புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி – திருப்பரங்குன்றம்

இன்றைக்கு மீண்டும் திருப்பரங்குன்றம் பயணிக்கிறோம். தன்மையால் இயற்கையில் எதிரிகள் – இயற்கையான இறை . இருந்தும் இங்கோ ??? நல்ல வேளை கோயில் அதிகாரிகள் தங்கள் அறிவுக் கூர்மையை ( மொக்கையை ) இங்கே காட்டவில்லை. வெறுமனே சிவன், திருவிளையாடல் புராணம் என்று விட்டு விட்டனர். ( முந்தைய சிற்பத்தில் சிவனை வராஹி என்று போட்டது போல அல்லாமல் ). விலைமதிப்பில்லா தூணில் துளையிட்டு இரும்பு தடுப்பையும், கயிறு கொண்டு கட்டியும் – இப்படி அவல நிலையில் நமது கலைச் செல்வங்கள் படும் பாடு – என்று மீளுமோ இவற்றின் அவல நிலை. .

மிகவும் அரிய சிற்பம். இது போல வேறு எங்கும் இதுவரை இந்த காட்சியை சிற்பத்தில் பார்த்தது இல்லை. சிவனின் அழகியதோர் திருவிளையாடலை விளக்கும் சிற்பம். வேம்பத்தூர் நம்பி பாடிய திருவாலவாய் உடையார் திருவிளையாடற் புராணத்தில் வரும் காட்சி.

முதலில் இது சிவன் என்று எப்படி தெரிந்துக் கொள்வது. மிகவும் சுலபம் – கையில் உள்ள அறிகுறிகளை பாருங்கள்.


மான், மழு – இதை எப்படி பார்க்காமல் போக முடியும் ( கோவில் அதிகாரி யாக இருந்தால் ஒழிய – இதோ பாருங்கள் சிவன் பன்றிக்கு பால் கொடுக்கும் காட்சியை வராஹி என்று போட்டுள்ளனர்).

சரி, அப்படி என்ன இந்த சிற்பத்தில் தனித் தன்மை. இன்னொரு கையில் என்னென்ன இருக்கின்றன என்பதை உற்றுப் பாருங்கள்.

புலி போல உள்ளதே. சிவன் அதை ஒரு குழ்ந்தை போல மடியில் வைத்திருக்கும் வண்ணம் அருமை.

சரி, இது அந்தி கையில் என்ன ? ஆஹா !!

ஆம் – ஒரு மான் குட்டி. அதுவும் புலியின் முலையில் பால் குடிக்கும் மான் குட்டி.

வேம்பத்தூர் நம்பி பாடிய திருவாலவாய் உடையார் திருவிளையாடற் புராணத்தில், புலிமுலை புல்வாய்க்கு அருளின திருவிளையாடல் (53) என்ற பகுதியில் மேலே கூறிய கதை இடம் பெறுகின்றது. குட்டி ஈன்ற மான், நீர் வேட்கை மிகுதியால் நீர்நிலை ஒன்றிற்கு வந்தது. அங்கே மறைந்திருந்த வேடன் ஒருவன் அந்த மானைக் கொன்று வீழ்த்தினான். மான் இறக்கும்போது தன் பச்சிளங்குட்டியை நினைத்தவாறே உயிர் நீத்தது. அதன் மீது இரக்கம் கொண்ட ஆலவாயுடையார், தாயை இழந்த மான்குட்டிக்குப் பாலூட்ட, பக்கத்தில் இருந்த புலி ஒன்றினை ஏவினார்.

எட்டாம் திருமுறை

புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி

நாம் இது வரை சிவனின் பல கோலங்களை பார்த்துள்ளோம். பொதுவாக அழிக்கும் கடவுள் என்று நாம் பார்க்கும் ஈசன், இங்கே இரு தூண்களிலும் – தாய்மை உள்ளம் பொருந்திய அன்பின் ஸ்வரூபமாக காட்சி தருவது அருமை. ஒரு புறம் தானே தாயாக மாறி பன்றிக்குட்டிகளுக்கு பால் ஊட்டுவது, இன்னொரு புறம் இரை என்று பார்க்கும் மிருகத்தின் தன்மையை மாற்றி இறையுள்ளத்தோடு அன்புத் தாயாக மாற்றும் காட்சி.

மீண்டும் நம் நண்பர் புலித்தொப்பை – கொடும்பாளூர் மூவர் கோயில்

பொதுவாக புகழ் பெற்ற கலைச் சின்னங்களை பலரும் பார்க்க வருவர். அவைகளைப் பற்றி தேடினால், பக்கம் பக்கமாக பல பதிவுகள், ஆராய்ச்சிகள், புத்தங்கங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே கூகுளார் எடுத்துப் போடுவார். அப்படி இருக்க, இன்னும் வெளி வராதவை ஏராளம். சிற்பம் என்றால் மல்லை, ஓவியம் என்றால் அஜந்தா, கோயில் என்றால் தஞ்சை, மதுரை, சிதம்பரம், ஸ்ரீரங்கம் என்று இன்று முடிவு ஆகிவிட்டது. அப்படி இல்லமால், இன்றும் தங்கள் அழகை பொத்தி மறைத்து, மறைந்து நிற்கும் பொக்கிஷங்களை நாம் வெளிக் கொண்டு வர வேண்டும். அவற்றை பார்க்கும் போதே, எனது குலம் ஒரு மகத்தான குலம், எனது நாடு ஒரு வாழும் வரலாறு என்று நாம் மார்தட்டி, ஆழ் மனதில் ஒரு பெருமிதத்தோடு, ரோமங்களில் ஒரு மயிர் கூச்சலோடு, தலை தானாக நிமிர்ந்து பார்க்கும் ஆனந்தம் இருக்கிறதே, அதுவே பரம சுகம்!

அப்படி ஒரு உணர்வு, மூவர் கோயில் செல்லும் பொழுது எங்களுக்கு ஏற்பட்டது. சுற்றிலும் அமைதி ததும்பும், பச்சை பசேல் என்ற வயல் வெளி நிறம்பிய, ரம்மியமான கிராமத்தை தாண்டிச் சென்றோம். நெடு நெடு என்று கான்க்ரீட்டும் கண்ணாடியும் தினமும் பார்த்து சலித்த எங்களுக்கு இப்படி ஒரு அற்புதமான மாறுபட்ட சூழலில், தொலைவில் ஒரு விமானம் தென்பட்டது.

அதோ மூவர் கோயில், என்னடா இது மூவர் கோவில் என்று சொல்கிறீர்கள் ஆனால் இரண்டு கோபுரம்தான் தெரியுது என்கிறீர்களா! ஆமாம், இன்றைக்கு எஞ்சியது இரண்டு தான். மூன்றாவது அடிமட்டம் மட்டுமே உள்ளது. இந்த அற்புத கோயில் கட்டிய வள்ளல், கொடும்பாளூர் அரசர் இருக்குவேளாண் பூதி விக்கிரம கேசரி, அவரும் அவரது இரு தேவியரும், காளாமுக துறவிகளுடன் சேர்ந்து நிறுவினர் என்று கிரந்த லிபியில் கல்வெட்டு உள்ளது. கொடும்பாளூர் அரசர்கள் சோழர்களுக்கு துணைபுரியும் சிற்றரசர்களாக இருந்து வந்தனர். பூதி விக்கிரம கேசரி, இரண்டாம் பராந்தகர் (ஆமாம், உடனே பொன்னியின் செல்வன் நண்பர்கள் விழித்துக் கொள்வது தெரிகிறது. நமது ராஜ ராஜரின் தந்தையார் சுந்தர சோழர் தான்) காலத்தில் அவருக்கு கீழ்படிந்த சிற்றரசராக இருந்தார்.

தொலைவில் இருந்து பார்க்கும் பொழுது, சற்று சிறியதாக உள்ளதே, இதற்காகவா இவ்வளவு தூரம் வந்தோம் என்று நினைக்கத் தோன்றும். பொறுமை, இது சிறு கோயில் ஆனால் ஒரு அழகிய சிற்பக் கூடம்.

ஒருவேளை இந்த வாக்கியத்தை சுட்டிக்காட்டவே, இன்று மூவர் கோயிலில் இருக்கும் பல சிற்பங்களை விட்டு விட்டு, ஒரு சிறிய, எனினும் அரிய வடிவத்தை எடுத்துக் காட்டுகிறேன். இதில் எனக்கு ஒரு தனி லாபமும் உண்டு, காரணம் இது எனக்கு மிகவும் பிடித்த சிற்பம் !!

முதலில், அது எங்கே இருக்கிறது என்பதை பாருங்கள், பூத ரேகையில் தென்படுகிறதா?

இன்னும் அருகில் சென்று தேடுவோமா.

என்ன இன்னும் தெரியவில்லையா? பரவாயில்லை இதோ உங்களுக்கு சற்று உதவுகிறேன்.

என்ன அழகு இந்த குட்டி பூதம், அதுவும் அதன் தொப்பை! ஆமாம், நமது புலித்தொப்பை தான்.


இன்னுமா கண்டு பிடிக்க முடியவில்லை?


இன்றைக்கு குட்டி பூதம் சற்று கோபமாகவே இருக்கிறது!

விளையாட்டில்லை, பூத ரேகை விமானத்தை சுற்றிலும் இருக்கிறது. இரண்டாவது விமானத்தில் அவ்வாறே உள்ளது. எங்கும் குட்டி பூதங்கள் தான், ஒரே சேஷ்டை, லூட்டி அடிக்கின்றன. அப்படி இருக்க, ஒரே ஒரு முறை மட்டும் வரும் இந்த புலித்தொப்பை பூதத்தின் தனித்தன்மையின் காரணம் என்ன? அதுவும் நாம் இவரை முதன் முதலில் பகீரத பிரயத்தன சிற்பத்தில் மல்லையில் பார்த்தோம், பிறகு புள்ளமங்கை, ஸ்ரீனிவாச நல்லூர், இப்போது மூவர் கோயில். இப்படி அணைத்து இடங்களில் ஒரே ஒரு முறை மட்டும் சித்தரிக்கப்பட்டுள்ள இந்த பூதம் யார்?

அடுத்த பதிவில் மற்ற அற்புத வடிவங்களையும் பார்ப்போம்.

