மைகேலன்ஜெலோவின் டேவிட் Vs நெல்லையப்பர் அர்ஜுனன் – பாகம் 2

முதல் பாகத்தில் மைகேலன்ஜெலோவின் டேவிட் சிற்ப்பத்தை நெல்லையப்பர் கர்ணனுடன் ஒப்பிட்டு பார்த்தோம். இன்று அதே காட்சியின் அடுத்த பாகம் செல்கிறோம். குருக்ஷேத்திர போரின் பதினாறாம் நாள் ! முதல் பத்து நாட்டகள் பிதாமகர் பீஷ்மரின் தந்திரத்தால் போரில் பங்கு எடுக்காமல் வெளியில் நின்ற கர்ணன், அவர் வீழ்ந்த பிறகு போரில் புகுந்து ஐந்து நாட்டகள் ஆகி விட்டன. கண்ணனின் உதவியுடன் பாண்டவர்களின் கை மேலோங்கி நிற்கிறது. கர்ணன் சென்ஜோட்ட்றுக் கடனுக்கு நண்பன் துர்யோதனன் வெல்ல அன்று போரின் போக்கை மாற்ற அர்ஜுனனை நேரடியாக எதிர்கொள்கிறான்.

அவனை அன்று வரை லேசாக நினைத்த அர்ஜுனனுக்கு கண்ணன் அவனது பெருமையை இவ்வாறு கூறுகிறான்.

“வேண்டாம். வலிமை மிக்கவனே ,அர்ஜுனா , கர்ணனை குறைவாக என்னதே, அவன் இந்த போரின் அணிகலன் , வலிமை மிக்கவன். ஆயுதங்களை கையாள்வதில் கைதேர்ந்தவன் . மஹாரதன். எல்லா போர் திர்ணகளையும் கற்றவன். பாண்டு புத்திரனே ,அவனை உனக்கு சமமாக மதி , ஏன் உன்னைவிடவும் வல்லவன் என்று நினை. அவனை வீழ்த்த வேண்டும் என்றால் நி உன்னுடைய திறன் அனைத்தையும் பிரயோகம் செய்ய வேண்டும் . அவனது சக்தி அக்னியை போன்றது, அவனது வேகம் காற்றை போன்றது, அவனது கோபம் காலனை போன்றது. வலிமை பொருந்திய அவன் ஒரு சிங்கத்தை போன்ற உடலை கொண்டவன். எட்டு ரதிகளை அடக்கியவன் அவன். என்ன பெரிய புஜங்கள் அவனது !வலிமை மிக்க பரந்த மார்பு உடைய அவன் அபராசிதன் ! அவன் ஒரு வீரன், வீரகளுக்கு எல்லாம் வீரன் – முன்னோடி வீரன். அழகு பொருந்தியவன். வீரனுக்கு என்னவெல்லாம் அழகோ அத்தனையும் பொருந்தியவன், பயம் அறியாதவன்., “

இவர்கள் இருவரும் நேருக்கு நேர் பார்க்கும் காட்சி எப்படி இருக்கும்.

அர்ஜுனனுக்கு எதிரில் கர்ணன் நாகாஸ்திரம் எடுத்து விட்டான் என்று தெரியும், அப்போது அவன் முகத்தில் என்ன தெரிகிறது ? ( இங்கே புது விதமாக தாடி, அதுவும் முடிவில் முடி போட்டு பின்னிய தாடி )

முதல் பார்வையில் , ஒரு சிறு அதிர்ச்சி , இடது கால் சற்று பின்னால் வாய்த்த படி, தலை சற்றே சாய்ந்து பார்க்கும் வண்ணம் உள்ளது

அர்ஜுனனின் மார்பு கர்ணனை போல அல்லாமல், நிதானமாக நிற்கும் வண்ணம் உள்ளது.

கர்ணனின் கோலம், அஸ்திரத்தை வில்லில் பூட்ட மூச்சை உள்வாங்கி நிற்பது போல உள்ளது.

