வராஹ அவதாரம், மல்லை மற்றும் உதயகிரி, மால் செய்யும் மாள்

மல்லை வராக அவதாரம் சிற்பம் பலரும் பார்த்த ஒன்று. ஆனால் அதிலும் ஒரு பல்லவ டச் உண்டு.. படங்களை உற்று பாருங்கள்…
 

 

பூமா தேவியின் மேலாடை சண்டை நடந்த அமளியில் சற்றே நழுவி அவளது மடியில் விழுகிறது…தேவி வெட்கத்தில் தலை சற்றே குனிந்து ( இதற்கு நீங்கள் இரண்டாம் படத்தை பார்க்கவேண்டும் – ஒரு பக்கமாக இருந்து எடுத்த படம் …நேர் பார்வையில் தெரியாது )மாலும் அன்புடன் தேவியை அணைக்கும் வண்ணம் சிற்பி செதுக்கி உள்ளான். 

 

இதே வடிவத்தின் இன்னொரு கோலம் உதயகிரி குடவரையில் கண்டேன். அங்கோ வராகம் மிக பெரிதாக, ஆக்ரோஷமாக உள்ளார்,தேவி அவரது கோரை பற்களில் இருந்து தொங்குவது போல உள்ளதே… இது அந்த சிற்பியின் பார்வை என்று நினைத்தேன்… அனால் திருவாய்மொழி பாடலை படித்த பின் தான் இருவருமே சரியான வடிவத்தை தான் சித்தரித்து உள்ளனர் என்று புரிந்தது…

 

கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க்கிழ்புக்கு
இடங்திடும், தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெருந்தோள் ஆரத்தழுவும் பாரேன்னும்
மடந்தையை. மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே.

 உதயகிரி சிற்பி எடுத்த வரி இடங்திடும், தன்னுள் கரக்கும் உமிழும் மல்லை சிற்பி எடுத்த வரி இது தடம் பெருந்தோள் ஆரத்தழுவும், ஒரே கதையின் இரு அங்கங்கள் இவை… முதல் பாகம் உதயகிரி இரண்டாம் பாகம் மல்லை..

 

 

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தூண்களில் உள்ள உன்னத வேலைப்பாடு – இரண்டாம் பாகம்

நாம் முன்பு பார்த்த இரண்டாம் ஸ்ரீரங்கம் தூண் சிற்பம்…அதில் உள்ள காட்சி என்ன வென்று ஆராயலாம். முதுகில் (சரி) பின்னால் இருந்து தாக்கும் பழக்கம் தமிழனுக்கு இல்லை … படங்களை பாருங்கள்….

 

 

முன்னால் இருப்பவன் தமிழ் வீரன் – குடுமி, இடுப்பில் வேட்டி, நெற்றியில் திலகம், கழுத்தில் சங்கிலி, ஆரம் – காதில் குண்டலம், இரு கால்களிலும் சிலம்பு – எல்லாவற்றையும் விட தமிழனுக்கே உரிய முறுக்கிய மீசை ….அந்த முகத்தில் தான் என்ன ஒரு கம்பீரம் மேலிருக்கும் பெண்மணியோ அதைவிட அழகு.. கட்டை விரலில் கூட மோதிரம் அணிந்து, கழுத்தில் ரெட்டை வட சங்கிலி, மாலை, ஆரம் -கையில் வளையல், காலில் முறுக்கிய சிலம்பு, தலையில் ராக்கடி ….. அப்பப்ப்பா ஒரு நடமாடும் நகை கடை – அதைவிட முகத்தில் மயக்கும் மந்தகாச புன்னகை.. பின்னால் இருப்பவர்கள் அன்னியர்கள் – அவர்கள் உடையை சற்று பாருங்கள் – மேல் சட்டை, முழு கால் குழாய் …..தலையில் குல்லா மற்றும் மீசையை பார்த்தல் – இது ஒருவேளை மாலிக் கபூர் அரங்கத்தை சூறை ஆடிய கதை போல உள்ளது.