பேரூர் கனகசபையின் மனம் கவரும் சிற்பங்களுக்கு இது ஒரு காணிக்கை. பாகம் 1

பேரூரின் கலைச் சுரங்கத்தை என்று கண்ணுற்றேனே அன்று முதல் இந்தக் கலையழகை நம் கலாஇரசிகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து இரசித்து சுவைக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளத்தில் பொங்கிக் கொண்டே இருந்தது. ஒருநாள் இரண்டு நாட்கள் அல்ல! பத்து வருடங்கள்! ஆனால் இத்தனைக் காலம் பொறுத்ததிலும் நன்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தப் பதிவினை படித்து முடிக்கும் பொழுது அதை நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள்.

இன்று நாம் பார்க்கப் போவது அழகுப் பெட்டகமான ஊர்த்துவதாண்டவ மூர்த்தியின் அற்புத அழகைத்தான். இதோ, சிறைக்குள் இருக்கும் இந்த உயிர்ச் சிலையைப் பாருங்கள்.

முதலில், இது ஒரு தூண் சிற்பம்! ஒரே கல்லால் ஆன தூண் சிற்பம். பேரூரின் இந்தக் கனகசபையில் மிகவும் அற்புதமான வேலைப்பாடமைந்த எட்டு தூண்கள் இங்கே வடிவமைக்கப் பட்டுள்ளன. இவை கி.பி 1625 முதல் கி.பி. 1659 வருடங்களில் இராஜா சிவத்திரு அழகாதிரி நாயக்கர் அவர்களால் அமைக்கப் பெற்றது.


இரும்புக் கூட்டுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளதாலோ என்னவோ, சிற்பக்கலையின் உச்சமாகத் தோன்றும் இந்தக் கலையின் அழகு பெரும்பாலானோர் கவனத்திற்கு வருவதேயில்லை! இதைப் படித்த பின்னாவது சில நல்ல உள்ளங்கள் இந்தச் சிறைக்கு பதில் நல்ல கண்கவரும் கண்ணாடிக் கூண்டை அமைப்பார்கள் என நம்புவோம்.



சோழர்களின் காலத்திற்குப் பின்னும், 13 – 14 ஆம் நூற்றாண்டு பாண்டியர்களின் காலத்திற்குப் பிறகும் சிற்பக் கலையின் வளர்ச்சி சற்றே குன்றியது போல்தான் இருந்தது. ஆனால் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கனகச்சபை சிற்பம், சிற்பக் கலை இன்னும் மறைந்து விட வில்லை மாறாக அந்தக் கலையில் தேர்ச்சி அடைந்து அழகில் இமயத்தையும் விஞ்சியதை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

கம்பிகளுக்குள் இல்லாமல், கம்பீரமாக நிற்கும் பிரிட்டிஷ் காப்பகத்தின் பழைய புகைப்படம் இதோ…

ஓவியர் சிற்பி அவர்கள் ஓவியமும் இதோ ( நன்றி varalaaru.com )

நம்முடைய கலை மீதான கட்டுக்கடங்காத ஆர்வத்தை அறிந்து, புகைப்படம் எடுக்க அனுமதி கொடுத்ததோடு அல்லாமல் இந்த அழகுச் சிலையின் அழகை கண்ணார பருகுவதற்காக கதவையும் திறந்து காட்டிய அந்த ஆலயத்தின் EO அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு, இந்தக் கலை விருந்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இதோ, மனதைக் கொள்ளையடிக்கும் அந்த அழகுச் சிலையின் உருவம்.

இது ஒரு தனித்துவம் வாய்ந்த சிற்பம், கற்சிலையாகப் பார்த்தாலும், சிவனின் நடனமாகப் பார்த்தாலும் சாமனியர்களால் எளிதில் புரிந்துகொள்வது கடினம்தான். சிவனை நாடி அவனை அறிந்தால்தான் இந்த நடனத்தையும் புரிந்துகொண்டு இரசிக்கமுடியுமாம்! ப்ரம்மா, விஷ்ணு, கந்தன், நாரதர், பரதன் (நாட்டிய சாஸ்திரத்தை எழுதியவர்) இவர்களால்தான் நடனத்தை அறிந்து கொண்டு இரசித்து ஆனந்திக்க முடியுமாம்!

சாலுவன் குப்பத்தில் இருக்கும் கல்வெட்டு ஒன்று சிவநடனத்தின் தனிச் சிறப்பை கூறுவதோடு, நாட்டியத்தின், சங்கீதத்தின் கூறுகளை விளக்கி, சிவநடனத்தை கண்டுகளிக்க விளக்குகிறது: யதி ந விததா பரதோ யதி ந ஹரிர் நரதோ ந வ ஸ்கந்தா பொத்தம் க இவ ஸமர்த்தாஸ் ஸங்கிதம் கலகலஸ்ய (Epigraph. Ind. 10, p. 12).
நூல்: NATARAJA – THE LORD OF DANCE – Dr. Sivaramamurti

சிவநடனத்தைக் கண்டுகளிக்கும் இந்தக் கடவுளர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டும் அல்ல. ஒவ்வொருவரும் தங்களின் இரசனைக்கு தக்கவாறும், நடனத்தை ஊக்குவிப்பதைப் போலவும், பல்வேறு இசைக் கருவிகளை உபயோகித்து நாயகனின் நாட்டியத்திற்கு மேலும் வலுசேர்க்கின்றனர். இதோ அதைப்பற்றி சில வரிகள், நடனத்தை நாயகன் துவக்கிய கணமே விஷ்ணு மர்தளம் என்னும் வாத்தியத்தை இசைத்து தன் தெய்வீக இசைய பரவவிட, துடிப்பாய் எழும் அந்த ஒலி வண்ணமயில்களைத் தோகைவிரித்தாடச் செய்யும் கரு மேகங்களின் இடியாய் எழுகிறது. தாமரைக் கையோன் பிரம்மாவோ வெங்கலத் தாளத்தை நாட்டியத்திற்கும் விஷ்ணுவின் தாளத்திற்கும் ஏற்றார் போல் தட்டி இசைத்து காமனை வென்ற சிவனின் நர்த்தனத்தை இடைவிடாது நடத்துகிறார்.

இங்கிருக்கும் பிரம்மாவிற்கு அப்படி என்ன சிறப்பு, தெரிகிறதா?


ஐந்து சிரங்களைக் கொண்ட பிரம்மா, சிவனுக்குரிய சின்னங்களான மானையும், மழுவையும் கொண்டுள்ளார்!!

இசைக்கலைஞர் எவ்வாறு கணநேரம் தன் பாடலை நிறுத்தி, தாளத்திற்கும், ஸ்ருதிக்கும் ஏற்றவாறு எப்படி திரும்பத்தொடர்கிறாரோ, அதே போல் இங்கு நம் ஆடலழகனும் கணநேரம் தன் நடனத்தை நிறுத்தி தன் மத்தளத்தை இசைத்து இசையை தன் வழிக்கு நேர்த்திசெய்து மீண்டும் தொடர்கிறார்.

காரைக்கால் அம்மையார் இங்கே மற்றுமொரு தனித்துவம்! இது தனிச் சிற்பம் அல்ல அதே தூணில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பமே!

என்னவொரு அற்புதமான வடிவமைப்பு! வற்றிய முலைகள், சுருங்கி மடிப்புகளைக் காட்டும் கழுத்து தசைகள், வயதான தோற்றத்தை அற்புதமாக எடுத்துக் காட்டும் இந்தச் சிலை இளம் வயதிலேயே, வயதான பேய் உருவம் கேட்டுப் பெற்ற காரைக்காலம்மையார்! (முந்தைய பதிவுகள் பார்க்கவும்)

முயலகன் மட்டும் தப்பி விடுவாரா என்ன? இதோ தன் கையில் பாம்பை பிடித்தவாறு காணப்படும் கொழு கொழு முயலகன்.

சற்றே நீளமான பதிவுதான், என்னசெய்வது இதை பாகங்களாகப் பிரித்து பதிவது தவறென்று தோன்றுவதால் வார்த்தைகளைச் சுருக்கி, வண்ணப் படங்களை பேச வைக்கிறேன்.

அழகான பிரிந்த தாடை, அழகிய வரிகளைக் கொண்ட நாசிகளை உடைய அழகிய இளமைத் ததும்பும் வதனம் கொண்ட சிவன்.

உயர்த்திய கால்கள், எவ்வளவு அழகாக கனக் கச்சிதமாக வடிக்கப் பட்டிருக்கும் மூட்டு, கைகள், கைவிரல், நகம், விரல் மூட்டுகளின் மேல் உள்ள வரிகள், நகச்சதை, என்னவொரு தத்ரூபமான படைப்பு!!



மற்றுமொரு அழகிய வடிவமைப்பு, மேல்பாகமும் அடிப்பாகமும் காட்டும் கால் பாதம், விரல்கள், பாதத்தின் மேல் தெரியும் காலணியின் வார்ப்பட்டை, வளைந்து திரும்பி அழகிய முத்திரையைக் காட்டும் கை, கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல், இதை விடத் துல்லியமாக யாரால் வடிக்க இயலும்!






எண்ணற்ற வடிவங்களைத் தாங்கி இருக்கும், கைகள் வரிசையாய் விரிகின்றன…

தனித்துவம் பெற்ற எண்ணற்ற சின்னங்கள் எப்படித்தான் வடித்தனரோ! இவைகள் அனைத்திற்கும் பெயர்களும், முக்கியத்துவமும் கூடத் தெரியவில்லை, தேடிக் கண்டுபிடிப்போம்.

சிறப்பிற்கும் மேல் சிறப்பான ஒன்று!


பொதுவாக நாம் சிற்பத்தின் அளவைக்காட்ட ஏதேனும் தெரிந்த பொருளை உபயோகிப்பது வழக்கம், முக்கியமாக அளவில் மிகவும் சிறிய சிற்பங்களின் அளவை எடுத்துக்காட்ட, அதே போல் பெரிய கோவில் துவார பாலகர் சிற்பத்தின் அளவைக் காட்ட சிற்பி உபயோகித்திருக்கும் யானைக் கூட நினைவுக்கு வரலாம் உங்களுக்கு. ஆனால், இங்கு தற்செயலாகவோ, அல்லது சிற்பத்தின் பெருமையைக் கூட்டுவதற்காகவே, இயற்கையாக கிடைத்த இந்த அரிய தடயம், மனதை கொள்ளை கொண்டுவிட்டது! நீங்களேப் பாருங்கள்.

சிற்பியின் திறமையும், சிலையின் தத்ரூபமும் தான் இந்தக் கொசுவை ஏமாற்றி விட்டதோ! பாவம் படைத்தவனின் குருதியையே ருசிப் பார்க்க துளையிட முயற்சி செய்கிறது போலும்!!