அர்ஜுனின் கையிலும் அம்பு உள்ளது, அவன் முகத்தில் பயம் தெரிகிறது என்று சொல்ல முடியாது. அவனுக்கு அருகில் கண்ணன் இருக்கிறான் அவன் எப்படியாவது காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையினாலோ ?

முன்னர் பார்த்த டேவிட் சிற்பத்துடன் ஒப்பிடுவோம்.


அந்த முட்டி எலும்பு , பின்புறம் புடைக்கும் நரம்பு – எல்லாம் கருங்கல்லில் !!

அதுவும் அர்ஜுனன் கையில் பிடித்திருக்கும் அந்த அம்பு, அதன் ஈர்க்கில் ( சிறகு !), கை விரல்கள், விரல்களில் உள்ள நகங்கள். !!


சிற்பி காட்சியை அப்படியே அற்புதமாக, தத்ரூபமாக, நாம் காணவென்றே நம் கண்முன்னர் கொண்டு வந்து விடுகிறான்.

மைகேலன்ஜெலோவின் டேவிட் Vs நெல்லையப்பர் கர்ணன் – பாகம் 1

உலக கலை வரலாற்றில் சில பெயர்களை ஒரு தனி மரியாதையுடன் கையாள வேண்டும் – மைகேலன்ஜெலோ டி லோடோவிகோ போனர்ரொட்டி சிமோனி என்ற பெயர் அதில் முதன்மை. அதிஷ்டவசமாக அவரை பற்றிய ஒரு நூல் வாசிக்க நேர்ந்தது The Agony and Ecstasy .ஒரு வாரம் பாண்டிய நாட்டில் கழித்து விட்டு நண்பர் அரவிந்தும் நானும் அன்று திரும்புகிறோம் – அவரை நெல்லை ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு சென்றேன். பேருந்து புறப்பட இன்னும் இரண்டு மணிநேரம் இருந்தது, நேரத்தை கழிக்க ரோட்டில் இருந்த ஒரு பழைய புத்தகக் கடைக்கு சென்றேன். நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் விட்டு ஓடிய பள்ளி மற்றும் காலேஜ் நூலகளுக்கு அடியில் ஒரே ஒரு ஆங்கிலப் புதினம் கிடைத்தது. அட்டை கிழிந்து இருந்த நிலையில் எனக்கு அவர் அதை இலவசமாகவே கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். எனினும் நூலில் மைகேலன்ஜெலோ பற்றிய தகல்வல்களை திரிந்துக்கொள்ள மளமள வென படிக்கத் துவங்கினேன்.

அன்றைக்கு அரை நாள் தென்னிந்திய கலையில் பலரும் பெருமையாக பேசும் நெல்லையப்பர் கோயில் சிற்பங்களை ( முந்தியா நாள் கிருஷ்ணபுரமும் முடிந்தது !) முறையே படம் எடுத்துவிட்டு, பாண்டி யாத்திரை பல முக்கிய இடங்களையும் கண்ட சந்தோஷத்துடன் , இருட்டு கடை அல்வா வாசம் மணக்க மணக்க பேருந்தில் ஏறினேன். நூலை படிக்க படிக்க மைகேலன்ஜெலோ பளிங்க்கு கல்லைக் குடைவதில் தான் முழு நாட்டத்துடன் இருந்தார் என்றும் ஓவியத்தில் அவருக்கு அவ்வளவு நாட்டம் இல்லை என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். லியோநார்டோ டா வின்சி யுடன் அவருக்கு இருந்த போட்டி , பொறாமை கொஞ்சம் கொஞ்சமாக புரிய வந்தது. இரண்டு மாபெரும் கலைஞர்கள் , சம காலத்தில் அதுவும் ஒரே பகுதியில் இருப்பதும், ஒரே பணிக்கு போட்டி போடுவதும், சுற்றி இருப்போர் இருவரின் கலையையும் ஒப்பிடுவதும், அதற்காக ஒருவருக்கு ஒருவர் எப்படி போட்டி போட்டு வேலை பார்த்தனர் என்றும் விளங்கியது.

