தஞ்சை பெரிய கோயில் அகழி அழகிகள் – கண்டுபிடித்துவிட்டோம்

இது ஒரு மகிழ்ச்சியான பதிவு. தொலைந்து விட்டது என்றும் மீண்டும் கிடைக்கவே வழில்லை என்ற நிலையில் தஞ்சை பெரிய கோயில் அகழியில் இருந்த இரு சிற்பங்களை பற்றிய முந்தைய பதிவை பதிவு செய்தேன்.

ஆனால் நண்பர் திரு செல்வராஜ் அவர்கள், நான் நாற்பது வருடங்களுக்கு முன்னர் அங்கே விளையாடும் பொது பார்த்துள்ளேன், இன்றும் இருக்கும், விரைவில் படம் எடுத்து அனுப்புகிறேன் என்றதும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. எனினும் அவை கிடைக்குமோ – எந்த நிலையில் இருக்கும் என்றெல்லாம் பல கேள்விகள் மனதில் இருந்தன. உடனே செல்லமுடியாமல் விடாது மழை வேறு. ஆனால் இன்று இன்ப அதிர்ச்சி – நீங்களே பாருங்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த படங்களில் இருந்தபடியே இன்றும் நிற்கின்றன இரு சிற்பங்களும். பார்க்கும் பொது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

பிற்கால பல்லவ வாயிற்காப்போன் -காஞ்சி மாதங்கேசுவரர் ஆலயம்

வாயிற்காப்போன் தொடரில் இன்று மேலும் பயணிக்கிறோம். காஞ்சிபுரத்தில் நவீன கட்டுமானங்களுக்கு நடுவில் மறைந்துக் கிடக்கும் ஒரு பொக்கிஷம். நண்பர் திரு அர்விந்த் மிகவும் தேடி கண்டுபிடித்து நமக்காக படங்களை கொடுத்து உதவுகிறார். அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. மாதங்கேசுவரர் ஆலயம் ( அதன் உடன்பிறப்பு முக்தேஷ்வரா ஆலயத்தையும் விரைவில் காண்போம் )

இந்த ஆலயத்தின் காலம் சரியாக தெரியவில்லை , அதை பற்றி நாம் முக்தேஷ்வரா படங்களையும் பார்த்துவிட்டு அலசுவோம்.
இப்போதைக்கு CE 700 – 800 – இரண்டாம் நந்திவர்மன் காலம் என வைத்துக்கொள்வோம். மிகவும் சுவாரசீயமான காலம் – அரசனின் அரியணை ஏறுவது முதலே பல சம்பவங்கள், நடுவில் சாளுக்கியரிடம் தோற்றல், அக்யாதவாசம், மீண்டும் அரியணை ஏறல் – பின்னர் முடிவில் தனது பேரில் ஒரு கலம்பகம் !!

வேறு எங்கோ போகிறது பதிவு, மீண்டும் சிற்பத்துக்கு வருவோம்.

சிங்க தூண்கள் மறைக்கின்றனவே . சரி இன்னும் அருகில் செல்வோம். .

கொஞ்சம் கொடூரமாக தான் இருக்காங்க. இதுவரைக்கும் ஆஜானபாகுவாக இருந்தாலும் ஒரு நக்கல் பார்வை தான் இருந்தது.நீங்களே பாருங்களேன் – முற்கால பல்லவ வாயிற்காப்போன்களை ஒப்பிட்டு பார்ப்போம்.

மண்டகப்பட்டு

சீயமங்கலம்

தளவானூர்

இன்னும் உன்னிப்பாக மாதங்கேசுவரர் ஆலயம் வாயிற்காப்போன்களை பார்ப்போம்.

இடது புறம்

இங்கே கொம்பு போல தான் உள்ளன ( சூல வடிவத்தின் நடு கம்பி கண்ணுக்கு தெரியவில்லை )

வலது புறம்

இங்கே ஒரு மாற்றம் காண்கிறோமா? மழு முன்னர் செங்குத்தாக நெடுக்க இருந்தது – எங்கோ மாறி குறுக்காக உள்ளதே?. இது மழு தானா?

முக்கியமான வேறுபாடு -இருவருக்கும் மேலும் இரண்டு கைகள் -மொத்தம் நான்கு கைகள்.
இப்போது தான் கடினமான புதிர் வருகிறது. சாளுக்கிய இரண்டாம் விக்ரமாதித்யன் காஞ்சியை 745 இல் வென்றான், கைலாசநாதர் ஆலயத்தை கண்டு பிரமிப்பு அடைந்து, அதன் சிற்பிகளை கையேடு கூட்டிச்சென்று பட்டடக்கல் ஆலயங்கள் அமைத்தான். சூலம் அல்லது கொம்பு உள்ள வாயிற்காப்போன்கள் பல்லவர் சிற்பங்களில் முன்னவே இருந்தன. ஆனால் இந்த கூடுதல் கைகள் யாரால் ஏற்பட்ட மாற்றம். அதற்கு நாம் இதே காலத்தை ஒட்டிய காஞ்சி வைகுந்த பெருமாள் ஆலயத்தை ஒப்பிட வேண்டும். செய்வோமா?

பட்டடக்கல் – சாளுக்கிய வாயிற்காப்போன்

வாயிற்காப்போன்களை இந்நாளிலேயே எவரும் மதிப்பதில்லை. முடிந்தால் அவர்களை சிலையாக நிற்க வைத்து ஏளனம் செய்கிறார்கள். அப்படி இருக்க, ஆலயங்களில் உள்ள சிற்ப வாயிற்காப்போன்களின் கதி – அதோகதி தான். நானும் நண்பர்கள் சிலர் மட்டுமே இவைகளை பற்றி பேசுவது உண்டு என்று நினைத்தபோது ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இன்னொரு புத்தகத்தின் பெயரை பார்த்தேன் THE CULT OF WEAPONS. THE ICONOGRAPHY OF AYUDHA PURUSHAS, by Sri. V. R Mani.

