அற்புதம் வராகம்

கஜுராஹோ லக்குமான கோவில் அற்புத வராஹ மூர்த்தி சிலை. தன்னுள் அணைத்து ஜீவராசிகளையும் கொண்ட வடிவம். தொலைவில் இருந்து பார்கையில் சிற்பியின் கலைநுட்பம் சரியாக தெரிவில்லை – சற்று அருகில் சென்று பாருங்கள்..

 

 

அடடா பன்றியின் கோரை பல் – பின்னோக்கி இருக்கும் காது மடல் – எங்கும் சிற்பங்கள்


 

கால் , தொடை முதுகு என்று எங்கும் வடிவங்கள் – அக்காலத்தில் பாதாள லோகத்தை உணர்த்த நாக வடிவத்தை இடுவர் – இங்கும் உண்டு – எனினும் தலை சிதைந்து விட்டது – நாகத்தின் உடம்பு அழகே பன்றியின் கால்களுக்கு நடுவில் செல்வதை பாருங்கள்

 

 

( நாம் முன்பு பார்த்த உதயகிரி சிற்பத்தில் இந்நாகத்தை நாம் கண்டோம் ) – அது மட்டும் அல்ல பல இடங்களில் சிதைந்து உள்ள இச்சிலை – அது கண்டு எடுத்த தேவியையும் தொலைத்து விட்டது -மிஞ்சியது அவள் பாதங்களே.

இந்திரனின் யானைக்கு முப்பத்தி மூன்று தலைகள் !

யானை என்றாலே நமது சிற்பிக்கு அதித ப்ரியம்…அதிலும் வெள்ளை யானை என்றால் கேட்க வேண்டுமா… அதிலும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் வெள்ளை யானை என்றால்..அப்பப்பா ….ஐராவதம் ….வஜ்ராயுதம் கொண்ட இந்திரனின் யானைக்கு முப்பத்தி மூன்று தலைகள்…ஒவ்வொரு தலைக்கும் ஏழு தந்தங்கல்…இதை எப்படி சிற்பம் / ஓவியத்தில் சித்தரிப்பது ….இங்கே ஒரு ஓவிய முயற்சி பாருங்கள்…

 

இதில் என்ன வியப்பு என்றால் ஐராவதம் தாய்லாந்து மற்றும் கம்போடியா , விஎத்னம் போன்ற இடங்களில் மக்கள் இன்றும் மிக நேர்த்தியாக வழிபடுகின்றனர் …அங்கே இராவடி என்று ஒரு ஆறு உள்ளது…இங்கே பாருங்கள் தாய்லாந்தில் இராவடி என்னும் ஒரு அருங்காட்சியகத்தில் மிக பிரம்மாண்டமான சிலை..சிலையில் ஐராவதத்திர்க்கு மூன்று தலைகள் வைத்து கம்போடியா சிற்பி செதுக்கிய வண்ணம் மிகவும் அருமை…இம்மாதிரி வடிவங்கள் அங்கு நிறைய உண்டு…

 

இதோ சிலவற்றை பாருங்கள்…



 

இந்தியாவிலும் பல இடங்களில் இந்திரனின் ஐராவதத்திர்க்கு சிலை இருந்தும் ஒரு தலை கொண்ட சிற்பங்களே அதிகம்…இதோ சோமநாதபுரம் மற்றும் மும்பை அருகே உள்ள பாஜா குடவரை சிற்ப்பங்கள்..

585 592

 

தஞ்சை பெரிய கோவில் புகழ் பெற்ற ஓவியங்களிலும் ஐராவதம் வரும்….அதை வேறொரு இழையில் பார்ப்போம்

ஓர் ஆயிரம் பார்வையிலே !

 

சித்திரம் – சிலை – இரு தெய்வீக கலைகள் – இவை இணையும் போது வார்த்தைகள் நிற்கின்றன. (கோனார்க் கோவில் சிலையை கண்டு தாகூர் Here the language of stone surpasses the language of man என்று கூறினார்). இங்கே உள்ள படைப்பை அவர் பார்க்கவில்லை ..பார்த்திருந்தால் !!