இந்தப் பதிவும் இதில் உள்ள சிற்பங்களும் தங்கள் மனதை நிச்சயம் கொள்ளை கொண்டிருக்கும், அவ்வாறு இருந்தால் இந்தக் கொள்ளை அழகை பேரூர் செல்லும் யாவரும் கண்டு மகிழ வேண்டும் என்று நினைத்தால், இந்தப் பதிவை நண்பர்களோடும், நல்ல உள்ளம் கொண்ட அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள், அப்படியாவது சில நல்ல உள்ளங்கள் சேர்ந்து இரும்புச் சிறையில் இருக்கும் இந்த அழகுச் சிலைக்கு கண்ணாடிக் கூண்டு கிடைக்க வழி பிறக்கட்டும்.

திருச்சிராப்பள்ளி – மலைக்கோட்டை குடைவரை – லலிதாங்குர பல்லவேஸ்வர கிருஹம்

மலைக்கோட்டை – இரண்டு குடைவரைகளில் முதல் குடைவரை

தொலைவில் இருந்தே பிரமிக்கவைக்கும் மலைக்கோட்டை , திருச்சிராப்பள்ளியின் நடுவில் கம்பீரமாக விஸ்வரூபம் எடுக்கும் மலை – இப்படி மொட்டை பாறைகள் கொண்ட மலைகளில் ஏதோ ஒரு வசீகரம் உள்ளது. சரி, அன்னபூர்ணா அவர்களின் புண்ணியம், இன்று வெகு நாட்களாய் போட விட்டுப் போன பதிவு , அவர் தூண்டுதலினால் வெளிவருகிறது. பல மாதங்களுக்கு முன்னரே பதிவாகி இருக்க வேண்டும், நானும் அரவிந்தும் சென்ற டிசம்பர் மாதத்தில் சென்ற போது கூட முயற்சி செய்தோம், என்னவோ எங்கள் பாக்கியம் – யாராவது ஒருவர் நடுவில் வந்து படம் எடுக்காமல் செய்துவிட்டார்கள் – இந்த படிகளைப் பார்த்தவுடன் மக்களுக்கு ஒரு தொய்வு – உடனே அமர்ந்துவிடுகின்றனர் – நல்ல செங்குத்தான மலையை பாதி வழி ஏறிய களைப்பு. எங்கள் கோபம் அவர்கள் மீது அல்ல, சில ஜோடிகள் – நாங்கள் ரசனையுடன் படம் எடுக்கிறோம் என்று தெரிந்தும், இல்லை, அவர்களது மயக்க நிலையில் தன்னிலை மறந்து லயித்து இருந்தனரோ என்னவோ – அடை மழையில் நனையும் எருமைகள் போல நகர மறுத்தனர். எவ்வளவோ முயற்சி செய்து கடைசியில் சில கோணங்களை அரை மனதுடன் விட்டு விட்டு கிளம்பிவிட்டோம். ( காதல் ஜோடிகள் மீது கோபம் இல்லை – எனினும் புராதான சின்னம், ஒரு ஆலயம், சுற்றிலும் இருப்போர் என்று அனைத்தையும் கடந்து அவர்கள் இருந்த சல்லாப கோலம் சற்று நெருடலாக இருந்தது – வேறு இடம் கிடைக்கவில்லையா என்று கேட்டுவிடலாம் என்று வாய் வரை வந்துவிட்டது)

பிறகு நண்பர், ஸ்ரீராம் உதவியுடன் ஏனைய படங்களையும் எடுக்க முடிந்தது. என்ன செய்வது, இந்த மேல் குடைவரைக்குக் கீழே இருக்கும் குடைவரை நிலைமை தேவலாம். அங்கே எவரும் செல்வதே இல்லை. இப்படி கண்ணில் பட்டு மரியாதை கெட்டு இருப்பதை விட அப்படி கண்ணிலும் நினைவிலும் இல்லாமல் இருப்பதே நல்லது. ( கீழ் குடைவரையை அடுத்த பதிவில் பார்ப்போம் )

இந்த பல்லவர் கால மல்டிப்ளெக்ஸ் , மகேந்திர பல்லவரின் உன்னத படைப்பு – லலிதாங்குர பல்லவேஸ்வர கிருஹம், பல்லவனின் குடைவரைகளில் மிகவும் தென் திசையில் உள்ள குடைவரை – உச்சி பிள்ளையார் கோயில் வளாகத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயம் இது. பல வகைகளில் உன்னதமான படைப்பு. லலிதாங்குரன் என்பது மகேந்திரரின் ஒரு பெயர் – அழகும் வசீகரமும் சொட்டும் பெயர். இங்கே தான் அவர் தான் வேறு மதத்தை விட்டு சைவ – லிங்க வழிபாட்டு வகைக்கு திரும்பினேன் என்று தானே சொல்லும் கல்வெட்டு உள்ளது. இன்றைய காதல் புறாக்களுக்கு தெரியுமோ இல்லையோ, அவர் வெட்டி உள்ள வரிகளில் உள்ள அர்த்தம் – அதையும் அடுத்த பதிவில் பார்ப்போம். குடைவரைக்குள் செல்வோம்.

பல்லவர்கள் நமக்கென விட்டுசென்ற சிற்பங்களில் அவர்கள் அழகு சேர்த்த சோமாஸ்கந்தர் வடிவத்தை நாம் தொடர்ந்து பதிவுகளில் பார்த்து வருகிறோம், இன்னும் ஒன்று சிவ கங்காதர வடிவம். இந்த குடைவரையில் நாம் பார்க்கும் இந்த வடிவம் மிகவும் அழகானது மட்டும் அல்லாமல் மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும் இருக்கலாம்.

பல்லவன் இவ்வளவு தூரம் வந்து, அதுவும் சோழர் தேசத்திற்குள் வந்து, இந்த மலையில் தங்கி , குடைந்து (இங்கும் மற்ற மகேந்திரர் குடைவரைகள் போல் அருகில் சமணர் படுக்கை உள்ளது !!) – இந்த பதிவிற்கு திரு நாகசுவாமி அவர்கள் மற்றும் திரு சுவாமிநாதன் அவர்களின் இடுகைகளை கொண்டு விளக்க முயற்சிக்கிறேன். திரு சு்வாமிந்தன் அவர்கள் குடைவரை பற்றி சொல்லும் பொது ” இந்த மலை தாயுமானவர் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் , மற்ற ஆலயங்கள் , கடைகள் அனைத்தும் இல்லாத பொது எப்படி இருந்திருக்கும், அப்போது மகேந்திரர் இந்த இடத்தை சுமார் இருநூறு அடி உயரத்தில் தேர்ந்தெடுத்து , தனது சிற்பிகளை கொண்டு எப்படி செதுக்கினார் என்று யோசிக்கவேண்டும். இந்த குடைவரையிலும் பல புதிர்கள் உள்ளன “ என்கிறார்.

குடைவரை முகப்பு – நான்கு தூண்கள் மற்றும் இரு பக்கங்களிலும் இரு அரை தூண்கள் உள்ளன. மற்ற்படி பெரிய அலங்காரங்கள் மிகுதியாக முகப்பில் இல்லை. தூண்கள் மகேந்திர காலத்து பாணி என்பதை அவற்றின் தடிமனான தோற்றம், சதுரம் , கட்டு , சதுரம் – சரி, தூண்களை பற்றி இன்னும் விரிவாக படிக்கும் பக்குவம் நமக்கு வந்துவிட்டது – மேலே படியுங்கள்.

1. சதுரம் அல்லது நான்முகத்தூண் அல்லது பிரம்மகாந்தத்தூண்
2. கட்டு அல்லது எண்பட்டைத்தூண் அல்லது விஷ்ணுகாந்தத்தூண்
3. கட்டு அல்லது பதினாறு பட்டைத்தூண் அல்லது இந்திரகாந்தத்தூண்
4. வட்டம் அல்லது ருத்ரகாந்தத்தூண்

ஒரு தூண் மேற்சொன்ன ஏதோ ஒரே ஒரு வடிவத்தில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரே தூணில் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் கூட வரலாம். மேலே உள்ள தூண்கள் கீழே சதுரமாகவும், நடுவில் எண்பட்டையாகவும், மேலே மீண்டும் சதுரமாகவும் அமைந்திருப்பதால் அதை, சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பிலமைந்த முழுத்தூண் என முழுமையாக வரையறுக்கலாம். அப்படியானால் அந்த அரைத்தூண்கள்? அவை நான்முக அரைத்தூண்கள். இந்தத் தூண்களின் நீட்சிதான் பாதபந்தத் தாங்குதளத்தின் கண்டப் பகுதியில் காணப்படும் பாதங்களாகும்.

தூண்களுக்கு தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை போன்ற பல உறுப்புகள் இருக்கின்றன
( நன்றி வரலாறு. காம்)

தூண்களின் நாலு பக்கங்களிலும் தாமரை பதக்கங்கள் உள்ளன.

மகேந்திரர் பட்டப் பெயர்கள் பல்லவ க்ரந்தத்திலும் சில இடங்களில் தமிழிலும் தூண்களில் செதுக்கப்ப்டுள்ளது.

வெளி தூண்களை கடந்து உள்ளே படியேறி மண்டபத்திற்குள் செல்வோம். மண்டபத்தின் பின்னால் முன்னாள் இருப்பது போலவே நான்கு தூண்கள் உள்ளன. இடது புறம் கம்பீர கங்காதர வடிவம், வலது புறம் இருபுறமும் அழகிய வாயிற் காவலர்கள் கொண்ட தற்போது காலியாக உள்ள கருவறை மண்டபம் .

இந்த அற்புத கங்காதர வடிவத்தை அடுத்த பதிவில் மெதுவாக பார்ப்போம். எனக்கு மிகவும் பிடித்தமான சிற்பம், அழகினால் மட்டும் அல்ல – அதை நான் அறிந்த அன்று தான் நான் எனது சரித்திர / சிற்ப பயணத்தில் இரண்டு முக்கிய – அருமையான மனிதர்களை சந்தித்தேன் – திரு சுந்தர் பரத்வாஜ் மற்றும் திரு திவாகர் – திவாகர் அவர்களின் நூல் வெளியீடு – விசித்திர சித்தன் – சரித்திர புதினம் – மகேந்திரரின் ஆரம்ப கால கதை, நூலின் முகப்பில் அதே கங்காதர வடிவம்.