வாயிற்காப்போன்களை பற்றி நிறைய பதிவுகள் இடவேண்டும் என்று ஆசை வெகுநாட்களாக இருந்தது. அதனால் உடனே வாங்கிவிட்டோம் ( நண்பர் சதீஷ் மற்றும் அர்விந்த்) – இணையத்தில் வாங்கியதால் புத்தகம் பார்த்தவுடன் ஒரு சிறு வருத்தம். மொத்தமே நாற்பத்து ஐந்து பக்கங்கள் தான் இருந்தது – சிறு புத்தகம். எனினும் அளவில் சிறியது என்றாலும் எடுத்தாண்டுள்ள சிற்பங்களும் முறையும் நன்றாக இருந்தது.
படிக்கும் போதே சட்டேன்று கண்ணில் பட்டது ஒரு சிற்பம். பட்டடக்கல் சாளுக்கிய வாயிற்காப்போன். முன்னர் நாம் திரு கிபிட் சிரோமனி அவர்களின் பதிவை ஒட்டிய பல்லவர் கால திரிசூலநாதர் வடிவங்களை பார்த்த போது – அந்த வடிவங்கள் கொம்புடைய வாயிற்காப்போன்களா என்ற வாதம் தொடர்ந்தது. ஆனால் இந்த சிற்பத்தில் சந்தேகத்திற்கு இடமே இல்லை. ( படத்திற்கு நன்றி தோழி காதி )

மிகவும் அருமையாக ஒரு காலை மடக்கி, தனது (G)கதையின் மேல் பாரத்தை வைத்து ஒய்யாரமாக சாய்ந்து நிற்கும் அழகு, அந்த கதையை சுற்றி இருக்கும் படம் எடுக்கும் பாம்பு – எல்லாம் மிக அருமை.

சற்று அருகில் சென்று தலை அலங்காரத்தை பார்ப்போம்.

நான்கு கைகளை கொண்ட சிற்பம் ( முற்கால பல்லவ வாயிற்காப்போன் சிற்பங்கள் இரு கைகளுடன் மட்டுமே உள்ளன – அதன் பின்னரே மேலும் இரண்டு கைகள் வருகின்றன – இதை ஒட்டி ஒரு பதிவு போட வேண்டும் – திரு அர்விந்த் அவர்களின் காஞ்சி படங்கள் !) – இந்த சிற்பத்தில் மேல் வலது கரத்தில் என்ன உள்ளது என்று சரியாக தெரியவில்லை. இடது மேல் கரத்தில் தன்னையே ( சூலத்தையே ) பிடித்துள்ளார். மற்ற இரண்டு கைகளில் என்ன ஒரு ஸ்டைல் ( கை முத்திரைகள் பற்றியும் விரிவாக ஒரு பதிவு போட வேண்டும் )

சரி, நமக்கு வேண்டியதை பார்ப்போம்.அவரது விசித்திர தலை ஆபரணம் . ஆம் கண்டிப்பாக சூலம் தான்.

ஆனால் இதை பற்றி அந்த புத்தகத்தில் வரும் குறிப்பு சரியா ? நாம் விவாதிக்க வேண்டும்

” இடது மேல்புறக் கையருகே திரிசூலத்தை வைத்துக்கொண்டு, தலையில் சூலத்தை வைத்து இவர் தான் திரிசூலபுருஷன் அல்லது திரிசூலநாதன் என்று நாம் தெளிவாக கூற முடிகிறது. இந்த தனிப்பட்ட பாணி வாயிற்காப்போன் சிலைக்கு சாளுக்கியரின் தனித்தன்மை என்று கூற முடியும்.இதற்கு பின்னரே சலுக்யர் மற்றும் தெற்கு பகுதிகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு மேலும் மெருகு அடைகிறது “

இது சரியான கருத்தா? இந்த புத்தகத்தில் பொதுவாக முற்கால பல்லவர் சிலைகளை ஆய்வு செய்ய படவில்லை. பட்டடக்கள் இரண்டாம் விக்ரமாதித்யன் பல்லவர் மீது அடைந்த வெற்றியை கொண்டாடவே கட்டப்பட்டது. அதிலும் அந்த வெற்றியின் பொது ( ( CE 732 – 742 ), அவன் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தின் கலை திறனை கண்டு மிகவும் கவரப்பட்டு ( அதை ஒன்றும் செய்யாமல் சிதைக்காமல் ) அதை போலவே பட்டடக்கல் ஆலயங்களை அவனும் அவனது ராணிகளும் அமைத்தனர். இதன் அடிப்படையில், நாம் ஏற்கனவே பதித்த முற்கால பல்லவ சிற்பங்கள் ( இரண்டு கைகளுடன் சூலநாதர் ) , வைத்துப் பார்க்கும் பொது ஒரு வேலை இதே சிற்பிகளை தான் சாளுக்கிய மன்னன் எடுத்துச் சென்று அங்கே உபயோகித்தானோ என்ற கேள்வி மிக பலமாக எழுகிறது.

உங்கள் கருத்து என்ன. ?

தஞ்சை பெரிய கோயில் அகழி

சமீபத்திய நாளேட்டில் தொல்லியல் துறை ஒரு கோடி ருபாய் செலவில் தஞ்சை பெரிய கோயில் அகழியை செப்பனிடப் போகிறது என்ற செய்தி வாசித்து மகிழ்ந்தேன் செய்தி.உடனே நினைவு சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் கருவூலத்தில் உள்ள சில மிக அரிய புகைப்படங்களைப் பார்வையிட்டதும். அதிலும் குறிப்பிடும் படியாக ஒரு படமும்!!!

இந்த படங்கள் ஆர்வலர்களுக்கு ஒரு புதையல். இப்போது அகழியை செப்பனிடுவது பற்றி பேச்சு இருப்பதால் அந்த நாளில் அது எப்படி இருந்தது என்ற பாருங்கள். ( அகழியில் நீர் இருந்தாலும் ஆலயத்தின் நிலைமை கொஞ்சம் மோசம் தான்!! )

1800 மற்றும் 1900 இல எடுத்த படங்கள் . ( நன்றி பிரிட்டிஷ் லைப்ரரி )

என்னடா வெறுமனே பழைய புகைபடங்களை கொண்டு ஒரு பதிவை இட்டு ஒப்பேத்துகிறானே என்று எண்ணுகிறீர்களோ?. பொறுமை!. இதோ வருகிறது சுவாரசியமான படம் ஒன்று…

ஆண்டு 1921, சரியாக சொல்ல வேண்டும் என்றால். ஏப்ரல் மாதாம் இரண்டாம் தேதி. திரு எ வில்பூர் சாயர் எடுத்த படம்.