 

 

எல்லோரா குடவரையில் ….இந்த அறிய சிலைஒவியம் பாருங்கள் – ஆயிரம் ஆண்டுகள் ஆயினும், மங்கி சிதைந்தும் அந்த ஒரு கண்ணில் எத்தனை ஈர்ப்பு சக்தி.. அப்பப்பா மெய் சிலிர்க்கிறது. ரிஷப சிவன்

ஊடல், கூடல், காதல்

ஊடல் கூடல் காதல் என்பார்கள்.. … சிவபெருமானின் அழகிய சிற்ப வடிவம் ஒன்றை சமிபத்தில் கோவில் உழாவாரப்பணி குழுவில் கண்டேன்.

 

 

 

 

சிவகங்காதரா என்னும் இந்த அற்புத சிற்ப வடிவம் – இதனை கங்கை கொண்ட சோழபுரத்திலும் காணலாம்.

 

 

 

திருச்சி மலை கோட்டையில் உள்ள பல்லவ மகேந்திரனின் புகழ் பெற்ற சிற்பமும் இவ்வடிவமே.( அது லலிதாங்குர பல்லவ க்ரிஹம் …ஆ!! அதையும் நாம் பின்னர் பார்போம் )

 

தன் வலது கையால் தனது ஜடையில் இரு ரோமங்களை சிவன் நீட்ட அதில் கங்கை இறங்கும் அற்புத சிற்ப வடிவம் – திருச்சி வடிவம் இதுவே… ஆனால் நமது சிற்பி ஒரு படி முன்னேறி, இதை காணும் உமை பொறுக்காமல் சினத்துடன் அவிடத்தை விட்டு விலக ஒரு கால் வைக்க, தன் மற்ற இரு கரங்களாலும் சிவபெருமான் ஆசுவாசப்படுத்த முயல்வது போல், அற்புத கற்பனையுடன் செதுக்கி உள்ள அக்காட்சி அருமை.

மற்ற படங்களுக்கு நன்றி
http://www.kumbakonam.info/kumbakonam/gkchopu/images/vimsta/viar16.jpg

எங்கும் சாந்தி நிலவ வேண்டும்

ஈசனின் பல தாண்டவ கோலங்கள் உண்டு – பொதுவாக அழிவை கொண்டே இத்தண்டவம் என்ற கருத்து உலாவி வருகிறது – ஆனால் அது தவறு …ஆடல் வல்லானின் ஆனந்த கூத்தே அது. எந்த ஒரு ஆரம்பதிர்க்கும் ஒரு முடிவு வேண்டும் – அம்முற்றுப்புள்ளியே அடுத்த ஆரம்பத்தின் அறிகுறி

ஓர் அரிய எல்லோரா சிற்பம்…. சிதைந்த நிலையிலும் சிற்பத்தினுள் இருக்கும் உணர்வு இன்னும் நமக்கு தெரிகிறது – கலை அழகும் தெய்வீகமும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன ….இங்கே மானிட அறிவும் கலைவண்ணமும் ஒரு உன்னத நிலையை அடைகின்றன… நாம் உடலை வளைத்து உழைக்கும் போது முகத்தில் வருவது சலிப்பு – ஆனால் இந்த சிலையில் தெரிவதோ ஒரு பரவச நிலை. அதை உணர்த்த ….தன்னை சுற்றிலும் இருக்கும் அழிவையும் தாண்டி வையகத்தில் என்றும் ஆனந்தம் நிலவுவதை உணர்த்தும் வண்ணம் இருக்கும் இந்த சிலை கண்டு கண்கள் கண்ணீர் வடிகின்றன ..

மலைமகள் நடுங்க !

ராமாயணத்தின் தாக்கம் எங்கெல்லாம் சென்றுள்ளது என்பதற்கு ஒரு அறிய எடுத்துக்காட்டு. …. இராவணன் கைலாயத்தை பெயர்க்க முனைதான். அப்போது உமை பயந்து சிவனின் மடியில் தாவி அமர்கிறாள். அப்போது கைலாய பர்வதத்தில் உள்ள மிருகங்கள் எல்லாம் அலறி ஓடின.