முதில் இரண்டு வாயிற் காவலர்களையும் பார்ப்போம். இருவரும் மிகவும் அழகு.

ஒரு பக்கமாக திரும்பி நிற்கும் பல்லவருக்கு உரித்தான பாணி, இரண்டு கரங்கள், ஒரு கால் சற்றே மடித்து, ஒரு கை ஒய்யாரமாக கதை அல்லது உருள் தடியை அலட்சியாமாக கொண்டு – நாம் முன்னர் மண்டகப்பட்டு குடவரையில் பார்த்ததைவிட சற்று மெலிந்து காட்சி அளிக்கின்றனர். மிகவும் தேய்ந்து போன சிற்பம் என்றாலும் அணி ஆபரணம் என்று – ஒரு தனி அழகுதான்.

கருவறை கதவு பூட்டப்பட்டு இருந்தது சற்று வேடிக்கை தான். இன்றைய நிலை அப்படி. புரியவில்லையா – அது வேறு கருவறை – உள்ளே ஒன்றும் இல்லை , பிற்கால பல்லவர் வேளைகளில் தான் சோமாஸ்கந்தர் வருகிறது, கருவறையில் பாண்டியர் குடைவரைகளில் தான் லிங்கம் ஒரே கல்லில் செதுக்கப் படும் – பல்லவர் காலத்தில் வேறு கல் லிங்கம் தான். அப்படி இருக்க எதற்கு கதவு – பூட்டு – எல்லாம் நமது குடி மகன்களில் தொல்லையை தாங்காமல் தான். என்ன ஒரு வெட்கக் கேடு !!

சரி , குடைவரையில் புதிர் இருக்கிறது என்று சொன்னேனே – புதிர் இல்லை, புதிர்கள் உள்ளன – முதல் புதிர் இதோ. அப்படி லிங்கத்தை கருவறையில் பொருத்த துவாரம் ஒன்று இருக்கும். இங்கே தரையின் நடுவில் அதே போல ஒரு துவாரம் உள்ளது – ஆனால் அதை அடுத்து வலது புறத்தில் இன்னும் ஒரு துவாரம் உள்ளது.

மூடி இருந்தால் நமக்கு உள்ளே என்ன இருக்கும் என்பதை பார்க்காமல் போவோம் – என்று நண்பர்கள் வலைக் கதவை நெம்பி பெயர்த்து எடுத்து உள்ளனர். குடி மகன் ஆயிற்றே – துவாரத்தை பார்த்தவுடம் குப்பை தொட்டி என்றி எண்ணி பாட்டிலை எரிந்து விட்டு சென்றுள்ளனர். இரு துவாரங்கள் படத்தின் கீழ் பாதியில் தெரியும்.

அடுத்த பதிவில் மற்ற அற்புதங்களை பார்ப்போம்.

ஒரு ஊசியைத் தேடி – சிற்பத்தின் நுணுக்கம் – பேரூர்

பேரூரில் பல அற்புத பிரம்மாண்ட சிற்பங்கள் இருந்தாலும், சென்ற பதிவில் பார்த்தது போல், சில சிறிய அளவிலான சிற்பங்களும் உள்ளன. முதல் பார்வையில் பெரிதாக ஒன்றும் இல்லை என்று கருதத் தோன்றும் சிற்பம்தான், ஆனால் திரு. பத்மவாசன் போன்றவர்கள் நமக்கு எடுத்துச் சொன்னால் தான் புரியும் அதன் அருமை!

பலரும் இந்த வழிச் சென்றும் ஒரு விநாடிக் கூட இந்த சிற்பங்களை பார்க்காமல் போகின்றனரே என்று சொல்லும் எங்களுடைய கண்களுக்குமே எடு படாத சிற்பம். நல்லதொரு பாடமாக எங்களுக்கு இது அமைய வேண்டும் என்பதனாலோ என்னவோ, விட்ட படங்களை மீண்டும் எடுக்க பட்ட பாடு!!! இனி எந்த சிற்பத்தையும் குறைவாக எடை போடக் கூடாது என்ற பாடம் மண்டையில் ஆணி அடித்தாற்போல உறைத்து விட்டது.

திரு. பத்மவாசன் அவர்கள் தான் வரைந்த ஓவியத்தை கொண்டு சிற்பத்தின் உன்னதங்களை விளக்கினார்.

முதலில் எளிதாக தெரியும் அடையாளங்களை பார்ப்போம்.

ஒரு யோகியின் தவம். ஒரு காலை மடித்துப் புரிகிறார் கடுந்தவம். ஒரு சில தடயங்களை வைத்து அது யார் என்பதை நாம் எளிதாக அறியலாம்.


தோள்களில் ஒரு வில், பின்னால் ஒரு காட்டுப் பன்றி, ஆம் இது அர்ஜுனன்தான், ஈசனின் பாசுபத அஸ்திரம் பெற அவன் கடுந்தவம் புரிந்த காட்சி.

புடைப்புச் சிற்பத்தின் மிகவும் குறுகிய அமைப்பினுள் சிற்பி வில்லை வடித்துள்ள விதம் மிகவும் அருமை. பக்க வாட்டில் நின்று பார்த்தால் தெளிவாகத் தெரியும்.

ஆனால் இதையும் விட நுணுக்கமாக, சிற்பத்தில் ஒரு உன்னத அமைப்பு உள்ளது. அர்ஜுனனின் கடுந்தவத்தை குழப்பமின்றி விளக்க சிற்பி செய்த யுக்தி. அது என்ன?கீழுள்ள படத்தைப் பாருங்கள்.

படத்தில் ஏதாவது வித்தியாசமாக தெரிகிறதா? பொதுவாக சிற்பி காட்சிகளை சிற்பத்தின் சட்டத்திற்குள் சமமாக சித்தரிப்பான். ஆனால் இங்கு ஒரு காலின் பாதம் மட்டும் சற்று சட்டத்தை விட்டு வெளியே வருமாறு உள்ளது!. ஏன்? விரல்களையும், நகங்களையும் கனக்கச்சிதமாக வடித்துள்ளானே அதன் அழகைக் காட்டவா? சற்றே கூர்ந்து கவனித்துப் பாருங்கள்.

காலின் கட்டைவிரலுக்கு அடியில் ஏதேனும் தெரிகிறதா? இன்னும் பிடிபடவில்லையா! இதோ திரு. பத்மவாசன் தெளிவாகத் தருகிறார் பாருங்கள்…

ஆஹா! அர்ஜுனன் ஊசி முனையில்தவம் செய்யும் காட்சி!

நம் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த அழகை சரியான கோணத்தில் ரசிக்க படங்களை எடுத்து அனுப்பி உதவிய திரு ப்ரவீனுக்கு மிக்க நன்றி. விளக்க இப்படி அழகான படங்கள் இருக்க வார்த்தைகள் எதற்கு?!

பேரூர் தொடர் – ஒரு தவத்துடன் துவக்கம்

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் – பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் சென்ற பொது அங்கு இருக்கும் சிற்பங்களை கண்டு நான் அசந்து போனேன்! கண்முன்னே இருப்பது என்ன என்று திணறி நின்றேன். சிற்பக் கலையில் ஆர்வம் பெருக, எனது தேடல் பேரூர் சிற்பங்களின் மேல் இருந்த மதிப்பை பன்மடங்கு பெருக்கியது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவற்றை படம் பிடிக்க செய்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. அவற்றை படம் எடுக்க அனுமதி இல்லை. நாளேட்டில் வந்த சிறு சிறு படங்களையே பதிவு செய்ய முடிந்தது. எனினும், ஒவ்வொரு தோல்வியும், மீண்டும் அடுத்த முறை அங்கு சென்று அதிகாரிகளிடம் முறையிடும் வேகத்தை கூட்டியது. இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன.

2008 ஆம் ஆண்டு, சிங்கையில் அன்னலக்ஷ்மி நிறுவனம் ஒரு விழா எடுத்தது. வேண்ட வெறுப்பாக மனைவி மகனுடன் ஒரு சனிக்கிழமை அங்கு சென்றேன். எங்கே எப்படி வெளியே நழுவலாம் என்று எத்தனிக்கும் போது, ஒரு கோடியில் – தொலைவில் – மிகவும் அழகான விநாயகர் ஓவியங்கள் தென்பட்டன. இது போல

http://www.hindu.com/mp/2007/06/09/images/2007060951460301.jpg

என்னையும் அறியாமல் அருகே சென்றேன். அருமையான ஓவியங்கள், மிக நுண்ணிய வேலைபாடு, படங்களின் அடியில் ஒரு கையெழுத்து – பத்மவாசன். ஆஹா , என் அதிர்ஷ்டம் என்று நினைக்கையில், அருகில் ஒரு சிறு அறிவிப்பு பலகை தென்பட்டது. அதில் ஓவியர் அங்கு இருப்பதாகவும், உடனே நம் முகங்களை வரைந்து தருவார் என்றும் அறிவித்தது. சுற்றி பார்த்தேன், அடுத்த கடையில் ஓவியர் எங்கே என்று கேட்க, அதோ என்று கையை காட்டினார். மிகவும் எளிமையான குர்தா அணிந்து சாந்தமாக சிரித்த முகத்துடன் – திரு. பத்மவாசன் அங்கே நின்று நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டிருந்தார்.

அருகில் சென்று, என்னை நானே அறிமுகம் செய்துக்கொண்டேன். பொன்னியின் செல்வன், கல்கி, ஓவியர் சிகரம் சில்பி என்று நடை களைகட்டியது. சில்பியின் சிஷ்யன் என்ற முறையில் அவரைப் பற்றிய பல அரிய தகவல்களை கூறினார். நடராஜர் சிலை உருவத்தை வரையும் போது, காகிதம் குறைவாக இருக்க, இன்னொரு காகிதத்தை எடுத்து ஒட்டி தொடர்ந்தார் எனவும். இன்னொரு காகிதத்தில் அதே நடேசனின் பின் வடிவத்தை வரைந்தாராம் சில்பி. இரு காகிதங்களும் இதனால் ஒரே அளவில் இல்லாமல் போயின. பல வருடங்களுக்கு பின், திரு. பத்மவாசன் அவர்கள் ஒரு புத்தகத்திற்காக அவரது கணினியில் ஒரே அளவாக பெரிது படுத்தி, இரு ஓவியங்களையும் ஒன்றின் மேல் மற்றொன்றை வைத்து பார்த்தால் கணக்கட்சிதமாக பொருந்தின என்று அவர் அந்த அற்புத ஓவியரின் சிறப்பை விளக்கினார்.