உற்று பாருங்கள். அகழியின் சுவரில் ஒரு சிற்பம் உள்ளதே – தெரிகிறதா ?

இது என்ன சிற்பம்? அது இப்போது எங்கே போனது? யாரிடம் கேட்பது.. யார் பதில் சொல்வார்கள்?

ரோடா மிக திறமையாக இன்னும் ஒரு சிற்பத்தை படத்தில் கண்டுபிடித்துள்ளார்

குழப்பும் சிற்பங்கள் – நண்பருடன் ஒரு உரையாடல் – பாகம் இரண்டு

சென்ற மடலின் தாக்கம் அப்பப்பா , கார சார விவாதம் நடைபெறுகிறது. அதன் இரண்டாம் பாகம். மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்கு உரிய சிற்பத்தை பார்ப்போமே.

இது ஹனுமான் பாண லிங்கத்தை கொண்டு வந்ததை குறிக்கிறதா?.

ஆம் என்பதற்கு

ராமேஸ்வரம் தல புராணம், சிற்பத்தின் முக தோற்றங்கள்.

இல்லை என்பதற்கு

ஹனுமனின் வால் எங்கே , அருகில் இருக்கும் இரு மாந்தர்கள் யார், சங்கு மற்றும் சக்கரம் எதற்கு ( இதை விளக்க சீனு அவர்களது நல்ல வாதங்கள் )

சரி, இது வேறென்ன சிற்பமாக இருக்கலாம்.

மச்ச அவதாரமாக இருக்குமோ

ஆனால் அங்கேயே மச்ச அவதார சிற்பமும் உள்ளதே.


இதை பற்றயும் நாம் விவாதம் செய்தோம், முடிவில் சிற்பத்தின் கண்களை கொண்டு இந்த சிற்பம் மச்ச அவதாரம் என்ற முறையில் எடுத்துக்கொண்டோம்.

மீண்டும் ஒருமுறை அருகில் சென்று அதையும் பார்ப்போம் ( நன்றி அர்விந்த் )

இந்த சிற்பத்தையும் முந்தைய சிற்பத்யும் ஒப்பிடுபோது இரண்டும் கண்டிப்பாக ஒரே உருவம் இல்லை என்று தான் கூறவேண்டும்

வராஹ அவதாரமாக இருக்குமோ

இருக்கலாம். எனினும் வராஹம் முக தோற்றம் வேறு விதமாக இருக்குமே. ( இந்த அஹோபிலம் சிற்பத்தை பாருங்கள் )

புவியை உருண்டையாக இந்த சிற்பத்தின் காலத்தில் காட்ட வில்லை (புவி உருண்டை என்பது அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்பது வேறு விஷயம்), அப்படியே இருந்தாலும் சங்கையும் சக்கரத்தையும் அற்புதமாக வடித்த சிற்பி அதை மட்டும் முட்டையை போல வடிவத்தில் ஏன் வடித்தான் என்பது சரியாக வரவில்லை.

553055385543

அருகில் இருக்கும் இரு மாந்தர், பொதுவாக எல்லா சிற்பங்களிலும் அவர்கள் வருவர் போல உள்ளது. இதோ இந்த ப்ரஹ்மா சிற்பம் பாருங்கள்.

சரி, அடுத்து இன்னும் ஒரு சிற்பம் நம் ஆய்வுக்கு – கூர்ம அவதாரம்.

அருகில் சென்று பார்ப்போம்.

கச்சபேசுவரர் வடிவில் சைவ ஆகமங்களில் இந்த கதை வந்தாலும் – ஒருமுறை சிற்பத்தை ஒப்பிடுவோம்.

எதுவுமே பொருந்தவில்லையே. இதனால் எனது கணிப்பு ஹனுமனையே ஒட்டி செல்கிறது. ( கண்டிப்பாக கண்கள் முக்கிய ஆவணம் )

சிதைவடைந்த சிற்பங்கள் பல நேரங்களில் நம்மை குழப்புவது உண்டு. அது போல இதோ ஒரு சிற்பம்.

யாரப்பா , இது என்ன சிற்பம் என்று சொல்லுங்களேன். உடல் கணபதி , தலை ??

அருகில் செல்வோம்.

ரொம்ப குழம்ப வேண்டாம். இது ஒன்றும் நவீன கணபதி அல்ல. அருகில் சென்று தடயங்களை தேடுங்கள்.

மேலே – இடது புறம் பாருங்கள்.

உடைந்த துதிக்கையின் மிச்சம் – அவனுக்கு பிடித்த மோதகத்தை இன்னும் பிடித்துள்ளதே . இது நமது கணபதி தான்.

குழப்பும் சிற்பங்கள் – நண்பருடன் ஒரு உரையாடல்

நண்பர்களே, இந்த தளத்தில் சிற்பக்கலை பற்றி சாட் உரையாடல்களை நடை பெற நண்பர் ‘திரு’ அவர்கள் அமைத்துக்கொடுத்தது எதற்காக என்றால், அது பின்னூட்டம் விட தயங்கும் நண்பர்கள் தங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர உதவும் என்பதாலேயே அமைத்தோம். அதன் படி ஒரு உரையாடலை இங்கு உங்கள் பார்வைக்கு ஒரு பதிவாக மாற்றி இடுகிறேன்.

நண்பர் பெயரை வெளியிடவில்லை.