 

இந்த கதையின் சிற்ப வடிவத்தை பல இடங்களில் காணலாம். குறிப்பாக அங்கோர் பண்டேஅஸ்ரெய் சிற்பத்தை காணுங்கள். பத்து தலைகளை புது விதமாக செதுக்கி உள்ளனர், இராவணனை ஒட்டி பயந்து ஒதுங்கும் சிங்கங்களை கான முடிகிறது. உமையும் பயத்தில் ஐயனின் மடியில் அமர்த்து கீழே எட்டி பார்க்கும் கோணம் மிக அருமை. சிவபெருமான் தன் வலது காலால் பர்வதத்தை கீழே அழுத்தும் வண்ணம் சிறப்பாக செதுக்கப் பட்டுள்ளது.

 

இரண்டாம் வரிசையில் ஆணைமுகனும் கருடனையும் காணலாம்.

 

 

 

 

ஒருவளை திருமுறையின் தாக்கம் அங்கும் பரவி இருக்குமோ

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=2091&padhi=091&startLimit=8&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

 

தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை யோரான்
மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலு மலைமகள் நடுங்க
நக்குத் தன்றிரு விரலால் ஊன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே

 

தக்கன் வேள்வியைத் தகர்த்தோனாகிய சிவ பிரானது ஒப்பற்ற பெருமையை உணராத அரக்கனாகிய இராவணன் செருக்குடன் சென்று கயிலை மலையைப் பெயர்த்த அளவில் மலை மகள் அஞ்ச, பெருமான் அவனது அறியாமைக்குச் சிரித்துத்தன் கால் விரலை ஊன்றிய அளவில் நடுநடுங்கி அனைத்து வாய்களாலும் அவன் அலறி அழ அதனைக் கண்டு பரிந்து அருள் செய்தவனாகிய சிவபிரானது பதி மறைக்காடாகும்.

 

உமையும் பயத்தில் ( ஆஹா மலைமகள் நடுங்க….இங்கே வருகிறான் சிற்பி )ஈசனின் மடியில் தாவி அமர்த்து கீழே எட்டி பார்க்கும் கோணம் மிக அருமை.

கலை புலிகள், மல்லை புலி குகை

சென்னை வாசிகள் பலருக்கு தெரியாத மூன்று கலை பெட்டகங்கள் மல்லைக்கு சற்றே முன்னர் சாளுவன்குப்பம் என்னும் இடத்தில் இருக்கிறது…மல்லை நுழைவதற்கு சுமார் இருநூறு அடி முன்னர் ASI போர்டு இருக்கிறது…ஆம் இங்கு இன்றும் புது புது கண்டு பிடிப்புகள் உண்டு…

 வெளி தோற்றத்தில் மிக எளிமையாக காட்சி அளிக்கும் இந்த இடம் …மூன்று அருமையான பல்லவ கலை பொக்கிஷங்களை கொண்டு உள்ளது.. ஒன்றொன்றாக பார்ப்போம்.

 

முதலில் புலி குகை என்று தவறாக அழைக்கப்படும் இந்த யாழி மண்டபம்…பதினோரு யாழிகள் சுற்றி இருக்க …..மேடை …இருபுறம் பாயும் சிங்கங்கள்…ராஜ சிம்ம பல்லவனின் சின்னம்…1300 வருடம் பழமை …நீங்கள் தொட்டு பார்க்கலாம்.

யாழி என்றோமே…எதனால்…உற்று பாருங்கள்…இவை பார்ப்பதற்கு சிங்கங்கள் போல இருந்தாலும் அழகிய வளைந்த கொம்புகளை உடையன..எவ்வளவு பெரியது என்று உங்களுக்கு எப்படி உணர்த்துவது…சரி…இதோ படத்துக்குள் நானே வருகிறேன்…குண்டாக ஆம் நூறு கிலோ எடையுடன் என்னை சிறியதாக காட்டும் சிற்பத்தின் அளவு இப்போது புரிந்ததா.


ஒரு புறமாக இருக்கும் மேடைக்கு அடுத்து இரு யானைகள்…அவற்றின் மேல் அம்பாரி…அதனுள்…ஆம் ஏறி படம் எடுத்தோம்…சரியாக தெரியவில்லை…மிகவும் சிதைந்த நிலையில் உள்ளன சிற்பங்கள்….