டேவிட் என்ற சிற்பம் உருவான கதையை படிக்க படிக்க வியக்க வைத்தது. மைகேலன்ஜெலோவின் டேவிட் என்று உலகம் போற்றும் இந்த பளிங்கு சிலை – அபுஆன் ஆல்ப்ஸ் மலை தொடரில் உலகிலேயே வெள்ளை பளிங்கு கற்களுக்கு பெயர் போன கறார என்ற இடத்தில இருந்து வெட்டப்பட்டது. ஆனால் அது மைகேலன்ஜெலோவின் கையில் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே – சிற்பக்கலையில் அன்றைய சிகரம் டோனடேல்லோ மற்றும் அவரது மாணவன் அகஸ்டினோ முயற்சி செய்த பாறை – 1464 CE. டோனடேல்லோ மறைந்தவுடன் 1466 ஆம் ஆண்டு இந்த வேலை ஆரம்ப நிலையிலேயே கைவிடப்பட்டது. பிறகு பத்து ஆடுகளுக்கு பின்னர் ரோசாலினோ இதை உயிர்ப்பிக்க முயற்சி செய்தார். அப்போது பளிங்கு பாறையை சில இடங்களில் அவரும் வெட்டி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. எனினும் அந்த வேலையும் பாதியிலேயே கைவிடப்பட்டது. பின்னர் அந்த பாறை வெட்ட வெளியில் இருபத்தைந்து வருடம் கேட்பார் அற்று கிடந்தது. அப்போது கிடைத்து குறிப்புகளில் இந்த பாறை சில இடங்களில் மோசமாக வெட்டப்பட்டு இருந்ததை குறிபிடுகின்றன

மீண்டும் இந்த வேலை துவங்க முயற்சிகள் நடந்த பொது லியோநார்டோ கூட தயங்கிய பொது இந்த வேலையை மைகேலன்ஜெலோ எடுத்துக்கொள்கிறார். இதனை அவர் செய்து முடித்தால் கண்டிப்பாக உலகத்தின் பார்வை இவர்மீது இருக்கும் – அது வரை சிற்பக்கலைக்கு முடிசூடா மன்னனாக இருந்த அவருக்கு இது ஒரு மணிமகுடம் என கருதப்படும்.

ஏற்கனவே மிகவும் கடினமான இந்த பணியை – அதுவரை நடைமுறையில் இருந்த டேவிட் வடிவங்கள் – டோனடேல்லோவின் டேவிட் உட்பட – போல இல்லாமல் முற்றிலும் புதிய பாணியில் வடிக்க மயற்சி செய்கிறார்.

செதுக்கும் முன்னர் அவரது சிந்தனைகளைத் தீட்டி பார்க்கிறார். நமக்கு அதில் சில கிடைத்துள்ளன.

கதை பலருக்கும் தெரிந்ததே. டேவிட் சாமானிய சிறுவன் , கோலியாத் நமது கும்பகர்ணனை போன்ற ராட்சஸ உருவம். அவர் வரைந்த முதல் ஓவியங்களில் முந்தைய டேவிட் வடிவங்களை போலவே இந்த சிலையிலும் டேவிட் கோலியாத்தை வீழ்த்தியவுடன், கொய்த தலையை காலின் அடியில் காட்டும் வண்ணமே வரைந்துள்ளார். ஆனால் பிறகு அவர் செய்தது தான் இந்த சிலையின் அழியாப் புகழுக்கு காரணம். சிறுவன் டேவிட் கோலியாத்தை எதிர்கொள்ளும் அந்த ஒரு தருணத்தை கல்லில் பிடித்துள்ளார்.

முதலில் இந்த சிலையின் அளவு – முடிவுபெற்ற நிலையில் இன்று 17 அடி, உயர்ந்து நிற்கும் இந்த சிற்பம், பளிங்கு பாறை இன்னும் பல அடி இருந்திருக்க வேண்டும்.

மூன்றே ஆண்டுகளில் 1501 முதல் 1504 வரை ஒரே மூச்சில் அந்த மகா சிற்பி இதனை முடித்துள்ளார். அருகில் சென்று அவரது உன்னத கலையை ரசிப்போம்.