நண்பர்: உங்கள் முந்தைய பதிவின் ஒன்றில் இருந்து சோமநாதபுரம் பற்றி இன்னுமொரு தளத்திற்கு சென்றேன்

http://bp0.blogger.com/_xUJrI6cswLg/SF_jI-vYY3I/AAAAAAAAAQQ/UKpNmgOUwAY/s1600-h/DSC07354.JPG

vj: மன்னிக்கவும் , எந்த பதிவு , மற்றும் நான் யாருடன் உரையாடுகிறேன் என்று முதலில் சொல்லுங்கள்

நண்பர்: நான் @@@@@ , சிற்பக்கலை பற்றி @@@@@@ இல படிக்கிறேன். ஹனுமான் பாண லிங்கம் சிற்பம் , சோமனாத்பூர்

vj: ஓ, அப்படியா. மிக்க மகிழ்ச்சி.அந்த பதிவா ! நண்பர் திரு ஆனந்த் அவர்களது பதிவு.


சிற்பத்தில் ஹனுமான் பாண லிங்கத்தை ஏந்தி நிற்கும் காட்சி. ராமபிரான் ஹனுமனை கைலையில் இருந்து சிவனின் லிங்கத்தை எடுத்து வருமாறு கூறுகிறார்.( ராமேஸ்வரத்தில் இராவணனை கொன்றதனால் பெற்ற ப்ரஹ்ம்மஹத்தி தோஷம் விலக பூஜை செய்ய). ஹனுமான் வர தாமதம் ஆனதால், ராமபிரானும் சீதாபிராட்டியும் மணலில் லிங்கம் பிடித்து பூஜையை ஆரம்பித்துவிட்டனர். இதை கண்டு வருத்தம் அடைந்த ஹனுமனை சமாதானம் செய்ய, அவருக்கு ஒரு வரம் அளித்தார் – ராமர். இனி அங்கு பக்தர்கள் முதலில் ஹனுமனின் பாண லிங்கத்தை வழிபட்ட பின்னரே தனது லிங்கத்தை வழிபடவேண்டும் என – இன்றுவரை அப்படியே ராமேஸ்வரத்தில் இரண்டு லிங்கங்கங்கள் உள்ளன “

நண்பர்: ஆனால் எங்கள் ஆசிரியரின் கூற்றுப் படி, இந்த சிற்பம் இன்றும் ஒரு புதிராகவே உள்ளதாமே?

vj: அப்படியா, இந்த சிற்பம் ஹனுமான் என்பதில் குழுப்பமா அல்லது அவர் கையில் வைத்திருக்கும் பாண லிங்கத்தில் சர்ச்சையும் குழப்பமுமா? சிற்பத்தை இன்னும் ஒரு முறை அருகில் சென்று பார்ப்போமே ( நன்றி திரு அர்விந்த் படங்களுக்கு )

நண்பர்: அதுவா, சர்ச்சை அவர் கையில் வைத்திருக்கும் சங்கு மற்றும் சக்கர ஆயுதங்களால் என்று நினைக்கிறேன்.


vj: அப்படியா, இதில் ஒன்றும் வினோதம் தெரியவில்லையே.

நண்பர்: அப்படியா

vj: சரி, ஒரு கேள்வி கேட்கிறேன். சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் வெண்கல சிலைகள் அணிவகுப்பு பார்த்ததுண்டா

நண்பர்: இல்லை, அடுத்து நாங்கள் அதை தான் படிக்க போகிறோம்.

vj: சரி, இப்போதைக்கு இந்த படத்தை பாருங்கள்( நன்றி ஃபிலிக்கர் நண்பர் )

http://farm3.static.flickr.com/2063/2410943558_f9be866992.jpg?v=0


நண்பர்: நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கொஞ்சம் புரிவது போல் உள்ளது

vj: அப்படியா, இது நந்தி – ஈசனின் மான் மழு ஏந்தி நிற்கும் சிலை. சரி, இப்போது உங்களை இன்னும் கொஞ்சம் குழப்புகிறேன். இந்த சிற்பத்தை பாருங்கள். தஞ்சை பெரிய கோயில் சிற்பம். ( படங்களுக்கு நன்றி அர்விந்த் )

நண்பர்: அய்யோ , இது இன்னும் குழப்புகிறதே !

vj: இதில் என்ன குழப்பம், ஹனுமான் இங்கே ஈசனின் மான் மழு ஏந்தி நிற்கிறார்!!

நண்பர்: ஒரு கேள்வி கேட்டதற்கு இப்படியா ?

vj: அப்படி இல்லை, முதலில் சோமநாதபுரம் சிற்பம் ஹனுமான் தான். பாண லிங்கம் கதை மிகவும் தொன்மை வாய்ந்த கதை. அதனுள் இப்போது செல்லவில்லை. மேலும் சிவ-விஷ்ணு வாகனங்கள் தங்கள் எஜமானர்களின் ஆயுதங்களை தாங்கி நிற்கும் என்பதற்கு அந்த நந்தி ஒரு அத்தாட்சி. ஹனுமான் ஈசனின் அவதாரம் என்று பல இடங்களில் பாடல்கள் உள்ளன. அதனை குறிப்பதே இந்த தஞ்சை சிற்பம்.

நண்பர்: சரி, இதை எங்கள் ஆசிரியரிடம் சொல்லிப்பார்க்கிறேன்.
vj: நன்றி, எனினும் நாங்கள் சாமானியர்கள், முறையாக சிற்பம், கலை பயின்றவர்கள் அல்ல. ஏதோ எங்களுக்கு கிடைத்தவற்றை, படித்த நூல்களை கொண்டு விளக்குகிறோம். இதை வைத்து தங்கள் ஆசிரியருடன் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாதீர் ??

முழங்கை தேய்த்தார் கட்டும்புறந் தோல்நரம் பென்பு கரைந்து தேய.

இன்றைக்கு மீண்டும் தாராசுரம் – பெரியபுராணக் கதை பார்க்கப்போகிறோம். – மூர்த்தி நாயனார் புராணம். நன்றி திரு அர்விந்த் ( படங்கள்) அவர்கள் மற்றும் விக்கி ( உரை )

பாண்டி நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே பிறந்தவர் மூர்த்தியார். அவர் திருஆலவாயில் உறையும் சொக்கலிங்கப் பெருமான் திருமேனிக்குத் தினமும் மெய்ப்பூச்சுக்குத் சந்தனக்காப்பு அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை வழுவாமற் செய்து வந்தார்.