எனினும் அந்த அம்மணி குடையாய் பிடித்திருப்பது என்னவென்று விளங்கவில்லை – அதே கோவிலின் இன்னொரு தூணில் இதே போல் ( அதே அம்மணி ) தலைக்கு மேல் தூக்கி பிடித்து இருக்கும் சிற்பம் பாருங்கள்….முதல் சிற்பத்தில் இரு புறத்திலும் அழகிய கிளிகள் உள்ளன… அவற்றை வைத்து அவள் ஒரு குறத்தி என்று பல இடங்களில் அடையாளம் கொள்கின்றனர்…


குறத்தி … ஊசி பாசி மணி என்று இருப்பால் – அப்போது இந்த சிலையில் இருக்கும் ஆபரங்கள அனைத்தும் …. !!!! இல்லையேல் அந்த நாளில் குறத்தி ஆட்டத்திற்கு வசூல் அதிகமோ ??

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தூண்களில் உள்ள உன்னத வேலைப்பாடு- பாகம் 3

மீண்டும் அதே ஸ்ரீரங்கம் தூண்கள்…. கல்லில் இவை அனைத்தையும் செதுக்கிய அந்த அழகை – அந்த திறமையை நாம் சரியாக உணர, ரசிக்க இன்னும் இரண்டு இழைகள் இடுகிறேன்….

முதலில் அந்த குதிரை வீரன் மற்றும் குதிரையின் அழகு …அடுத்து வரும் மடலில் தூணின் அடியில் மற்றும் பக்கத்தில் இருக்கும் சிற்பங்கள்…

குதிரை மற்றும் அதன் மேல் இருக்கும் வீரனைப்பற்றி விரிவான உரை எழுதலாம் என்று இருந்தேன்….ஆனால் படங்களையே பேச விடுகிறேன்

குதிரையின் வால் ரோமங்கள், அதன் குழம்பு, கடிவாளம், அதன் பற்கள்,
வெளி தொங்கும் நாக்கு ……

அந்த வீரனின் வாள், அதன் கைப்பிடி – அது வளைந்து இருக்கும் பாணி – அது கல் என்பதால் அதற்க்கு பலம் ஊட்ட அதை பின்னாலிருக்கும் தூணுடன் முட்டுக் கொடுத்து …. அடுத்த தூணில் இருக்கும் வீரனின் கையில் ஒரு சிறு குத்தீட்டி …. ( அடுத்த தூணில் அது சிதைந்து உள்ளது )



ஐரோப்பிய நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார் – அங்கே உள்ள குதிரை வீரர்களின் சிற்பத்தை வடிக்கும் பொது – குதிரை முன் இரு கால்களையும் தூக்கிய வாறு வடித்தால் அவர் போரில் வீர மரணம் எய்தார் என்றும், ஒரு கால் மட்டும் தூக்கி இருந்தால் அவர் போரில் பெற்ற காயத்தில் பிறகு உயிர் துறந்தார் என்றும் ….நான்கு கால்களும் தரையில் இருந்தால் அவர் இயற்கையாக இறந்தார் என்றும் ஒரு விதிமுறை உண்டு என்று …. இது உண்மையா ??

……தொடரும்

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தூண்களில் உள்ள உன்னத வேலைப்பாடு – பாகம் 4

இப்போது நாம் இந்த அருமையான சிறப்ப தூண்களின் அடியில் இருக்கும் சிற்பங்களை பார்போம்…. மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு சான்று போல ….. சிறிய இடத்தில் என்ன என்ன வடிவங்களை சித்தரிக்கிறான் பாருங்கள்…

 

முதல் இரண்டு படங்கள் – இந்த சிறு சிற்பங்கள் இருக்கும் இடத்தை விளக்கும் உற்று பாருங்கள்.. இவை அனைத்தும் ஒரே கல் என்பது நினைவில் வைத்து மீண்டும் பாருங்கள்…

நாம் பெரும்பாலும் கோவில் தூண்களில் பார்க்கும் யாழி ( கீழே இருக்கும் யானையின் துதிக்கையை மேல் நின்று பிடிக்கும் யாழி ….) இங்கே தூணிற்குள் இருக்கும் சிறு சிற்பத்தில் வரும் காட்சியுனுள் புகுத்தி உள்ளனர்… நடுவில் ஓய்யாரமாய் இடையில் கைவைத்து நிற்கும் பாவை…

 

ஆஹா…..நாய் குட்டி போல துள்ளி வரும் கஜேந்திரனை அன்போடு அணைக்கும் பெருமாள். வாய் பொத்தி ராமனின் உபதேசத்தை பெரும் ஹனுமன். மிக நேர்த்தியாக யானை மேல் அமர்ந்திருக்கும் விஷ்ணு. அவருக்கு மேலே இருக்கும் தோரணத்தில் தான் என்ன ஒரு வேலை பாடு.

