்டை மறக்காமல் பார்க்க வேண்டும்.

N: வலது புறம் நீண்ட மகுடம் கொண்டது விஷ்ணு . கையில் சங்கு சக்கரம் உள்ளதே. அடுத்து இருப்பது பிரம்மா


me: ஹ்ம்ம் , விஷ்ணு எளிது – சங்கு சக்கரம் உள்ளதே. அது சரி, எப்படி பிரம்மா என்று அடையாளம் கண்டுகொண்டீர்?.


N: மும்மூர்திகள் தானே. பிரம்மா வந்தால் தானே முழுமை பெரும். அது தானே வழக்கம்.

me: ஹஹா , மலை புதிர் இப்போது தான் வருகிறது. பிரம்மனின் சிற்பங்களில் நீங்கள் முதலில் பார்ப்பது என்ன. தனிதன்மையை தெரிவது ஏது?

N: மூன்று தலைகள்

me: நான்முகன் என்றாலும் சிற்பத்தில் மூன்று தலைகள் – இங்கே தெரிகின்றதா ?

N: இல்லை

me: வெளியில் இருக்கும் வலது புற வாயிற் காவலன், தனது கையில் எதை வைத்துள்ளான்.

N: சரியாக தெரியவில்லையே

me: சரி, உள்ளே இருக்கும் சிற்பத்தின் ஆடை அணிகலனில் எதாவது சிறப்பாக தெரிகிறதா. புதுமையாக ?

N: X வடிவத்தில் பட்டை

me: பிரம்மன் சிலையில் இது போன்று வேறெங்கும் நீங்கள் கண்டதுண்டா?

N:இல்லையே

me: மகுடம் எப்படி உள்ளது

N: நீண்டு முக்கோண வடிவில் உள்ளது

me: மகுடத்தின் அடியில் என்ன உள்ளது ? இந்த உரையாடலை அப்படியே பதிவாக போடட்டுமா

N: ஆமாம் அதன் சிறப்பு என்ன, சொல்லுங்க விஜய்

me:இதை பதிவாக போடட்டுமா ?

N: தாரளமாக போடுங்கள், என் பெயரை போடவேண்டாம்.

me: N, என்று போட்டால் பெயர் தெரியாது அல்லவா?

N: அப்படியே, எனக்கு கூடுதல் புகழ் வேண்டாம்.

me: ஹஹா , அப்போது சரி. வலது புறம் ‘இருக்கு ரிஷி’ – ஸ்ருக் என்ற ஒரு வித கரண்டியை பிடித்துள்ளார். வேத அக்னி குண்டத்தில் நெய்யை ஊற்ற பயன்படும். இடது புறத்து காவலன் ஒரு மலரை பிடித்துள்ளார். இதனால் நீங்கள் பிரம்மன் என்ற முதற் கோட்பாடு சரி என்றே தோன்றும். ஆனால் உள்ளே இருக்கும் கடவுளுக்கு தாடியும் இல்லை மீசையும் இல்லை. இளவட்டமாகவே உள்ளார்.

N: ஆமாம், யார் அது , சொல்லுங்கள்

me: அவர் அணிதிருக்கும் மகுடம் , நீங்கள் பார்க்கும் x பட்டை – இவை அனைத்தும் ஒரு போர்வீரனின் சின்னங்கள். பிரம்மனுக்கே வேதத்தை எடுத்துச் சொன்ன போர் வீரன்.

N:முருகன்

me: ஆமாம் முருகன் – பிரம்ம சாஸ்தா என்றழைக்கப்படும் தோற்றம். அது சரி, மேலே பறக்கும் அந்த இரு பூத கணங்களின் கைகளில் என்ன உள்ளது என்று நன்றாக பார்த்து சொல்லுங்கள் பார்ப்போம்.

N: அப்படி என்றால்?

Me: இதில் எனக்கு அவ்வளவு தேர்ச்சி இல்லை. இந்த ஆய்வாளர் பதிவை பாருங்கள்

முருகன் ஆராய்ச்சி மடல் – படங்கள் மற்றும் குறிப்பு இந்த தலத்தில் இருந்து

“இந்த சிற்பம் சிறிய முக்கோண வடிவில் கரண்ட மகுடம் அணிந்து, அதன் அடியில் மலர்களாலான ( கன்னி ) அலங்காரம் உள்ளது. தமிழ் வழக்கில் ஒரு வீரனுக்கே உரித்தான அங்கீகாரம் இந்த கன்னி. மேலும் இந்த x வடிவில் ஆன பட்டைக்கு பெயர் சன்னவீரா – இதுவும் வீரனின் அடையாளம். பல்லவர் காலத்து குறிப்புகள் இவை அனைத்தும் முருகன் ஒரு போர்/வெற்றிக் கடவுள் அதாவது தேவ சேனாதிபதி என்பதை நிலை நாட்டுகின்றன. . “

மேலே உள்ள தளம் முருகன் பற்றிya அருமையான பல தகவல்களை konda தளம். கண்டிப்பாக அங்கு சென்று வாசிக்கவும்.