அந்நாளில் வடுகக் கர்நாடக அரசன் ஒருவன் நீதிவகையாலன்றிப் படைவலிமையினாலே வலிந்து மண்கவரும் ஆசையால் பெரும் படை கொண்டு வந்தான். பாண்டியனோடு போர் செய்து பாண்டி நாட்டின் அரசாட்சியைக் கவர்ந்து கொண்டான். அவன் வேறு மதத்தை சார்ந்தவன் என்பதால் சைவ வழிபாடுகளுக்கு பல தடங்கல்களை கொடுத்தான். அவ்வாறு திருப்பணி செய்யும் அடியவர்களுக்கு பல கொடுமைகள் செய்தான்.

தன் திருப்பணியை தொடர்ந்து செய்யும் மூர்த்தியாரின் பணி தடங்கல் உண்டாக்க, அக்கொடியோன் அவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு செய்தான்.

அன்று பகல் முழுவதும் சந்தனக்கட்டை தேடியும் பெறாது வருந்தி மனம்தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தார்.

அப்போது

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=12&Song_idField=1215&padhi=72&startLimit=20&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

நட்டம்புரி வார்அணி நற்றிரு
மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை
முட்டா தென்று
வட்டந்திகழ் பாறையின் வைத்து
முழங்கை தேய்த்தார்
கட்டும்புறந் தோல்நரம் பென்பு
கரைந்து தேய.

`அருட் கூத்தியற்றும் பெருமான் அணிதற்குரிய திருமேனிப் பூச்சாகிய சந்தனக் காப்பு அணியும் தொண்டிற்கு, இன்று எனக்குத் தடை நேர்ந்திடினும், கல்லில் தேய்ப்பதற்கு உரிய என் கை தடையின்றி உள்ளது` என்று நினைந்து, வட்டமாகத் திகழ்ந்திருக்கும் சந்தனக் கல்லில் தம் முழங்கையைப் போர்த்த தோல், நரம்பு, எலும்பு எல்லாம் உராய்ந்து கரைந்து தேயுமாறு தேய்த்தார்.

இப்போது சிற்ப்பத்தை பார்ப்போம்.

என்ன நேர்த்தியாக இரு முட்டியையும் கல்லில் வைத்து தேய்க்கும் போதும், முகத்தில் எந்த வித வலியும் தெரியாமல், அமைதியான ஆனந்த உருவை செதுக்கியுள்ள சிற்பியன் வேலை அருமை.

பின்னர் என்ன நடந்தது

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=12&Song_idField=1215&padhi=72&startLimit=21&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கல்லின்புறந் தேய்த்த முழங்கை
கலுழ்ந்து சோரி
செல்லும்பரப் பெங்கணும் என்பு
திறந்து மூளை
புல்லும்படி கண்டு பொறுத்திலர்
தம்பி ரானார்
அல்லின்கண் எழுந்த துவந்தருள்
செய்த வாக்கு.

சந்தனக் கல்லின்மேல் வைத்துத் தேய்த்த அவர்தம் முழங்கை குருதி பெருகத், தேய்த்துச் செல்லும் இடம் எங்கும் எலும்பு நொறுங்கி அதனுள் இருந்த (மூளையில் இருந்து வரும்) நரம்பும் வெளிப்படக் கண்ட பெருமான், பொறுத்திலர். அப்பெருமானின் திருவருளால், அவ்விரவின்கண் எழுந்தது வான் வழியாக வருவ தொரு வாக்கு,

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=12&Song_idField=1215&padhi=72&startLimit=22&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அன்பின்துணி வால்இது செய்திடல்
ஐய உன்பால்
வன்புன்கண் விளைத்தவன் கொண்டமண்
எல்லாங் கொண்டு
முன்பின்னல் புகுந்தன முற்றவும்
நீத்துக் காத்துப்
பின்புன்பணி செய்துநம் பேருல
கெய்து கென்ன.

`ஐயனே! அன்பின் துணிவால் இதனைச் செய்யற்க! உனக்குக் கொடிய துன்பத்தைச் செய்வித்த அக்கொடி யோன் வலிந்து கொண்ட நாடு முழுவதையும் நீயே கொண்டு, முன்பு அவனால் இந்நாட்டில் புகுந்த இன்னல் யாவற்றையும் நீக்கி, உயிர்களைச் செப்பமுறக் காத்து, இதுவரை மேற்கொண்டிருந்த பணியையும் செய்து, பின் நமது பேருலகை அடைந்திடுவாய்,` என்று அருள.

இதன் பிறகு…இந்த தெய்வ வாக்கு நிறைவேறியதா ? எப்படி நிகழ்ந்தது ??

நரிதனை பரியக்கி பரிதனை நரியாக்கி

முந்தைய பதிவில் ஆவுடையார் கோயில் குதிரை வீரனை பற்றி பார்க்கும் பொது, அதனை ஒட்டிய கதையை பிறகு பார்ப்போம் என்று கூறினோம். இன்று திரு அரவிந்த் அவர்கள் உபயம் , கீதா அம்மா அவர்கள் உதவியுடன் பாபநாசம் பாலைவனநாதர் கோயிலில் உள்ள இந்த அற்புத சிற்பத்தை பார்ப்போம்.


மாணிக்க வாசகர் என்னும் திருவாதவூரார் வரலாறு ( நன்றி விக்கி )

படம் பார்த்தோம். பாடல். வித்தியாசமாக ஒரு திரைப்பட பாடல்.

படம்: மதுரை வீரன்
பாடல் : கண்ணதாசன்
இசை: G.இராமநாதன்

ஆடல் காணீரோ!
விளையாடல் காணீரோ!