 

பறக்கும் கருடனின் மேல் சங்கு சக்ரதாரி. அந்த காட்சியை கருடனை போலவே பெருமாளை தூக்கும் ஹனுமன்…( அப்போதும் பாதங்களை பிடித்திருக்கும் கோலம் அருமை ). அரியணையில் அதிகார தோரணையில் அமர்ந்திருக்கும் அவனின் கால் படியும் ஹனுமான். லக்ஷ்மியுடன் பெருமாள்…

 

சரி இது என்ன -எதோ பட்டாபிஷேகம் போல உள்ளது -ஒரு புறம் ஹனுமனும் மற்றொரு புறம் கருடனும் கலசத்தை எடுத்து வர… பவ்யமாய் கை கூப்பி நிற்கும் லக்ஷ்மணன்

 

 

இது என்ன – பாற்கடல் கடையும் காட்சி….கீழே இடம் இல்லை என்பதால் – பெருமாளை கூர்மமாக காட்டாமல் தனது இரு கரங்களால் மத்து ( மலையை )தூக்கி பிடித்துள்ளார்….ஆனால் அது என்ன இரு குரங்குகள்.?? சரி இது யார்…தோளில் ஒரு மான் குட்டி,,,காலுக்கு ஒருபுறம் ஒரு நாய் குட்டி…அந்த புறம் ஒரு பெண் ..காலில் முள் தைத்ததோ….பெரும்பாலும் நம் படங்களில் வருவதை காட்டிலும் இங்கே மாறுகிறதே…

391 436

மேலும் பல சண்டை பயிற்சி காட்சிகள் ..மொத்தத்தில் ஒவ்வொரு தூணும் ஒரு கலை பெட்டகம்..

இருவர், அர்ஜுனன், கிராடன்

 

அர்ஜுனன் பசுபத அஸ்திரம் பெற கடுந்தவம் புரிந்தான். பிறகு காட்டில் ஒரு பன்றியை வேட்டையாடும் பொது ….இரு வீரர்களின் நான் ஒரே சமயத்தில் பாய…. போட்டியாக வேட்டையாடும் வேடுவ தலைவன் …. கிராடன் ஒருவனுடன் அவன் சண்டை இட்டான்….வெகு நேரம் போரிட்டும் அர்ஜுனனால் அந்த வேடுவனை வெல்ல இயலவில்லை… பிறகு வந்திருப்பது ஈசன் என்று உணர்ந்தான் ….. 

அந்த கதை காஞ்சி கைலசனாத கோவிலில் இருக்கிறது – இது ஒரு அற்புத வடிவம். கிராட ( சிவன் வேடன் வேடத்தில் ) அர்ஜுனன் மறு பக்கம்.. இரு வீரர்களின் பாணியும் அபாரம்..எதோ இக்கால புகைப்பட விளம்பரம் போல உள்ளது ..நானேற்றிய வில்லுடன் ஒருவரை ஒருவர் எதிர் கொள்ளும் காட்சி ….இருவரின் முதிகிலும் இருப்பது அம்புகள் வைக்கும் பை … பின்னால் ( படத்தின் இடது பாகத்தில் ) அவர்கள் சண்டைக்கான பரிசு – காட்டுப்பன்றி

அது என்ன எல்லோரா சிற்பம் ?

எல்லோரா கைலாசநாதர் கோவில் சிற்பங்கள் உலக புகழ் பெற்றவை . நண்பர் ஒருவர் அது என்ன எல்லோரா சிற்பம் – அதற்கு என்ன தனி மதிப்பு என்றார்… குடவரை என்றாலே சிறப்புதான் – அதுவும் இது மலைவரை …..புரியவில்லையா …. எல்லோரா ஒரு மேலோட்ட பார்வை பாருங்கள் விளங்கும்.

 

 

இங்கே நாம் பல முறை வருவோம்….

 


 

ஆனால் இதே போல் தமிழகத்திலும் ஒரு இடம் உண்டு – கழகு மலை. அதை பின்பு பார்போம்….

அஜந்தாவில் அப்படி என்ன உள்ளது ?