அனைத்து டேவிட் படங்களும் இணையத்தில் இருந்து எடுத்தவை – விக்கிபீடியாவிற்கு நன்றி

உயர்ந்து நிற்கும் இந்த சிற்பம் தனியாக எந்த துணையும் இல்லாமல் நிற்கிறது. இதனை வடிக்கும் பொது மேலிருந்து கீழே வடிக்க வேண்டும். முதலில் கொஞ்சம் கொஞ்சமாக மேலே இருக்கும் கல்லை குறைக்க வேண்டும். இல்லை என்றால் பாரம் தாங்காமல் கால்கள் உடைந்து விடும். அப்படி கல்லை மெதுவாக குடிக்கும் போதே பளிங்கு எவ்வளவு பாரம் தாங்கும், அதனை ஈடு செய்ய கீழி எவ்வளவு கல்லை வைக்க வேண்டும், முடிந்த சிலையில் அந்த கல் எப்படி காலாக மாற வேண்டும் என்றெல்லாம் யோசிக்க வேண்டும்.

பின்னர், அந்த கால் , கை, வயிறு, தோள்பட்டை, எலும்பு – அதன் மேலே தசை, அதற்கு மேலே ஓடும் நரம்பு, அதற்கு மேல் படரும் தோல் என்று மனித உறுப்புகளின் அசைவு, வளைவு அனைத்தையும் கல்லில் கொண்டு வர வேண்டும்.

பின்னர் எதிரியை, அதுவும் தன்னை விட பல மடங்கு பலசாலியான எதிரியை எதிர்நோக்கும் அந்த தருணம், அவனது சிந்தனை எப்படி இருந்திருக்கும், மன ஓட்டம் என்னவாக இருக்கும், வாழ்வா சாவா என்ற போராட்டம் கண்களில் வெளிக்கொணரும் அந்த ஒரு பயம்.வலது கையில் ஒரு கல் , இடது கையில் அதை வீசும் பட்டை, வீச தயாராகும் அந்த அசைவு. அப்பப்பா, என்ன ஒரு சிலை.

இதனை பார்க்கும் போதே அன்று நெல்லையப்பர் கோயிலில் இதே போல ஒரு போர் காட்சி நினைவிற்கு வந்தது. கொடை வள்ளல் கர்ணனின் அரிய சிலை. குந்தியின் மூத்த மகன், பஞ்ச பாண்டவர்களின் அண்ணன், விதியின் சதியால் எதிரியின் கூடாரத்தில் சென்றடைந்த மாவீரன், செஞ்சோற்றுக்கடனுக்காக நட்பை மானமென காத்த உத்தமன், வந்தது இந்திரன் என்று தெரிந்தும் தன உயிர் காக்க ஒட்டிப்பிறந்த கவச குண்டலங்களை தானமாக கொடுத்த கொடை வள்ளல். வில்லுக்கு ஒரு விஜயன் என்ற கூற்றை பொய்யாக்க திறன் பாடிய ஒரே வீரன்.

அர்ஜுனனை வீழ்த்த தன்னிடத்தில் இருந்த பெரிய சக்தி – நாகாஸ்திரம் – அவசெணன் என்ற நாக இளவரசன் தான் அந்த அஸ்திரம் – தனது நாட்டையே தீயாக்கிய காண்டவ தகனம் போரில் அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் தன தாயையும் இழந்த வீரன் அவன். அந்த பானத்திற்கு அர்ஜுனனிடத்தில் எந்த எதிர் பாணமும் கிடையாது.

தூண் சிற்பம் – சுமார் 12 அடி உயரம் , கருங்கல்லில் முன்னும் பின்னும் இன்னும் பல சிற்பங்கள், பின்புறம் மேல்கூரையை தாங்கும் தூண்

சிற்பத்தின் காலம் சுமார் 16 17 CE – நாயக்கர் காலம்.