அடுத்த முறை செல்லும் பொது கண்டிப்பாக இந்த அழகிய யாழி மண்டபத்தை கண்டு வாருங்கள்…இன்னும் இரண்டு இடங்கள் பாக்கி …..

இந்த கதை, கதையல்ல, நிஜம்

கல்யாண சாப்பாடு என்றாலே நமக்கு நினைவில் வரும் பாட்டு ….மாயா பஜார் …ரங்கா ராவ் அருமையான நடிப்பில் …கல்யாண சமையல் சாதம் பாட்டு …அதில் அவருடைய கதை …..கதை என்றவுடன்…பீமன், துரியோதனன் மற்றும் யமதர்மனின் கதைகளும் நினைவுக்கு வரும்..பல படங்களில் பார்த்துள்ளோம். அப்போதெல்லாம் இவ்வளவு பெரிய கதை உண்மையிலே இருக்குமா , அதை ஒருவனால் எடுத்து சுயற்ற முடுயுமோ …இல்லை இவை கற்பனையோ என்று வியந்ததுண்டு… இதற்க்கு சிற்பத்தில் விடை காண முற்பட்டபோது சென்னை நண்பர், புகை பட வல்லுநர் அசோக் கிருஷ்ணசாமி அவர்கள் நேற்று அனுப்பிய மாங்காடபத்து குடவரை கோவில் படங்கள் உதவின…இது விசித்ர சித்தன் என்ற பெயர் கொண்ட மஹேந்திர பல்லவனின் வேலை….

 

பார்ப்பதற்கு தண்டால் எடுக்கும் கட்டை போல இருக்கும் இவை அப்பப்பா… இதில் ஒரு போடு போட்டால் கபால மோட்சம் தான் ……இந்த அசுர கதையை அசால்டாக ( assaulta ) மன்னிக்கவும் அலட்சியமாக கொண்டு, வாய் பிளந்து பார்க்கும் நம்மை கண்டு ‘"போடி பயலே" என்று சிரிக்கும் இவ்விரு மஹா வீரர்கள் என்ன கம்பிரமாக நிற்கின்றனர் 

 

 

.அந்த கதையை ஒரு படம் எடுக்கும் நாகம் வேறு சுற்றயுள்ளது…. இவர்கள் இப்போது எங்கே போனார்கள்… இப்போது இருந்தால் ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் கண்டிப்பாக தங்கம் இவர்களுக்கே….. ( திரு திவாகர் சார் …. அவர் எழுதிய விசித்திரச் சித்தன் சரித்திர புதினம்…அருமை…அவர் இந்த படத்தை பார்த்தவுடன் எழுதிய குறிப்பு. .. விசித்திரச் சித்தன் பாறையைக் குடைந்து மும்மூர்த்திகளுக்கான சிவ-விஷ்ணு-ப்ரம்மாவுக்காக எழுப்பப்பட்ட கோயில் இது. அற்புதமான கலைப் படைப்பு. பல்லவ அரசனின் கல்வெட்டு சமுஸ்கிருதத்தில், பல்லவ கிரந்த எழுத்தில் ‘பிரம்ம,ஈஸ்வர விஷ்ணுவுக்காக செங்கல். மரம், உலோகம், சுதையில்லாமல் நிமாணிக்கப்பட்ட லக்ஷிதாயனம்’ என்று சொல்கிறது. தனக்குட்பட்ட பல்லவ சாம்ராஜ்ஜியத்தில் மேற்கண்ட பொருள்களை பயன்படுத்தாமல் வெறும் மலைப் பாறையும், கற்றுளியை மட்டுமே நம்பி கட்டப்பட்ட கோயில் இது. இந்தப் புதுமையைத் தான் செய்ததற்காகவே மகேந்திரபல்லவன் தன்னை விசித்திரசித்தனாக எதிர்கால உலகுக்கு அடையாளம் காட்டிக் கொண்ட கோயில் இது. விழுப்புரம் செஞ்சி சாலையில், விழுப்புரத்தில் இருந்து 20 கி.மீ. துர்ரத்தில் பிரியும் மண்சாலையில் ஒரு கி.மீ. சென்றால் இந்த குகைக் கோயிலை அடையலாம். நான் இரண்டு வருடங்கள் முன் சென்றபோது வழி சரியில்லை. )