எல்லோரா ஒரு மேலோட்டம் சென்ற மடலில் பார்த்தோம். அப்போது அஜந்தா, இதோ வருகிறது


 

அடர்ந்த காடுகளின் நடுவில் குதிரையின் குளம்பு போன்ற வடிவம் கொண்ட மலை சரிவில் – ஒரு பக்கம் அழகிய நீர்வீழ்ச்சியின் வனப்பு … அந்த ரம்மியமான இயற்கை கொஞ்சும் எழில் வனத்தில் தங்களது மடத்தை அமைத்தனர் அந்த பெளத்தர்கள்…. இயற்கையின் அழகுக்கு போட்டியாக கல்லில் தங்களது கலையை குடைந்தனர், அதனுள் எண்ணில் அடங்க எழில் கொஞ்சும் சிற்பங்கள்

அது போதாதென்று பல் வேறு வண்ணங்களில் அழியா ஓவியங்களை தீட்டி … இந்த ஒப்பற்ற பொக்கிஷத்தை – காலத்தினால் அழியாப் புகழை நம் மண்ணுக்கு தந்த விட்டு சென்ற அந்த அன்பு உள்ளங்களுக்கு நாம் என்ன கை மாறு செய்யப்போகிறோம். ???

 

ஆயனர் ( சிவகாமியின் சபதம் ) இதனை பார்க்க எவ்வளவு இன்னல்களை சந்தித்தார் …….இதனுள் அப்படி என்ன இருக்கிறது…. வரும் மடல்களில்….

ஆடல் வல்லானின் ஆனந்த கூத்து

சோழ சிற்பியின் அபார திறமையை போற்றி ஆதியும் அந்தமும் இல்லா அருள் பெரும் ஜோதி ரூபமான அவனின் ஆடல் உருவம் இந்த சட்டங்களுக்குள் வந்து ஆடுவது போலவே உள்ளது …..ஆடல் வல்லானின் ஆனந்த கூத்து …. தஞ்சை பெரிய கோவில் சிற்பம்.. பல கோணங்கள்…

 

சுயன்று ஆடும் அவனின் சுயர்சியை காட்ட கழுத்தில் இருக்கும் பாம்பு நழுவி கையில் தொங்கிக்கொண்டு இருப்பதை பாருங்கள் ..அந்த பாம்பின் சுயல்களில் தான் என்ன ஒரு உயிரோட்டம் ….இடையில் இருக்கும் உடுப்பும் அது போலவே பறந்து அவன் சுயன்று சுயன்று ஆடுவதை வெளி கொணர்கின்றன … அந்த .உடைகளில் தான் என்ன அழகிய வண்ணங்கள்.. ஒரு காலில் நின்று ஆடும் போதும் என்ன ஒரு வலிமை என்ன ஒரு ஒரு நளினம் ..சிற்பியின் வேலைப்பாடு ஒவ்வொரு அங்க அசைவையும் காட்டும் விதத்தில் உள்ளது

 

பிரமனுக்கு இரவாகும்பொழுது இயற்கை சலிக்காது. சிவபெருமான் அருளினால் ஒழிய இயக்கம் இல்லை. அவன் கழிப்பேருவகை கொண்டு ஆடும்போது சடப் பொருள்கள் மூலம் துயில் நீங்கி எழும் ஒலி அலைகளை வாரி இறைக்கிறான். அசையாத பொருள்களும் அசைந்து அவனை சுற்றி ஒளிக்கற்றைகளை பரப்புகின்றன. ஆடிக்கொண்டே அவன் பல்வேறு தொழில்களை நடத்துகிறான். முடிவு காலம் நெருங்கியதும் எல்லாவற்றையும், உருவங்களையும் நாமங்களையும் – தீயால் சுட்டெரித்து, அவைகட்கு ஓய்வு கொடுக்கிறான். இது கவிதை. இம்மி குறைவின்றி விஞ்ஞானமும் கூட.

– ஆனந்த குமாரசுவாமி.