இங்கும் அந்த சிலையை வைத்த சிற்பி – போரின் ஒரு முக்கிய தருணத்தில் காட்சியை அமைக்கின்றான். அவசெணன் தந்தது பாம்பு வடிவில் கர்ணனின் கையில். கர்ணனின் முகத்தில் ஒரு பெருமித சிறப்பு, தனது திறனிலும் நாகாஸ்திரத்தின் தன்மையிலும் அசாத்திய நம்பிக்கை, வில் வித்தையில் தன்னை பல முறை பலரும் அர்ஜுனனுக்கு குறைவாகப் பேசிய அனைவரின் வாயை மூடப் போகும் தருணம்.


வலது கால் சற்றே தூக்கி பின்னால் நகர்ந்து வருகிறது, நாணைப் பூட்டி வில்லை வளைக்கும் பொது வலது கால் சற்று பின்புறம் இருந்தால் தானே பலம் வரும் ! இடது கையில் அந்த வில்லை பிடித்திருக்கும் அழகு, எதோ காதலியின் வாழை தண்டு கரங்களை தொட்டும் தொடாமலும் விளையாடும் விரல்கள் போல – விரல்களின் வலிமை , அந்த நகங்கள் கூட ! மடிந்த கை முட்டியின் ஒரு பக்கத்தில் சற்றே புடைக்கும் தசை !

முன்னங்கால் மடியும் பொது புடைக்கும் மூட்டு , பின்புறம் தொடையில் தெரியும் நரம்பு

வில்லை வளைக்கும் முன்னர் ஒரு பெருமித மூச்சை உள் வாங்குகிறான் கர்ணன், அதில் அவனது பரந்த மார்பு விரிகிறது – அப்போது அவனது விலாவெலும்பு.வில்லில் தெரிகிறது . அதனை எதிர்கொள்ளும் அர்ஜுனின் வடிவம் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

இரு அற்புத வடிவங்கள். இவற்றில் ஒன்றை உயர்த்தியோ தாழ்த்தியோ காட்டுவது இந்த பதிவின் நோக்கம் அல்ல -ஏன் இரண்டையும் ஒப்பு நோக்குவதும் அல்ல. ஒரு வடிவம் உலகப் புகழ் பெற்றுக் கொண்டாடப் படுகிறது. மற்றொன்று எவருமே ஒரு நிமிடம் கூட நின்று பார்க்காமல் இப்படிக் கிடக்கிறதே என்ற ஏக்கம் தான். நியாயமான ஏக்கம்தானெ!!

சம்பா ( வியட்நாம்) சிற்பங்கள் – பாகம் 1

சம்பா அல்லது சாம் என்றால் நம்முள் பலருக்கு தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. இந்நாளைய வியட்நாமில் ஏழாம் நூற்றாண்டில் ஒரு அற்புத நாகரீகம் தழைத்தது. இவர்கள் வியத்நாமின் நடுப்பகுதியில் தற்போது தனாங் என்று விளங்கும் நகரின் அருகில் ஆரம்பித்து முதலில் பெரும்பாலும் சைவ சமயத்தை பின்பற்றினர். இந்திரபுரம் , அமராவதி , பாண்டுரங்க , விஜய என்ற நகரங்கள் அங்கே இருந்தன.

சாம் ஹிந்து கலைச்சின்னங்கள் மிகவும் அரியவகை கலை பொக்கிஷங்கள். பெரும்பாலும் வியட்நாமின் வெளியில் இவற்றை பார்க்க இயலாது. அங்கே கூட பெரும்பாலான சிற்பங்கள் மற்றும் ஆலயங்கள் அங்கே நடந்த போர்களில் மிகவும் சிதைந்து விட்டன. தற்போது தனாங் மற்றும் சைகோன் அருங்காட்சியங்கங்களில் உள்ள சிற்பங்கள் மற்றும் தனாங் அருகே உள்ள சில செங்கல் கட்டுமான கோயில்களே எஞ்சியவை. அங்கே பல லிங்க ரூபங்கள், முகலிங்கங்கள், கருடன், சயன பெருமாள் உருவங்கள் மற்றும் விநாயகர் உருவங்கள் உள்ளன.

இன்று நாம் பார்க்கவிருக்கும் சிற்பம் தொன்மையான சாம் விநாயகர் உருவம் – 8th C CE.