பிரியும் போது தனது முகவரியையும் தொலைப்பேசி என்னையும் ஒரு சிறு காகிதத்தில் பென்சிலில் எழுதிக் கொடுத்தார். ( இன்றும் வைத்துள்ளேன் !!)

டிசம்பர் 2009. மீண்டும் பேரூர் நோக்கிப் படை எடுத்தோம். எப்படியாவது படம் எடுக்க அனுமதி பெற வேண்டும் என்ற வெறியோடு – தெரிந்த நண்பர்கள் பலரிடம் உதவி கேட்டேன். நண்பர்கள் பலர் முயன்றும், ஒன்றும் நடக்கவில்லை. எல்லோரும் ஆலயத்தின் அறநிலைத்துறை அதிகாரி மனது வைத்தால் தான் ஒரே வழி என்று சொன்னார்கள். எவ்வளவோ பண்ணிட்டோம், இதையும் பண்ணிவிடுவோம் என்று அவரது அலுவலகம் முன் சென்று நின்றோம். ஒரு ஒரு மணி நேரம் காத்திருந்த பின் உள்ளே அழைத்துச் சென்றார்கள். சிறு வயது அதிகாரி, எதிர்பார்த்ததை விட டிப் டாப்பாக உடை அணிந்து மலர்ந்த முகத்துடன் வரவேற்றார். சின்ன அலுவலகம், எனினும் நான்கு கணினிகள் சுற்றிலும், கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. முதலில் மறுத்தார், ஆலய பாம்ப்லெட் கொடுத்தார், அதில் இருக்கும் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். எனினும் நான் ஏற்கவில்லை, எனது மடிக் கணினியை திறந்து, செய்து வரும் பணிகளையும், பட சேகரங்களையும் விளக்கினேன். ஒரு மணி நேரம் போனது, கல்லும் கரையும், என்பது போல அதிகாரியும் எங்கள் பணியின் பொருளை உணர்ந்து அனுமதி தந்தார். கட கட என்று வேளையில் இறங்கினோம். அப்போது மின்சாரம் போனது…எனினும் அடுத்த நாளும் சென்று படம் எடுத்து முடித்தோம். எல்லாவற்றையும் எடுத்து விட்டோம் என்ற மிதப்போடும் வெகு நாள் இலக்கு நிறைவேறிய மன நிறைவுடன் திரும்பினோம்.

அடுத்த வாரம், சென்னையில், திரு. பத்மவாசன் அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்தேன். படங்களை எல்லாம் நிதானமாக பார்த்தார். கண்களில் சிறு பிள்ளை கடையில் கமர்கட் பாட்டிலை பார்ப்பது போல, அனைத்தையும் வரைந்து விட வேண்டும் என்று நினைத்தார் போல.பேரூர் படங்களை பார்த்தவுடன் – விடு விடு என எழுந்து உள்ளே சென்றார் – சிறிது நேரத்தில் பல ஓவியங்களை கொண்டு வந்தார். தான் பேரூர் சென்ற போது வரைந்த ஓவியங்கள் என்றும் படம் எடுத்து போடுங்கள் என்றும் சொன்னார். கரும்பு கடிக்க கூலியா. முதலில் கண்ணில் பட்டது மூலவர் – வண்ணம் தீட்டிய ஓவியம்.

அசந்து போனேன். இப்படி அந்த தாமர வண்ணம் அதன் பொலிவு – எப்படித்தான் கொண்டு வந்தாரோ?

அடுத்து சில தூண் சிற்பங்களின் ஓவியங்களை படம் பிடிக்கும் பொது, இது ஒரு சிறப்பான சிற்பம் என்றார். இதை நான் பேரூரில் பார்த்த பொழுது ஒன்னும் பெரிதாக இல்லை என்று படம் கூட எடுக்க வில்லையே என்றவுடன், அதன் சிறப்பை விளக்கினர். தலையில் குட்டிக்கொண்டு திரும்ப படம் எடுக்க வேண்டுமே என்று திண்டாடிய பொழுத, நண்பர் பிரவீன் அவர்கள் உதவினார். நேற்று இதற்காகவே பேரூர் சென்று அதிகாரியை பார்த்து, தொலைபேசியில் அழைத்து சிலை இருக்கும் இடம் கேட்டு, படம் எடுத்து அனுப்பினார்.



அப்படி இந்த தூண் சிற்பத்தில் என்ன விசேஷம். ஏதோ முனிவர் தவம் செய்வது போலத் தானே உள்ளது

தொடரும். ….

சோழ ஓவியன் vs டா வின்சி

சமீப காலங்களில் தஞ்சை பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள் பற்றிய நிறைய தகவல்கள் நாளேடுகளில் வருகின்றன. இந்த ஆயிரம் ஆண்டு ஓவியங்கள் என்பது ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு இருபத்தி எட்டு வயது இளைஞர் , திரு S. K. கோவிந்தசுவாமி அவர்கள் , கண்டு பிடித்தார் என்பது பலரும் அறியாத ஒன்று. நல்ல வேளை, ஹிந்து நாளேடு ச்மீபத்தில் கூட இதை வெளியிட்டு அவரை சிறப்பித்து உள்ளது,

ஹிந்து

ஆனால் எண்பது ஆண்டுகள் ஆகியும், இந்த ஓவியங்கள் இன்னும் ஒரு புத்தகமாகவோ , இணையத்திலோ தென்படவில்லை. ஒரு சில முயற்சிகளும் காப்புரிமை பிரச்சனைகளில் சிக்கி தவிக்கின்றன. தஞ்சை சென்றாலும் கூட சாமானியர்களுக்கு இந்த ஓவியங்கள் பார்க்க அனுமதி இல்லை !! அப்படி இருக்க இந்தப் பதிவை, ஏற்கனவே வெளிவந்த ஒரு சில படங்களை மற்றும் கோட்டோவியங்களை கொண்டும் இடுகிறேன், எனினும் மனதில் ஒரு நெருடல் – வரைந்த ஓவியனே அதற்கு தன் பெயரை இட்டு சொந்தம் கொண்டாடவில்லை – அப்படி இருக்க நாம் யார் அவற்றின் வெறும் புகை படங்களுக்கு காப்புரிமை போட, மக்கள் பலரும் ரசிக்க இந்த பொருளாதார நோக்கங்கள் கொண்ட தடை எதற்கு?.

சோழ ஓவியனின் ஒப்பற்ற கலைத் திறனை நாம் இன்று பார்க்க, அந்த ஓவியங்களின் ஒரு சிறு பாகத்தை மட்டுமே எடுத்துக்கொள்கி்றேன் – சுந்தரர் ( இந்திரனின் வெள்ளை யானையின் மேல்) சேரமான் பெருமாளுடன் ( வெள்ளைப் புரவியின் மேல் ) கைலாயம் செல்லும் காட்சி. இதை பற்றி பல அறிஞர்கள் எழுதியுள்ளனர், ஏன் ஒரு சில முனைவர் பட்டத்துக்கான ஆய்வுகள் கூட செய்திருக்கிறார்கள் என்று செவி வழி செய்தி – எனினும் என்ன செய்வது – நமது பல்கலைக் கழகங்கள் இந்த ஆய்வுகளை பகிர்வதில்லை – இப்படி ஆய்வேடுகள் கிடங்கில் தூங்குவதில் யாருக்கு என்ன பயன் ?

சரி, பதிவுக்கு வருவோம் – இந்த ஓவியம் – அதிலும் ஒரு சிறு பாகத்தை மட்டுமே நாம் பார்க்க போகிறோம். சேரமான் பெருமாள் மற்றும் அவர் வெண் புரவி.


படங்கள்:
http://ngm.nationalgeographic.com/2008/01/india-ancient-art/behl-photography

மேலே செல்லும் முன்னர், ஓவியத்தில் இந்த பகுதியை மட்டும் ஏன் எடுத்தேன் என்பதற்கு விளக்கம். புரவிகளுக்கு ஒரு தனி ஈர்ப்பு சக்தி உண்டு, வலிமை பொருந்திய தசைகள், அவற்றை பிரதிபலிக்கும் மேல் தோல், நளினத்தை சொட்டும் அங்க வளைவுகள், காற்றில் பறக்கும் ரோமங்கள்…இப்படி பல. கலைஞனின் பார்வையில் இவை ஆண்டவனின் படைப்புகளில் மிகவும் அழகு ( பெண்களுக்கு அடுத்து !!) டா வின்சி புரவிகளை வரையவும் உலோகத்தில் வடிக்கவும் – தசை, நரம்பு, எலும்பு என்று அணு அணு வாக பிரித்து பார்த்து படிக்கிறார். அவரது கடைசி நிறைவேறா வேலை – இருபத்தி நான்கு அடி உயரமுள்ள வெண்கல புரவி. இதனை பற்றி சமீபத்தில் தொலைகாட்சியில் பார்த்தேன். பார்த்து விட்டு அதை பற்றி மேலும் படிக்க இணையத்தில் தேடிய பொது, அவரது பல புரவி ஓவியங்கள் கிடைத்தன. ஒவ்வொன்றாய் பார்க்கும் போது, எங்கோ இதே போல பார்த்த நினைவு வந்தது. ….எங்கு? முதலில் அவரது ஓவியங்களை பாருங்கள்


படங்கள் : இணையத்தில் இருந்து எடுத்தவை.