ஆடல் மதுரையின் ராஜ தம்பிரனாம் எங்கள்
ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ (ஆடல்)

ஊற்றுப்பெருக்காலே உவப்பூட்டும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே
வீட்டுக்கொரு ஆள் தந்து
வேந்தனின் ஆணை தன்னை
ஏற்று விணை முடிக்கவே
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்

பிள்ளைப் பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து பித்தனைப் போலே

கைப்பிரம்பாலே பட்ட அடி பேசிடும் சகல் ஜீவராசிகள்
முதுகிலும் பட்டு வடுவுற்ற ஈசன் திருவிளையாடல் காணீரோ ( ஆடல்)

நரிதனை பரியக்கி பரிதனை நரியாக்கி
நாரைக்கு முத்தி கொடுத்து
உயர் நால்வேத பொருள் சொல்லி
நாகத்தையும் வதைத்து நக்கீரர்க்கு உபதேசித்து
வர குணப்பாண்டியர்க்கு சிவ லோகம் காட்டி
வலை வீசி மீன் பிடித்து
வாய் திறவாத கல்யாணைக்கு கரும்பூட்டி
வைர வளை முத்து வளை ரதன வளை விற்ற

திருவிளையாடல் காணீரோ
ஆடல் காணீரோ! திருவிளையாடல் காணீரோ!

தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது: “திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான்.

உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் வாதவூராரிடம் கோடிப்பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான். ( இதை அவர் ஒட்டகத்தின் மீது வைத்து எடுத்து வந்தார் என்று ஒரு குறிப்பு கிடைத்தது. இது ஒட்டகமா ? அப்படி தெரியவில்லை )

வாதவூரார் பொன்னோரு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று வாதவூரார் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று வாதவூரார் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்

‘சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்’ என்றார் பக்குவமடைந்திருந்த வாதவூரார். சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.

தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற வாதவூராரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் வாதவூரார்.

பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு வாதவூராரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.

‘குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை’ என்று கூறி வாதவூரார் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து ‘குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்’ என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.

சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் ‘எங்குமே குதிரைகள் தென்படவில்லை’ என்ற செய்தியோடு திரும்பினர்.

ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. ‘இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெய்யிலில் நிறுத்துவேன்’ என்று கூறிப் பாண்டிய மன்னன் வாதவூராரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் வாதவூரார் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக்கினர். வாதவூரார் சிவனை தியானித்தார்.

உடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.

குதிரைப் அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, ‘இவை உன்னுடையவை’ என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான். ( இந்த சிறிய விவரத்தை கூட சிற்பி விடவில்லை )

அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின.

திருப்பாண்டிப்பதிகம்: பாடல் எண்: 527

சதுரை மறந்தறிமால் கொள்வர் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்துக்
குதிரையின் மேல் வந்து கூடிடு மேல் குடி கேடு கண்டீர்
மதுரையா மன்னன் மறுபிறப்பு ஓட மறித்திடுமே.

இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று மணலில் வெய்யில் நேரத்தில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.

சிவபெருமானுக்கு பக்தனின் துயரம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது.

உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான்.

ஒரே ஒரு வந்திக் கிழவி, பிட்டு சுட்டு விற்பவள், மட்டும் தனிக்கட்டை. எவ்வளவு சொல்லியும் பாண்டியனின் வீரர்கள் கிழவியை விடவில்லை, அவள் வீட்டில் இருந்தும் ஒருவர் வரவேண்டும். நீ இல்லை என்றால் வேறு ஆளை அமர்து என்று கூறுகின்றனர்.

அவள் வீட்டில் இளைஞர்கள் யாரும் இல்லை. என்ன செய்வது என்று யோசிக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து அவள் சார்பாக வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்குச் சம்மதித்த சிவபெருமான் தனது ‘வேலையைத்’ தொடங்குகிறார்.

அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். சிற்பத்தை பாருங்கள், வயிறு முட்ட உண்டு தூப்பையை தடவிக்கொண்டு தலைக்கு மன்வாரும் கூடையை வைத்து உறங்கும் பாணி அருமை.

மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.

கோபம் கொண்ட அரசன் அவனைப் பிரம்பால் அடித்தான்.

கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி அண்ட சராசரங்களின் அனைத்து உயிர்களின்மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.

அப்போது சிவபிரானின் குரல் கேட்டது, ‘மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்’ என்று அக்குரல் சொல்லிற்று.

பிட்டுக்கு மண் சுமந்தல்: திருக்கழுக்குன்றப் பதிகத்தில் இருந்து: பாடல் எண் 469


“பிட்டு நேர்பட மண்சுமந்த
பெருந்துறைப்பெரும் பித்தனே
சட்டம் நேர்பட வந்திலாத
சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்”

கலை என்றால் என்ன?

இன்று நமக்கு ஒரு புது முயற்சி. இதுவரையிலும் ஓராண்டிற்கும் மேலாக பாரம்பரிய சிற்பங்கள், சிற்பங்களை ஒட்டிய ஓவியங்களை பார்த்து வந்த நாம் ( இனியும் அவற்றை காண்போம்) , ஆனால் இன்றைய தினம், இன்னும் ஒரு புதிய பரிமாணத்தினுள் கால் பதிக்கின்றோம். எந்த கலை வடிவமும் வாழ / வளர , ஒரு குறுகிய சட்ட முறைக்குள் அடங்கிக் கிடக்க கூடாது. அது பல தரப்பட்ட கருத்துகளை உள்வாங்கி மாற வேண்டும். அதற்க்கு முன்னர் கலை என்றால் என்ன?