சாம் கலை அட்டவணை இவ்வாறாக பிரிக்கப்படுகிறது. ( அவை கண்டெடுக்கப்பட்ட இடங்களின் பெயர்களை ஒட்டி )

மை சொன் E1 (7th – 8th நூற்றாண்டு CE)
டாங் டுஒங் (9th – 10th நூற்றாண்டு CE)
மை சொன் A1 (10th நூற்றாண்டு CE)
க்ஹுஒங் மை (10th நூற்றாண்டு CE முதல் பாகம் )
டிரா கியு ( 10th நூற்றாண்டு CE இரண்டாம் பாகம் )
சான் லோ ( 10th நூற்றாண்டு இறுதி முதல் 11th நூற்றாண்டு CE நடு பாதி )
தாப் மாம் (11th முதல் 14th நூற்றாண்டு CE)

நாம் பார்க்கும் விநாயகர் சிலை ஒருவகை மணற் கற்பாறையில் ( sandstone) செதுக்கப்பட்டுள்ளது. மிகவும் தொன்மையான இந்த வடிவத்திலும் விநாயகர் வழிபாட்டின் கோட்பாடுகள் கடைபிடிப்பது வியக்க வைக்கிறது. மிகவும் சிதைந்த நிலையில் இருக்கும் இந்த சிலையில் ஒரே ஒரு கை மட்டுமே எஞ்சி இருந்தாலும் அது பிடிதிருக்க்ம் வஸ்து நம்மை திகைக்க வைக்கிறது.

அப்படி என்ன அவர் கையில் ? ஆமாம், ஒரு உரித்த சோழ கதிர் ஒன்றை கையில் பிடித்துள்ளார். அதன் வெளித் தோல் உரித்து இருக்கும் படி காட்சி இருப்பது மிக அருமை.

தொழில் ஒரு நாகம் பூணூலாக – நாக யக்நோபவீதமாக இருக்கிறது.

கையில் அணிகலன்கள் மற்றும் தலையில் கிரீடம் தெரிகிறது. அவரது கால் விரல்கள் மற்றும் இடுப்பில் வெட்டி மிக அழகு. கண்களை தனியாக பொருத்துவார்கள் போல உள்ளது. ஒருவேளை விலை உயர்ந்த மாணிக்க கற்களை வைப்பார்களோ?

நண்பர் ஓவியர் திரு ஸ்ரீநிவாஸ் க்ரோமா அகாடமி , உதவியுடன் இந்த சிலையின் முழு வடிவத்தையும் காண ஒரு முயற்சி.


இந்த சாம் சிற்பம் அதே சம காலத்து தெனிந்திய விநாயகர் சிலைகளில் இருந்து மிகவும் வேறுபடுகிறது.

இதை பற்றி இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். ஆர்வம் இருப்பவர்களுக்கு ஒரு தகவல். தென்னாட்டில் மிக தொன்மையான விநாயகர் வடிவங்களில் இந்த வீராபுரம் (குர்நூல் – ஆந்திரா ) களிமண் சிலையும் ஒன்று.
( நன்றி – Ganesh: studies of an Asian god By Robert L. Brown) – காலம் சுமார் 2nd C BCE !!

அடுத்து நாம் பார்க்க இருப்பது ஒரு அற்புத சிற்பம்

படங்கள் : திரு வசந்தா பெர்னாண்டோ
Vietnam History Museum Address:
Nguyen Binh Khiem Street, District 1, Ho Chi Minh City.