சரி, இப்போது பெரிய கோயில் ஓவியத்துக்கு வருவோம். அறிஞர் திரு C. சிவராமமுர்த்தி அவர்கள், ஒரு மகான். கலை உலக ஜாம்பவான். அதுவும் சோழர் கலை என்றால் அவருக்கு ஒரு தனி பிரியம். இந்த ஓவியத்தை பற்றி அவர் என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள் ( நமக்கென்று அவர் இந்த வடிவத்தின் கோட்டோவியத்தையும் தீட்டி தந்துள்ளார்.)

http://www.yabaluri.org/TRIVENI/CDWEB/SomeFrescoesoftheCholasnov33.htm

புரவியின் மெது இருக்கும் ஆளின் வடிவமும் மிக அழகு. ஒரு கையில் கடிவாளத்தையும் மறுகையில் தடி என்று அவர் பிடித்திருக்கும் வண்ணம் நளினம் ததும்புகிறது அந்தக் குதிரை ST. எகிடோ சண்டை காட்சி போல தோற்ற ஒற்றுமை இருக்கிறது. இன்றைய நவீன பார்வையில் இந்த ஓவியத்தில் சில குறைபாடுகள் இப்பது போல தெரிந்தாலும், ஒன்றை மனதில் நாம் வைத்துக்கொள்ள வேண்டும், எந்த தலை சிறந்த ஓவியனும் விமர்சனத்திற்கு அப்பார்ப் பட்டவன் அல்ல, எனினும் இந்தனை ஆண்டுகளுக்கு முன்னரே, மிருகங்களை இப்படி நேர்த்தியாக வடிக்கத் தெரிந்த ஓவியனும் அவனது அற்புத திறனும் ஒரு அறிய விஷயம். இன்னும் ஒரு அத்தாட்சி அருகில் இருக்கும் யானை

( யானை அடுத்த பதிவில் பார்ப்போம் )

அவரது ஓவியத்தை சற்று சரி செய்து இங்கே இடுகிறேன். ( ஓவிய நண்பர்கள் இதனை சோழர் பாணியிலே வண்ணம் தீட்ட முயற்சி செய்யலாம்!!)

திரு C. சிவராமமுர்த்தி , சொன்ன திரு போலோ அவர்களது ஓவியம் இதோ

நடுவில் இருக்கும் வெள்ளை புரவிக்கும் நமது புரவிக்கும் உருவ ஒற்றுமை வண்ண ஒற்றுமை அபாரம். எனினும் டா வின்சி அவர்களது படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து பெரிய கோயில் ஓவியத்துடன் ஒப்பிடும்போது – ஒவ்வொரு அம்சமும் – அங்கமும் – அழகாக வளையும் பின் முதுகு, பின்னங் கால்களின் சித்தரிப்பு, திரண்ட மார்பு, கம்பீரமான தலை, செதுக்கி விட்டாற்போல பிடரி , பிளிரும் முன்னங் கால்கள், கனக்கச்சிதமான இடை – நடை , மூட்டு மடிப்புகள், குளம்பு – அருமை.

பெயரில்லா சோழ சிற்பியே , உனக்கு கலைக்கு நிகர் இல்லை. உன் அற்புத கலைக்கு உலகம் தலை வணங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

பின் குறிப்பு: தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகளின் பொது அதிகாரிகள் இந்த அற்புத ஓவியங்கள் ஒரு தொகுப்பாக வெளியிட அடியேனின் சிறு கோரிக்கை – இந்த பதிவின் மூலம்.

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே … கல் வட்டம்

மனிதக் கலாசாரத்தின் பிறப்பிடம், வானத்தில் காற்றில் பறக்கும் ஒரு பட்டம் போல – பலர் இந்த பட்டதை பிடிக்க பெரும் முயற்சி செய்கின்றனர்.

சரியான ஆதாரங்கள் இல்லாதபோது, தாங்கள் எழுதியதற்கு துணையாக, தாம் சொல்லியவற்றை சரியென அவற்றை எடுத்து நிறுத்த, கடல் கொண்டமை , எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்களை தங்கள் துணைக்கு அழைத்துக் கொள்கின்றனர். ஒரு சமூகத்தின் முகவரி கூட இல்லாமல் செய்யும் இயற்கை கூற்றுகள் எப்படியோ அவனது நினைவுகளை மட்டும் விட்டு விடுகின்றன. எது நிஜம் என்பதை மனிதனின் தொழில் நுட்ப வளர்ச்சிகள் – தெளிவாக கால அட்டவணை நிர்ணயம் செய்யும் யுத்திகள், ஆழ் கடலில் சென்று ஆய்வு செய்யும் இயந்திரங்கள், அரசாங்க உதவி – போன்றவை வெளி கொணரும். அப்படி ஏதாவது எனது இன்றைய பதிவை தவறு என்று காட்டினால் நானும் மகிழ்ச்சி அடைவேன்.

இது ஒரு வியாதி. தங்களது காலாச்சாரமே மிகவும் தொன்மையானது என்பதை ஒரு வெறித்தனமாக கூறுவது. அதற்காக இவர்கள் எதையும் செய்வார்கள். இது ஒரு நாட்டிருக்கோ , சமூகத்துக்கோ அல்ல – பொதுவாக பாரெங்கும் இது பரவி உள்ளது. தாங்கள் தான் மூத்தவர், மற்றவர் அனைவரும் தங்களுக்கு கீழ் நிலை என்று காட்டுவதில் இவர்களுக்கு ஒரு போதை. எனினும் சில பல சமயங்களில் உண்மை நம் கண் முன்னே இருக்கும்போது, நாம் அதை ஏற்கும் மனப்பக்குவம் கொள்ள வேண்டும். அப்படி பட்ட பதிவு தான் இது.

இப்படி அனைத்திற்கும் சாட்சியங்கள் தேடுவதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அதையும் சொல்ல வேண்டியது தான். இன்றைக்கு நமக்கு இருக்கும் அறிவுத் திறன், தொழில் நுட்பம் – இவையால் விளக்க முடியாத சில புதிர்களும் உண்டு. அப்படி ஒரு புதிரே நாம் இன்று பார்க்கும் கல் வட்டங்கள்.

கல் வட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், மலையடிப்பட்டி நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தோம். அப்போது, ஒரு பெயர் பலகை. மிகவும் பழக்கமான வண்ணம் – பலகை. பலகை மிகவும் சிதைந்து இருந்தாலும் பலமுறை பார்த்த ஒன்று என்பதால் உடனே வாகனதை நிறுத்தினோம்.

ஆம், தொல்லியல் துறை அறிவிப்பு / எச்சரிக்கை பலகை. ஆனால் அருகில், கோயிலோ , இடிபாடுகளோ எதுவும் கண்ணுக்கு தென்படவில்லையே என்று சற்று குழம்பி நிற்கும் பொது.

அதோ பின்னால் இருக்கிறதே, ஒரு அழகிய கல் வட்டம். சுமார் 1000 இருந்து 300 BCE ஆண்டு என்று சரித்திர கூறுகள் காலம் கணிக்கும், இவை நமது முன்னோர் இறந்தவரின் ஈம பொருள்களை தாழிகளில் புதைத்து , அதனை சுற்றி அடையாளமாக இந்த கற்களை வைத்தனர் எனக் கூறப்படுகிறது.

இதில் என்ன அதிசயம் என்றால், இந்த வகை கற்கள் அருகாமையில் எங்கும் இல்லை. இந்த வட்டங்கள் இருக்கும் இடத்தை விட்டு பத்து அல்லது இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுத்து வரப்பட்டவை. ஏதோ ஒரு மூதாதையர் வழிபாடு முறையை ஒட்டி உள்ளது.

இந்த அழகு – அந்த வட்டம் இன்றும் நம் முன்னே இருப்பது தான்.

அதை ரசிக்கும் அதே தருணத்தில், ஒன்றை நாம் கவனிக்க வேண்டும், இவை வெறும் கற்கள் தான். எந்த பெரிய வேலை பாடும் அவற்றில் இல்லை. உள்ளே கிடைத்த தாழிகளில் பொருட்கள் இருந்தன – உண்மை தான். ஓட்டில் சில எழுத்துக்கள் இருந்தன என்று இன்று கூட நாளேட்டில் செய்தி வந்தது , எனினும்…..

மீண்டும், நான் முதலில் சொன்னததப் போல, கண்டிப்பாக தென்னகத்தில் இரு முறையாவது பெரிய கடல் கொண்ட சரித்திரம் உள்ளது. பெரும் பகுதி அழிந்து, அதனால் முதல் இரு சங்கங்களும் களைந்து, பாண்டிய மன்னன் மதுரையை இன்றைய தென்னிந்திய நிலப் பரப்பின் நடுவில் நிறுவினான் என்றும் வழக்கில் உள்ளது. அப்படி இருப்பினும், எஞ்சி இருப்போர் திரும்பவும் இப்படி கற்கால / உலோக கால மனிதனை போல பின் தள்ளப்படுவரோ? இது ஒரு இடம் என்று அல்ல, தமிழகம் முழுவதும் இது போல உள்ளன. தொல்லியல் துறை சுட்டியில் சென்று பாருங்கள் !!!

ASI – Megalithic

இந்த புதிர் இன்னும் பெரியது. இது போன்ற கல் வட்டங்கள் உலகத்தில் பல இடங்களில் உள்ளன !! கூகுளாரைக் கேட்டு பாருங்கள்.

எனினும், நான் சொல்ல வந்தது என்ன வென்றால் ( சில நண்பர்கள் இதனை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை ) எனினும் நமது முன்னோர்கள் இந்த கற்களை புதுக்கோட்டையில் உருட்டி வட்டமிடும்போது எகிப்து பிரமிடுகள் புவியில் ஏற்கனவே இரண்டாயிரம் ஆண்டுகள் நின்றுவிட்டன.

சிவானந்த நடனம் – சென்னை அருங்காட்சியகத்தில் திருவாலங்காட்டு நடேச வடிவத்தை கண்ட பிரெஞ்ச் சிற்பி அகுஸ்டே ரோடின் அவர்களது வர்ணனை

ஆடும் கோலத்தி்ல் நடராஜர் சிலையைப் பார்க்கும் அனுபவமே தனி. அந்த அற்புத வடிவத்தை பற்றி பலரும் போற்றி எழுதியுள்ளனர். பொதுவாக அவர்கள் அந்த ஆட்டத்தின் ஆன்மீக கருத்தையும், அந்த ஆட்டம் உணர்த்தும் உட்கருத்துக்கலையை முதன்மை படுத்தி காட்டும் வண்ணமே உள்ளன. எனக்கு மிகுந்த காலமாய் ஒரு ஆசை. இந்த வடிவத்தை ஒரு கலைஞன், ஒரு படைப்பாளி எப்படி வர்ணிப்பான் என்பதை பார்க்கவேண்டும் என்று. தற்செயலாக சென்னை அருங்காட்சியாக நூல் ஒன்றில் ஒரு சிறு குறிப்பு என் ஆர்வத்தை மீண்டும் தூண்டியது. புகழ் பெற்ற திருவாலங்காட்டு நடராஜர் சிலை அழகை கண்டு புகழ் பெற்ற பிரெஞ்சு நாட்டு சிற்பி அகுஸ்டே ரோடின் ஒரு சிறு வர்ணனை வெளியிட்டார் என்றே இருந்தது அந்த குறிப்பு. உடனே பல இடங்களில் தேடி அதை கண்டு பிடித்தேன் – ரசித்தேன்.