கலைகளில் நாம் இதுவரை சிற்பம், சிலை, ஓவியம், சுதை , கல், உலோகம், கற்கோவில், கட்டுமான கோயில், குடவரைக் கோயில் , புடைப்பு சிற்பம் என்று பலவற்றை பார்த்தோம். அவை அனைத்தையும் ஒருங்கிணைப்பது என்ன – அதன் தாக்கம். நானூறு, ஐந்நூறு ஏன் ஆயிரம் ஆண்டுகள் ஆகியும், இந்த அற்புத படைப்புகள் காண்போரை மகிழ்விக்கின்றன?. இதன் ரகசியம் என்ன?. ஆண், பெண், பெரியவர், சிறுவர் , உள்நாட்டவர், வெளிநாட்டவர் என்று ஆயிரத்தி மூன்னூறு ஆண்டுகள் ஆயினும் இந்த சிற்பங்கள், இன்னமும் நம்மை மயக்குவதன் சூட்சமம் என்ன?, ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து, நமது பண்பாட்டிற்கு அன்னியமான மண்ணில் இருந்து வரும் நபர், நமது புராணக் கதைகள் அறியாதவர், அன்னியன் என்றாலும் அவனையும் தன பால் வசியம் செய்ய வைக்கும் இந்த கலையின் ஆகர்ஷண அல்லது அமானுஷ்ய சக்தி என்ன?. மனிதன் அவன் மனத்தினுள் எங்கோ தூங்கிக்கிடக்கும் உள்ளுணர்வை தட்டி எழுப்பும் இந்த கலையை என்ன சொல்லி வர்ணிப்பது?
ஒருவேளை இப்படி வர்ணிக்கலாமோ.. கலை என்பது ஒரு வெளிப்பாடு, கலைஞன் தனது உள்ளுணர்வை வெளிக்கொணரும் கருவி. தன மனச் சுதந்திரத்தை, தனது ரசிகர்களுடன் தன் எண்ண அலைகளை பகிர்ந்து கொள்ளும் யுக்தி, தான் தன மனக்கண்ணில் காணும் காட்சியை மற்றவரும் பார்க்க செய்யும் மார்க்கம்- அது தான் கலை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறன், உறங்கிக்கொண்டு! அன்றாட வாழ்வில் சிக்கி பூட்டிக்கிடக்கும் இந்த உணர்வு , சுதந்திரத்திற்கு என்றும் எப்போதும் ஏங்கிக் கொண்டே தவிக்கிறது.

கலைஞர்கள் அவர்களுக்கு கிடைக்கும் பயிற்சி மற்றும் கிடைத்த சந்தர்ப்பங்களை உபயோகித்து, பூட்டை உடைத்து தங்கள் எண்ணங்களை பறக்க விடுகின்றனர். அப்படிக் கிடைத்த சுதந்திரத்தில் சிறகடித்து பறந்து, தான் இதுவரை கண்ட மனக்காட்சிகள், மற்றும் புறக்காட்சிகள் அதனோடு ஒட்டிய உணர்வுகளை அனைத்தையும் வெளிக்கொணர்வதே கலை.

நமது மனம் ஒரு புதிர், அது நாம் புறக்கண்களால் காணும் அனைத்தையும் படம் பிடித்து தன்னுள் அடக்கி வைத்துக்கொள்ளும். பிறகு, அதில் உணர்வுகளோடு பிணையும் காட்சிகளை இன்னும் நன்றாக பதியச் செய்யும். ( சற்று கண்ணை மூடி, ஏதாவது ஒரு காட்சியை நினைவுப் படுத்தி பாருங்கள் – முதலில் நினைவிற்கு வரும் காட்சி அதனுடன் ஒட்டிய மிக அழுத்தமான உணர்வுடன் பிணைந்ததாகவே இருக்கும் ). கலைஞன் இந்த மனக்கண்ணால் காணும் காட்சியை வெளிப்படுத்தும் திறனே – கலை. இது கலைஞனுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று இல்லை, கலைஞனின் படைப்பை பார்க்கும் பொது , அதனுள் ஈர்க்கப்படும் ரசிகனும் கலந்துகொள்கிறான். படைப்பில் இருக்கும் ஏக்கம், இன்பம், துன்பம், சுகம் அனைத்தையும் தாயின் தொப்புள்கொடி ஏற்படுத்துவது போல ஒரு தொடர்பு – வெட்டுப்பட்ட பின்னரும் தொடரும் அந்த உணர்வு, கலைஞனின் உணர்வை நாம் நம் மனதில் உணர வைக்கும் திறனே கலை. இதற்கு எந்த விதிமுறைகளும் இல்லை. கலை என்று இணையத்தில் தேடினால் ஆயிரம் பெயர்கள் வரும். சில அர்த்தங்கள் உங்களை ஈர்க்கலாம். ….

ஆனால் இந்த சுதந்திரமே கலைக்கு மகுடம். ஜாதி, மத, மற்றும் எல்லா பேதங்களையும் தாண்டி கலையை கலையாய் ரசிக்கும் உணர்ச்சி. அதுவே கலை. அதனால் கலை என்பது இது தான் என்று ஒரு வட்டம் போட்டு அதனுள் எல்லா வகைகளையும் அடக்கி விட முடியாது. பரிமாண வளர்ச்சியில் புது புது சிந்தனைகள் வருவது போல கலையும் மாறிக்கொண்டே இருக்கும்.

சரி.. இப்போது நாம் நம் படைப்புக்கு வருவ்வொம். எவ்வளவு பிரமாதமாக இருந்தாலும் ஒரே அறுசுவை உணவை எத்தனை நாள் தான் உண்ணுவது. இன்று நமக்கு அது போல ஒரு புதுவிதமான கலை விருந்து. திரு ஜீவா அவர்கள் அறிமுகம் , திரு பாலா அவர்களுது அறிமுகம் – ஓவியர் சாளுக்யன் அவர்களுது ஓவியம்.

தஞ்சை பெரிய கோயிலில் மிகவும் சிதைந்த சுதை சிற்பம். வர்ணங்கள் எல்லாம் விழுந்த வண்ணம் இருக்கும் இந்த சிற்பம் அவரது கண்ணை கவர்ந்துள்ளது. காலசம்ஹார மூர்த்தி சிலை – ஈசன் தன் பக்தனான மார்கண்டேயனை காக்க எமனை எட்டி உதைக்கும் சிற்பம். இந்த கதை நாம் இதே கோயிலில் வேறு சோழர் கால புடைப்பு சிற்பத்தை பார்த்த போதே பார்த்தோம். எனவே நேராக சிற்பத்திற்கு செல்வோம்.