நாதர் முடி மேல் இருக்கும் நல்லபாம்பே

நாதர் முடி மேல் இருக்கும் நல்லபாம்பே ….எளிபண்டா நடராஜர். .. ஆனால் இந்த பாம்பு இப்போது தான் தனது இடத்திற்கு போகிறது – என்ன அழகு -நெளிந்து வளைந்து தனது உடலை நிஜ பாம்பு எப்படி காட்டில் ஒரு மர கிலையில் இருந்து இன்னொரு கிலைக்கு தொங்கி தாவுமோ அதே போல … ஆனால் கல்லில்..( அருகில் நான்முகன் தாமரை ஆசனத்தில்)

 

 

ஆடும் அரசனின் ஆட்டத்தில் தான் என்ன ஒரு உயிரோட்டம்.. பல கைகளுடன் அவன் அடுவது …ஒரே கையின் மிக வேகமான சுயற்சி போல உள்ளது.. சிதைந்த நிலையிலும் அந்த நடனம்….தோள்களின் அமைப்பு…சிதைந்த அவன் முகத்தில் தான் என்ன ஒரு சாந்தம்…ஒரு தேஜஸ்

 

என்ன அபாரமான வேலைப்பாடு, சரி இவை எப்படி சிதைந்தன, குறி பார்த்து சுடும் பயிற்சிக்காக யாராவது இந்த அருமையான் சிற்பத்தை தேர்ந்தெடுப்பார்களா, ஆனால் போர்த்துகீசியர் தேர்ந்தெடுத்தார்களே, சிதைத்துவிட்ட மாபாவிகள்

தந்தை காலை வெட்டியதற்கு பரிசு, கொன்றை மாலை

அமெரிக்கா நண்பர் ஒருவர் இந்த படத்தை அனுப்பி( தஞ்சை பெரிய கோவில் சிற்பம்), இது என்ன சிற்பம், கிருஷ்ணா லீலையா(கம்ச வதமா) என்று கேட்டார்.

இந்த சிற்பத்தின் மிச்சம் இரு காட்சிகள் உண்டு — இப்போது படங்கள் இல்லை – கிடைத்தும் இடுகிறேன். மூன்று காட்சிகளை கொண்ட படத்தின் நாடு காட்சி இது. இது சண்டேஸ்வரர் கதை…..சிவாலயங்களில் அனைத்து சொத்துக்களுக்கும் இவர் பெயராலேயே பதிவு செய்யப்படும். இவரது கதை மிக விநோதமானது. சிற்பத்தில் ஒருவர் தடி கொண்டு மற்றொருவரை அடிப்பது போல உள்ளது. அடிப்பவர்தான் சண்டேஸ்வரர், அடி வாங்குபவர் அவரது தந்தை ???

 

இவரை பற்றி ஞானசம்பந்தர் இவ்வாறு பாடுகிறார்.

கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே

 

சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப் போற்றி , நல்ல பசுவின் பால் கொண்டு மணலாலான சிவலிங்கத்திற்குத் திருமுழுக்காட்டத் தந்தை கோபம் கொண்டு காலால் இடற , சிவ பூசைக்கு இடையூறு செய்த கால் மீது அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச , அது மழுவாக மாறிக் காலை வெட்டினாலும் , முக்கண் மூர்த்தி யான் சிவபெருமான் அவ்வடியவருக்குத் திருவடிப்பேற்றினை அளித் தருளியதை அறிவுசால் அன்பர்கள் அன்றே சொல்லக் கேட்டோம் அல்லமோ ?