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில், அதுவும் அப்போதுதான் நமது அற்புதக் கலை திறமைகளை பற்றி வெளி உலகம் உணர ஆரம்பித்த வேளையில், ஒரு புகழ் பெற்ற பிரெஞ்சு சிற்பி, ஒரு சிலையை பார்த்து லயித்து , புகழாரம் சூட்டுவது மிக அரிது. எங்கோ படித்துள்ளேன் – ஒரு வைரத்தின் பரீட்சை இன்னும் ஒரு வைரத்துடன் தேய்க்கும்போது வைரத்தின் அருமை புலப்படும் என்று – வெறும் கண்ணாடி என்றால் கீறல் விழும், வைரம் என்றால் அப்படியே இருக்கும். இன்றோ இரண்டுமே ஒன்றை ஒன்று மதிப்பை கூட்டி விடுவதை பார்க்கிறேன். ஒரு மகா சிற்பி, அதைவிட அவன் தூய உள்ளம், கலையுடன் தன் வாழ்வையே பிணைத்து சுவாசிக்கும் ஒருவராலேயே – இப்படி ஒரு ரசனையோடு படைக்க முடியும். பொதுவாக கலைஞர்கள் சற்று தலைக்கனம் பிடித்தவர்கள், அவர்களுக்கு தங்கள், தனது சகாக்கள், தனது நாட்டு படைப்பே பெரிது என்ற மனப்பான்மை விமர்சனங்களில் எப்படியாவது வந்து விடும். எனினும் இந்த வர்ணனையின் சிறப்பே அவர் கிரேக்க சிற்பம் வீனஸ் தி மெடிசி யுடன் ஒப்பிடும் நல்ல உள்ளம், மனதை பெருமிதம் கொள்ள செய்கிறது. மேலே படியுங்கள்.

திரு அகுஸ்டே ரோடின் அவர்கள் வர்ணனையில் இரண்டு நடேசர் வடிவங்களை பார்த்ததாக குறிப்பு உள்ளது. அதில் ஒன்று கீழே நீங்கள் பார்க்கும் திருவாலங்காட்டு சிற்பம். மற்றொன்று வேளாங்கண்ணி சிற்பம். அதையும் விரைவில் இங்கு இடுகிறேன். இந்த சிற்பம் சென்னை அருங்காட்சியகத்தில், கண்ணாடி பெட்டியினுள் இருப்பதாலும், அங்கே பார்வையாளர்கள் பார்க்கும் வண்ணமே விளக்கு போடப்பட்டிருப்பதாலும், எங்களுக்கு முக்காலி கொண்டு படம் எடுக்க உத்தரவு கிடைக்கவில்லை என்பதாலும் – படங்கள் சற்று தரம் குறைவாகவும், வெவ்வேறு கோணங்கள் – ஒலி கொண்டு எடுக்க முயற்சி செய்துள்ளோம் ( படங்கள் – நான் மற்றும் நண்பர் அர்விந்த். )

இது 1913 எழுதி , முதல் முறை 1921 ஆம் ஆண்டு எழுத்து வடிவில் வெளிவந்தது. சிறு வர்ணனை என்றாலும் ரோடின் அவர்களது அதீத ரசனையையும் ஆழ்மனதில் தோன்றும் உணர்ச்சிகளை எழுத்து வடிவில் நாம் உணரும் வண்ணம் உள்ளது.

சிவனின் தாண்டவம் – அகுஸ்டே ரோடின்

முழு நடேச வடிவத்தை பார்க்கையில்

முழு மலரென மலரும் உயிர், வாழ்வின் நில்லா ஓட்டம் , எங்கும் இருக்கும் காற்று, சூரியன், மலையில் திரண்டு ஓடும் காட்டாற்றின் வெள்ளத்தில் சுழன்று ஓடும் உணர்வு – இப்படி தெரிகிறது நமக்கு கீழை நாடுகளின் கலை!

மனிதன் அந்தக் காலத்தில் இறைமை அடைந்தான் என்றால், அப்போது நாம் படைப்பிற்கு மிகவும் அருகாமையில் இருந்தோம் என்பதல்ல காரணம் – நமது தோற்றங்கள் பொதுவாக மிகவும் மாற்றம் கண்டதில்லை – நம்மால் அப்போது எல்லா பிணைப்புகளையும் வெட்டி எரிய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது, அப்படி ஒரு சுதந்திர நிலையில் சுழன்று சொர்க்கத்தை அடைந்தோம். இன்று நாம் இதைத்தான் தொலைத்துவிட்டு தேடுகிறோம்…

ஆனந்த நடனம் புரியும் சிவன் ஒரு கோணத்தில் பார்த்தால் அழகான மூன்றாம் பிறை போன்றவன்.

இன்றோ காலத்தால் வெல்ல முடியாத அழகு இந்த வெங்கலச்சிலை. என்ன ஒரு பெருமிதம் ததும்பும் கோலம். கம்பீரமான உடல் வாகு. உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒளியின் அசைவு. உற்றுப் பார்க்கும் ஒருவரால் உணரமுடியும், ஒளியின் ஓட்டம் மாறினால் நர்த்தனம் புரியும் அந்த அசையாத தசைகளின் இயக்கத்தை!


அசையாத சிலை அதே இடத்தில் நிலையாக இருந்தாலும், நெருங்கும் நிழலால் இருட்டில் மூழ்கடிக்கப் பட்டாலும் அதனுடைய வசீகரம் நிழலால் பெருகத்தான் செய்கிறது! பனிப் படலம் போல் நிழல் படர்ந்த அந்த உருவமும் அதனுடைய துல்லியமான வடிவமைப்பும் இதை ஒரு தெய்வமே வந்து உருவாக்கியதோ என்று வியக்க வைக்கிறது! எந்த ஒரு சிறுகுறையும் இன்றி அனைத்து பாகங்களும் எப்படி இருக்க வேண்டுமோ அவ்வாறே கனக் கச்சிதமாய் உள்ளது. நிலையான சிலைதான் இருந்தாலும் கைகள் அசைவது போன்றே தோற்றம் தரும். கூர்ந்து கவனித்தால், அந்த தோள்பட்டையில் உள்ள எடுப்பான எலும்பும், மார்பு எலும்புகளும், மார்பு கூட்டின் இணைப்புகளும், அவை தோள் பட்டையோடு வந்து சேரும் அமைப்பும், கால்கள் நளினமாக எழுந்து ஆடுவது போன்றே காட்சி கொடுக்கின்றன…






நடேசனை ஒரு புறத்திலிருந்து பார்த்தால்

சிவனின் இந்த வடிவம் வியக்க வைக்கும் உருவம், இரண்டு கைகளும் மார்பையும் வயிற்றையும் பிரிப்பது போல் வடிவமைத்த விதம் புகழ் பெற்ற கிரேக்க சிற்பமான வீனஸ் டா மெடிஸி வடிவத்தோடு போட்டியிட்டு மிஞ்சிவிடுவது போல்லலவா இருக்கிறது! அந்தக் காதல் தெய்வம் எப்படி தன் அழகை கைகளால் மறைக்கிறதோ அதோ போலல்லவா இந்த நடராஜரின் உருவமும் தன் கையை இயக்குகிறது!


நடராஜரின் உடலை இரண்டு பாகங்களாக பிரிக்கும் நிழல், அழகிய தொடைகளை இரண்டு பாகங்களாக நீள வாக்கில் பிரிக்கின்றது, அதில் ஒரு பாகம் இருளில் மூழ்கியும், மறுபாகம் கறுப்பு வெள்ளையிலேயே பல விதமான நிழல்படுகைகளைக் காட்டியும் அழகுக்கு மேலும் மெருகூட்டுகின்றது. இருளில் இடுப்பில் உள்ள எலும்புகள் மறைந்திருக்கின்றன. மொத்தத்தில் அதிலுள்ள ஆழம், மெல்லிய தோற்றம் அதே சமயத்தில் தோன்றும் வலிமை, இவைதான் மிகமும் முக்கியம். இவற்றின் அருமை புரியாமல் பார்த்தால் இந்த அற்புத வடிவத்தின் இயக்கமே புரியாமல் போகும் என்றே தெரிகிறது

நீண்ட கால்கள், அழகிய தசைகள் நடனத்தின் வேகத்தைக் காட்டுகிறது. அழகை பொறாமை கொண்டு மறைக்க முயலும் நிழல் அந்த அழகிய தொடைகளை, நடனத்தின் இயக்கத்தைக் காட்டும் அந்த தொடைகளை மறைப்பதிற்கு மாறாக அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. நிழலோடு படர்ந்த மெல்லிய ஒளி நர்த்தனம் புரியும் அந்தக் கால்களை ஜொலிக்க வைக்கிறது.

நிழலோடு பார்த்த சிவனை நேரில் பார்த்தால்!

இந்த வடிவம் கலைஞர்கள் வெகுவாக உபயோகப் படுத்தும் வடிவம் தான், எனினும் இது சாதாரண வடிவம் அல்ல. ஒவ்வொரு வளைவும் இயற்கையை பிரதிபலித்தாலும் அதிலும் ஒரு தொலைவு – ஒரு அமானுஷ்ய தன்மை தெரிகிறது. இந்த வடிவத்தின் உணர முடியாத ஆழம், அதில் மூழ்கியிருக்கும் வாழ்வின் சுயற்சி – பலரால் எளிதில் உணர்ந்து கொள்ள முடியாது. இந்த சிற்பத்தின் நளினத்தில் ஒரு கண்ணியம் தெரிகிறது. நளினத்தையும் தாண்டி ஒரு கச்சிதம் உள்ளது. இன்னும் பார்த்தால் அந்தக் கச்சிதத்தை தாண்டி எங்கோ செல்கிறது.

இந்த வடிவத்தில் ஒரு மேன்மை தெரிகிறது. நளினம் கலந்த மேன்மை. எனினும் நம் உள்ளுணர்வை ஆட்டுவிக்கும் வலிமை பொருந்திய மேன்மை – அதை வர்ணிக்க வார்த்தைகள் அகராதிகளில் இல்லை

தோளில் இருந்து இடுப்பு வரையும், தொடைக்கும் இடைக்கும் நடுவே செங்குத்தாக மாலை போல் தொடரும் நிழல் பார்க்க கண் கொள்ளா காட்சி.