மலையை குடைந்தான், எனினும் நினைவில் மறைந்தான்

[lang_ta]

கழுகுமலை …. இது எங்கே உள்ளது – தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம். அங்கே அப்படி என்ன விநோதம். எல்லோரா படம் பார்த்தீர்கள் அல்லவா … இப்போது வெட்டுவான்கோவில் படங்களை பாருங்கள்…

 

இப்போதைக்கு மேலோட்ட பார்வை தான்….. மலையில் பல ஜீன சிற்பங்கள் உள்ளன. அடிவாரத்தில் மலையை குடைந்து அமைக்கப்பட்ட வேட்டுவன்கொவில்..

பார்த்து நெகிழுங்கள்.. பாண்டிய குடவரை கோவில் …ஒரு சாதாரன மலையை குடைந்து ஒரு கலை பெட்டகத்தை நிறுவிய இந்த கலைஞர்கள் அமரர்கள் ….. இந்த அறிய பொக்கிஷம் நமது சரித்திரத்தில் இருந்து மறைந்து விட்டது…பல தமிழிருக்கே தெரியாத அவல நிலை….மாண்டவர் மீண்டும் வருவாரோ… அது போல இதுவும் ஒரு அழிந்த கலை ….இந்த திறமைகள் அழிந்து விட்டன …. இனி சிற்ப கலை மீலாது…..இது போன்று இன்னொன்று கட்ட இயலாது.

மல்லையில் ரதங்களின் நடுவே யானை என்ன செய்கிறது ?

அடுத்த முறை இவிடங்கலுக்கு செல்லும் போது இவற்றை மனதில் கொண்டு செல்லுங்கள். சென்னையிலும் அதனை அடுத்த இடங்களிலும் பல அறிய கோவில்கள் உள்ளன. அவற்றை வெறும் தெய்வ வழிபாடு இடங்களாக மட்டும் கருதாமல், கலை வளர்க்கும் பெட்டகங்களாகவே அந்நாளில் தமிழ்ர்கள் கருதினார். இதற்க்கு சான்றுகள் பல உண்டு. அவற்றை வரும் வாரங்களில் பார்போம். தமிழகத்தில் கோவில் கலை தோற்றத்தில் மிக முக்கிய இடம் பிடிக்கும் மல்லைக்கு இப்போது செல்வோம். மல்லை ஒரு புரியாத புதிர். அவற்றை பட்டியலிட்டால் ஒரு புத்தகமாக வெளியிடலாம் – பல விவாதங்கள் இன்னுமும் நடை பெற்றுக்கொண்டு உள்ளன. மல்லை யின் சிற்பியின் ( அமரர் கல்கி உருவாக்கிய சிவகாமியின் சபதம் போற்றும் ஆயனர் நினைவுக்கு வருகிறார்) அறிவுக் கூர்மை மற்றும் சிற்ப கலை நுட்பத்தை விளக்கும் சிற்பங்கள் ஏராளம். அதற்க்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு. பஞ்ச பாண்டவ ரதம் என்று இன்று பெயர் பெற்றுள்ள ரதங்களை சென்னைவாசிகளுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம்.

 

இங்கே நிற்கும் யானை சிற்பம் மிகவும் அழகு. தொலைவில் இருந்து பார்க்கும் போது நிஜ யானை நிற்பது போல மிகவும் தத்ருபமாக செதுக்கி உள்ள அழகு அருமை.ஆனால் எதற்காக அந்த யானை அங்கு செதுக்க பட்டுள்ளது. ?

சரி படங்களை பாருங்கள்…

542

 

முதலில் தொலைவில் இருந்து.. சரி தனித்தனியே பார்போம்…..

 


இந்த பக்கம்…

சரி அந்த பக்கம்……

 

 

 

கொஞ்சம் அருகில் சென்று

இதை விளக்க அதனை ஒட்டி உள்ள சகாதேவ ரதத்தினை பாருங்கள்.


சகாதேவ ரதம் கஜ ப்ரிஷ்டம் என்னும் வடிவம் பெற்றது. ( கஜ – யானை , ப்ரிஷ்டம் – முதுகு) இப்போது இணைத்துள்ள படங்களை பாருங்கள். ரதத்தின் மேல் பாகமும் யானையின் முதுகும் ஒத்து இருப்பதை உணரலாம். இதனை காண்போருக்கு உணர்த்தவே யானை சிற்பம் அங்கு உள்ளது … இங்கே இருக்கும் இன்னும் இரண்டு பிராணிகளின் சிற்பம்…ஒன்று சிங்கம் மற்றொன்று காளை…இவற்றை பின்னர் பார்போம்…