 

இவரது இயற் பெயர் வீசாரசர்மன். பிறப்பிலேயே சிவநெறி / சிவ பக்தி மிகுந்த குழந்தை ….நண்பர்களுடன் ஒருநாள் விளையாடும் போது பசுமாட்டை பராமரிக்கும் ஒருவன் அவற்றை அடிக்கிறான் – இதில் சினம் கொண்டு அவனை சபித்து , இனி நானே பசுக்களை கவனித்து கொள்கிறேன் என்று சிறுவன் கூற, அவனது அன்பான அரவணைப்பில் பசுக்கள் எல்லாம் மிக அதிகமாகவே பால் கறக்கின்றன. ….. பசுக்களின் உரிமையாளருக்கு கொடுத்த பின்னும் பால் மிச்சம் இருக்கிறது…. அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்.

 

அப்போது பக்தி நிலையில் வீசாரசர்மன் ஆற்று மணலில் சிவலிங்கம் ஒன்றை பிடித்து அதற்க்கு மிச்சம் இருந்த பால் கொண்டு அபிஷேகம் செய்கிறான். இதை மூடன் ஒருவன் வீசாரசர்மனின் தந்தை இடத்தில் கூற, அவரும் உண்மையை அறிய அடுத்த நாள் வீசாரசர்மனை பின் தொடர்கிறார்.

 

பாலை மண்ணில் இடுவதை கண்டு அவனது பக்தியை அறியாது – கூச்சல் இடுகிறார் (தஞ்சை பெரிய கோவில் சிற்பத்தின் முதல் காட்சி இது – படம் இல்லை மன்னிக்கவும் ) … ஒரு கம்பு கொண்டு ஓங்கி முதுகில் இடுகிறார் – பக்தி நிலையில் வீசாரசர்மன் இதை உணரவில்லை ….. எனவே பால் குடத்தை காலால் இடருகிறார் – அப்போது சினம் கொண்ட வீசாரசர்மன் தந்தை என்றும் பாராமல் பக்தி பரவசத்தில் அருகில் இருக்கும் தனது மாடு மேய்க்கும் கொலை எடுத்து தனது தந்தையின் காலின் மேல் எறிகிறான். அது மாயமாக கோடரி ( மழு ) யாக மாறி அவரது காலை வெட்டியது.

 

உடனே எம்பெருமான் சிவ பூஜைக்கு இடையூறு விளைவித்தது தந்தை என்றும் பாராமல் அவரை தண்டித்த வீசாரசர்மன் தனது மகனாகவே பாவித்து … அந்த தூய பக்திக்கு பரிசாக தனது விரிசடையிலிருந்து கொன்றை மாலையை எடுத்து சண்டேகேஸ்வரருக்கு அணிவித்தார்.

நண்பர் திரு ஸ்ரீவத்சன் அவர்கள் சற்று முன்னர் இந்த முழு சிற்பத்தின் படத்தை அனுப்பி நாங்கள் இந்த தளத்தை உருவாக்க முக்கிய குறிக்கோள் ஒன்றை வெற்றி பெற செய்தார். அவருக்கு எங்கள் மனமார்த்த நன்றி..இதேபோல் பலரும் தங்கள் படங்களை தந்து இந்த தளத்தை இன்னும் அழகு செய்ய மீண்டும் எங்கள் வேண்டுகோள்.
1184

இந்த சிற்பத்தை கிழ் இருந்து மேல் பார்க்க வேண்டும். முதலில் சண்டேசர் மெய்த மாடுகள், இரண்டாவது அவர் தனது தந்தையை தாக்கி உள்ளார், தந்தை கீழே விழுந்து விட்டார், அதற்க்கு மேலே – ஈசனின் அருளை மெரும் சண்டேசர்

அந்த சிற்பத்தை மிகவும் அழகாக ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் நிறுவினான்…..சிலர் இந்த சிற்பம் ராஜேந்திரன் கங்கை வெற்றிகளை சிவபெருமானின் கரத்தால் வெற்றி மாலை பெறுவது போல் அமைத்தது என்று கூறுகின்றனர்.( அகிலனின் வேங்கையின் மைந்தன்..) அப்பா என்ன ஒரு அபாரமான சிற்பம்…ஒவ்வொரு முகமும் அருமை…அடி பணியும் பக்தன்…ஆட்கொள்ளும் கடவுள்..அருளிக்கும் அன்னை

880
735
877
883
869