வேறு கோணத்தில் பார்த்தால்

வேறு கோணத்தில் பார்த்தால், ஒளியும் நிழலும் மாறி மாறி இரண்டு கால்களின் மேலும் விழுந்து பிரதிபலிக்கும் வேறுபாடுகளை சிலையினுள், அதை இயக்கம் இயல்பு, – அதனால் அதற்கு வரும் வசீகர தன்மையைக் கூட்டுகிறது ! அப்படி இல்லாமல் வெறுமனே நேர் நேராக ஒளியும் நிழலும் விழுந்திருந்தால் இது ஒரு சாதாரண படைப்பாக இருந்திருக்கும்.

சிவனை உருவங்களை பொதுவாய் கோர ஸ்வரூபமாக பார்ப்போருக்கு

இவற்றை பற்றி தெரியாத பாமரன், எல்லாவற்றையும் எளிது படுத்தி, கொச்சையாக பார்த்து, இப்படி ஒரு மகத்தான கலையை விட்டு ஒதுங்கி இதைவிட மட்டமான பொருள்களில் தனது ரசனையை செலுத்துகிறான். அந்த அழகைப் பருக வேண்டுமானால் அதீத ரசனை வேண்டும், ஆழ்ந்து நுகர்ந்தால் ….

ஆழ்ந்த தியானத்தின் பின சிவனின் அழகிய முகத்தை பார்த்தால்

புடைத்திருக்கும் உதடுகள், அது வெளிப்படுத்தும் உணர்வுபூர்வமான பொருள், கண்களுக்கும், செவ்வாயிற்கும் உள்ள பொருத்தம், இதழ்களை ஒட்டி வசீகரத்தோடு ஆச்சரியமூட்டும் நாசி – தாமரை பூத்த தடாகத்தின் மீது சாய்ந்து பரவும் மலர்க்கொத்துக்கள் நிறைந்த தாழ்ந்த மரக்கிளை போல இருக்க , கொஞ்சும் ஈர உதடுகள் – பாம்பின் வளைவுகளை போல ஜொலிக்க – புடைத்து பாதி மூடிய இமைகள், இமைகளின் மேல்முடி வரிகளுக்குள் மறைந்திருக்கும் அழகு, மிகவும் நேர்த்தியாக முகத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கபட்ட மூக்கு, அவ்வளவும் கனக் கச்சிதம். வளைந்து நெளியும் உதடுகள், ஏதோ வார்த்தைகளை உச்சரிப்பது போலவே உள்ளது . ஒரே வரி என்றாலும், வில்லை போல வளைந்த அழகான சாந்தமும் அமைதியும் ததும்பும் கண்கள், அவற்றுள் பார்ப்போரை நெகிழ வைக்கும் இரு நட்சத்திரங்கள். அதிகாலை சூரிய கிரணங்கள் போல மயக்கும் அமைதி வீசும் கண்கள், அவை தரும் சுகமான அமைதிப் பெருக்கெடுப்பு.





தாடையில் குவியும் முகத்தின் வளைவுகள், வளைந்து மேல்நோக்கிய கன்னம் ஒரு பாகத்தில் முடியும் அழகுத் தோற்றம் மற்றொரு பாகத்தில் தொடர்கிறது. இதழ்களின் அசைவு கன்ன கதுப்புகளில் முடிகிறது, காதுகளில் இருந்து கிளம்பும் வளைவுகள் இதழ்களோடும், நாசிகளோடும் முடிவடைகிறது, தாடையிலிருந்தும் மூக்கிற்கு கீழேயும் உள்ள வரிகள் கன்னக்கதுப்பில் மறைகிறது.


இன்னும் அந்த அழகிய தலையை விட்டு விலக மனம் வராமல்

நேர் சீராக தங்கள் மங்கலமான இடங்களில் அமரும் இரு கண்களும், ஒளி வீசும் பராக்கிரமம், வசீகரம்! கால வெள்ளத்தை தங்கள் இன்பத்தில் தேக்கி வைக்கின்றன. ஆஹா , அந்த கண்கள் – ஆபரணமென போற்றக் கூடிய சுத்த பொக்கிஷம். அவற்றை உள்ளடக்கும் பெட்டகம் – கண் இமைகள். வில் போன்று வளைந்த புருவம், அதற்க்கு போட்டியிடும் வளைந்து நெளியும், வசீகர இதழ்கள்.

ஒரே சமயத்தில் தன்னுள் இன்பம் பொங்கும் நினைவுகளையும், எரிமலையின் ஆவேசத்தையும் உணர்த்தும் வாய்.

உடற்கூறுகளை இயக்கத்தோடு இணைத்துக் காட்டும் ஆன்மா அந்த வெங்கலத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடைபட்டுள்ளது. சாகா தன்மை அந்த இதழ்களில், எந்த நொடியும் பார்க்கத் துடிக்கும் அந்த கண்கள், எங்கே பேசிவிடுமோ ?

வாழ்வின் நாடி வாய் வழியே வந்து செல்வது போல, கூட்டிலிருந்து வெளிவரும் தேனீக்கள் போல், நாசியிலிருந்து வெளி வருகிறது – நறுமணத்தோடு கூடிய மெல்லிய சுவாசம். ..

இந்த தொலைந்து போன அழகிய வடிவம் தனக்குள்ளேயே ஒரு வடிவத்தைக் கொண்டுள்ளது, ஆனால் ஓரிடத்தில் அதனுடைய பொருள் பொதிந்த காட்சி உறைகிறது அது அந்த மிகவும் கவர்ந்திழுக்கும் கன்னக் கதுப்புகள் கழுத்தோடு வளைந்து இணையும் காட்சி!!

மொழிபெயர்ப்பு உதவி : கீதா அம்மா மற்றும் சதீஷ்.
வீனஸ் படம் – இணையத்தில் இருந்து.

திருவலஞ்சுழி – ஓவியர் சில்பி விட்டுச்சென்ற ஓவியத்தின் துணையுடன் ஒரு தேடல்

அழியா திறன் அழகுக்கு உண்டா? காலம் மாட மாளிகைகளையும், உலக அழகிகளையும் விட்டு வைப்பதில்லை. எனினும் ஒரு சிலர் மட்டும் காலத்தையும் வென்று அழியாப் புகழ் பெறுகின்றனர். சிற்பம், ஓவியம் ஆகியவற்றிலும் இது போல சில உண்டு. இப்படி அழியாப் புகழ் பெறக்கூடிய ஓவியத்தை படைக்கும் திறன் படைத்த ஓவியர் ஒருவர் தனது முழு கவனத்தையும் தமிழக கோயில் சிற்பங்களை வரைவதில் செலுத்தினால் – அதுவும் அவர் ஓவியர் சில்பி போன்ற திறமை படைத்தவர் என்றால் – அது நமக்கு ஒரு வரப் பிரசாதம்

ஓவியர் சில்பி அவர்களின் படைப்புகளில் ஒரு உயிரோட்டம் இருக்கும். அவர் ஓவியம் வரைய தேர்ந்தெடுக்கும் கோணங்கள் மிகவும் கடினமான கோணங்களாக இருக்கும். ஆனால் அவர் அவற்றை பார்த்து அசராமல் ஒவ்வொரு சிறு அம்சத்தையும் கூட விடாமல் வரையும் அபார திறன் படைத்தவர். அவரது இந்த திறமைக்கு இன்று ஒரு அத்தாட்சி. ஒரு அற்புத கோட்டோவியம் – வரலாற்றில் மிகவும் முக்கியமான பல இரகசியங்களை இன்றும் தன்னுள் வைத்திருக்கும் கோயில் திருவலஞ்சுழி. நண்பர் / வழிகாட்டி என்று பல கோணங்களில் என்னை தூக்கி நிறுத்தும் தூண் – திரு சுந்தர் பரத்வாஜ் அவர்கள் ஒரு நிறை குடம் – ஆலயங்கள் பராமரிப்பு, சரித்திர ஆய்வு என்று பல காரியங்களை ஓசை இல்லாமல் செய்து கொண்டிருக்கும் பெரியவர், இந்தப் பதிவு அவருக்கு சமர்ப்பணம். இது அவருக்கு மிகவும் பிடித்த கோயில்.

இதோ சில்பி அவர்களின் ஓவியம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் தீட்டியது. அப்போது கோயில் மிகவும் சிதைந்த நிலையில் இருந்துள்ளது. சிற்பங்கள் அனைத்தும் வெட்ட வெளியில் இருப்பதை இந்த ஓவியத்தின் மூலம் நாம் காணலாம்.

இங்கிருந்த சிற்பங்களில் பல தற்போது தஞ்சையில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ளன. ( விநாயகர் தவிர – அவர் மட்டும் எப்படியோ தப்பித்து அங்கேயே தங்கிவிட்டார் )

ஆலயம் தற்போது செப்பனிடப்பட்டு தனது சிற்பங்களை பெற தயாராக உள்ளது. திரு சுந்தர் பரத்வாஜ் கொடுத்துதவிய புகைப்படங்களோடு நம்மிடம் உள்ள புகைப்படங்களையும் கொண்டு, ஓவியத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து அடையாளம் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பார்ப்போம். வாசகர்கள் உதவினால் இதை ஒரு வேண்டுகோளாக அதிகாரிகளிடம் எடுத்துச்சென்று இந்த கலைப் பொக்கிஷங்களை அவற்றிற்கு உரிய இடங்களில் சேர்க்க நாம் முயற்சி செய்யலாம். முக்கியமாக இந்தப் பதிவு அமரர் ஓவியர் சில்பி அவர்களின் கலைக்கு சமர்ப்பணம்.


இந்தப் பதிவில் என்னைப் போலவே நீங்களும் சிற்பங்களை ஒப்பிட்டு நோக்கும் முயற்சியில் இன்பம் அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு வளைவு, உடைந்த பாகம் என்று தேடும் போது அந்த அற்புத ஓவியரின் திறன் பிரமிக்க வைக்கிறது. இந்த சிற்பங்களை விவரிக்க இன்னும் ஒரு பதிவு தேவை, எனினும் உங்களுக்கு ஒரு போட்டி – சிற்பங்கள் எவை எவை என்று அடையாளம் கண்டு சொல்லுங்கள் பார்ப்போம். இந்த வரிசையில்.

இதுவரை நாம் கண்டுபிடித்த சிற்பங்கள்

ஏன், ஓவியத்தில் இருக்கும் அணைத்து சிற்பங்களையுமே அடையாளம் கண்டு பிடிக்க முயற்சி செய்யலாமே.

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.