கலை காலத்தை வென்றது என்பதை குறிக்க, சாளுக்யன் எடுத்துள்ள கரு – ஈசன் தன்னிடம் சரண் அடையும் மார்க்கண்டேயனுக்காக ` நீ என்றும் பதினாறு என்று வரம் அளித்து ( இன்று எத்தனை பேர் இந்த வரம் பெற முயற்சி செய்வரோ ) , இறையிடத்தில் முழுவதுமாக சரணாகதி அடையும் சிற்பத்தை, அவர் எடுத்துக் கொண்ட வெளிப்பாட்டு முறையும் வினோதம் -கரி கொண்டு தீட்டிய ஓவியம். மனிதன் வாழ்கையின் சுழற்சியை கண்டு சிரிக்கும் வண்ணம், நாம் அனைவரும் முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆவது போலவும் ஒரு தேற்றம்…. அதுவும் ஈசனது தானே என்று உணர்த்தும் வண்ணம் அமைந்த ஒப்பற்ற ஓவியம்..

மனித வாழ்கை நிலை அற்றது, ஆனால் அவனால் படைக்கப்பட்ட, அவன் வெளிக் கொணர்ந்த கலை அழிவற்றது.

சாளுக்யன் அவர்களுது மற்ற படைப்புகளை காண.

http://www.chalukyan.com/

சிற்பக்கலைக்கு அழகூட்டும் ஓவியம் – திருபெருந்துறை ஆவுடையார் கோயில் குதிரை வீரன்

நாம் முன்னர், ஸ்ரீரங்கம் சேஷராயர் மண்டபத்தின் அற்புதத் தூண்களில் உள்ள குதிரை வீரர் சிலைகளை பார்த்திருந்தோம், அதை தொடர்ந்து இன்று மீண்டும் ஒரு அற்புத குதிரை வீரன்.

பரிமேல் அழகர்கள் ஆதி காலத்தில் இருந்தே வீரர்கள், ஓவியர்கள் மற்றும் சிற்பிகளை ஈர்ப்பதுண்டு. குதிரை சவாரி என்பது வீரத்தின் இருப்பிடமாய் இருக்க, சீறும் குதிரை சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் பல இடங்களில் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான். நாலு கால் பாய்ச்சலில் பறக்கும் குதிரை, அதுவும் ஒவ்வொரு சதையிலும், நரம்பிலும் இருந்து எழும் வேகம், அதன் மேல் அமர்ந்திருக்கும் வீரன் அதனுடன் ஒன்றாய் கலந்து, காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் அனுபவம் – பார்க்கும் கோழையின் ரத்தத்தைக் கூட மாற்றி அவனை வீரனாக்கும் ( இன்றைய இளைஞர்கள் இந்த உணர்வை மோட்டார் சைக்கிளில் பறக்கும் போது சற்று அனுபவிக்கலாம் ) – அந்த உணர்வு ஒரு சுதந்திரம். அதே போல எதிரில் இருக்கும் பெரும்படையை கண்டு அஞ்சாமல், வேல் ஏந்தி செல்லும் குதிரை படையை கண்டு அவர்களே அஞ்சி ஓடும் கதை பலவற்றை நாம் கேட்டுள்ளோம். பல வீடுகளில் வாண்டுகள் தூங்கும் முன்னர் கேட்கும் கதைகளில் குளம்பொலிகள் மிகுதியாக வரும். அதில் வரும் குதிரை வீரர்கள் – அது மாவீரன் அலெக்ஸாண்டரின் குதிரை போசிபல்ஸ் அல்லது பிரிதிவ் ராஜ் சௌஹனின் செடக் அல்லது நாம் தமிழ் வீரர்களான வாள் வில் ஓரியின் ஓரி, தேசிங்கு ராஜனின் பஞ்சகல்யாணி, இப்படி அந்த அற்புத குதிரைகளின் டக், டக், டக் எனும் குளம்பொலி சப்தம், பல மழலைகளை தூக்கத்திலும் அதன் பின்னர் கனவுகளிலும் ஆட்கொண்டன.

இன்று நாம், அதே போல ஒரு அற்புத குதிரை வீரனை பார்க்கப்போகிறோம். கல்லில். அதுவும் குதிரையைப் பற்றிய ஒரு அற்புதம் நடந்த மண்ணில். ( அதை மற்றொரு பதிவில் பார்ப்போம் ) – ஓவியர் திரு ஜீவா அவர்களின் உதவியுடன் இன்று ஆவுடையார் கோயில் திருப்பெருந்துறை செல்கிறோம்

ஒரு அற்புத ஓவியர் (www.jeevartistjeeva.blogspot.com) அவரது ஓவியத்தையும் சிற்பத்தின் படங்களையும் நம்முடன் பகிர்கிறார்.

இந்த கால அட்டவணையில் ( 14th C முதல் – நாயக்கர் காலம் / விஜயநகர மன்னர்கள் காலம்) இந்த மாதிரி அற்புத சிற்பங்கள் நிறைந்த மண்டபங்களைக் காணலாம். பலர் பலமுறை இந்த ஆலயங்களுக்கு சென்றும் இந்த அற்புத படைப்புகளை ஒரு நிமிடம் நின்று கூட பார்ப்பதில்லை.

சரி, இந்த சிற்பத்தின் அழகை பார்ப்போம். குதிரை, குதிரை வீரன், அணிகலன், ஆபரணம் என்று இதனை நுணுக்கங்களை எப்படித்தான் கல்லில் செதுக்கினார்களோ.

குதிரை வீரனின் ஆயுதங்கள், அவன் கையில் பிடித்திருக்கும் ஈட்டி என்று ஒரு சின்ன குறிப்பை கூட விடாமல் ஒரே கல்லில் செதுக்கிய வேலைப்பாடு அருமை.

சிலை மட்டும் ஒரே கல்லில் வடிக்கவில்லை, இவை அனைத்துமே அந்த ஒரு தூணின் பாகம்.

இது மனித வெளிப்பாடா ??

படங்களுக்கு நன்றி திரு கந்தசுவாமி