பாத்தாம்’மின் வினோத இந்து நாகா கோயில்

பொதுவாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‘நமது ‘ ஆர்வத்தை தூண்டும் இடங்கள் கிடைப்பது கடினம். அப்படி இருக்க ‘பாத்தாம்’ சென்ற போது இங்கே ஒரு இந்துக் கோவில் இருக்கிறது என்றவுடனே பட்டியலில் அடுத்து இருந்த ஷாப்பிங் ஒரு படி இறங்கி இதற்கு இடம் விட்டது. நாகா கோயில் என்று அங்கு இருப்பவர்கள் அழைக்கிறார்கள். அடர்ந்த மரங்களுக்கு இடையே ஒரு கோபுரம் – இல்லை இரு கோபுரம் ! இல்லை ஒரே கோபுரம் இரண்டாய் பிளந்து ! இல்லை, பின்னர் தான் திருக் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் ” கோபுர கலை மரபு ” நூலில் படித்தது நினைவுக்கு வந்ததது. பொதுவாக நமது ஆலயங்களின் வெளியில் இருக்கும் கோபுரம் என்பது ஒரு வகை நம் எண்ணங்களை சுத்தப்படுத்தும் – தேயினுள் நுழைவதை குறிக்கும். இந்த காட்சியை கீழே இருக்கும் படத்தை பார்த்தால் புரியும்.

இதுவே கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது நாம் பார்க்கும் கோபுர வாயில்களாக மாறிஉள்ளது. இங்கே ஜாவா தீவுகளிலும் இந்தோனேசியா பாலி போன்ற இடங்களில் இன்றும் அப்படியே உள்ளன.

உள்ளே சென்றோம். அங்கே இடது புறத்தில் ஒரு சிறு ஆலயம். திரிபுரசுந்தரி சுந்தரி ஆலயம். பூஜைக்கு இன்னும் அரை மணி நேரம் ஆகும் மேலே சென்று அங்கே இருப்பதை பார்த்துவிட்டு வாருங்கள் என்றார் பூசாரி.

சிறிது தொலைவு நடந்ததும் அழகான படிக்கட்டுகளின் மேலே ஒரு கோபுரம் தென்பட்டது.

இந்த ஆலயத்தை பற்றி இன்னும் படித்து தெரிந்துக்கொள்ள வில்லை. எனினும் எதிரே அழகிய வாயிற் காப்போன், மேலே தோரணத்தில் கருடன் என்று எடுத்தவுடனேயே அழகிய சிற்பங்கள்.

உள்ளே சென்றவுடன் ‘நமது ‘ தென்னாட்டு பாணியில் பிள்ளையார். அது என்ன தென்னாட்டு பாணி ? மேலே படியுங்கள்.

அடுத்து எதிரில் தோன்றிய காட்சி மலைக்க வைத்தது. ஏற்கனவே ஒரு சிறு மலை மீது ஏறி இருந்த நாங்கள் எதிரே ஒரு பெரிய மலை போல உயர்ந்த கோயிலை பார்த்து அதிர்ந்து போனோம். வெளியில் இருந்து ஒன்றுமே தெரியவில்லை !

உள்ளே இப்படி ஒரு பிரம்மாண்ட விமானம் இருக்கும் என்று நினைக்க வாய்ப்பே இல்லை. இரு புறத்திலும் இரு இந்தோனேசியா பிள்ளையார் சிலைகள். கைகளில் முறையே மழு, பூ மொட்டு, சுவடி மற்றும் மோதகம்

நடுவில் நாகங்கள். இது என்னவாக இருக்கும் என்று யோசித்தோம்.

சுற்றி ஏதாவது தென்படுகிறதா என்று சென்று பார்த்தோம்.

ராட்சச பாம்பின் சுருள்கள் – அடடே , பாற்கடல் கடையும் காட்சி போல உள்ளதே ! நாலு பக்கமும் பெரிய நகங்களை கொண்ட கால்கள் பாம்பின் உடலின் கீழே தெரிந்தன. பின்னால் இரண்டு வால்கள் தென்பட்டன.

ஆமாம். அதே தான். மீண்டும் முன் பக்கம் வந்து பார்த்தோம்.

கீழே இருக்கும் முகம் குர்ம வடிவம். அதற்க்கு மேலே வாசுகி.

பொதுவாக இருபக்கமும் தேவர்களும் அசுரர்களும் நின்று கடையும் விதமே பார்த்த நமக்கு – இது ஒரு புதுமை. மேலும் பின்புறம் சற்று உயரத்தில் கருடனும் அவருக்கு மேலே ஒரு பறவையும் உள்ளன.

மேலே – உச்சியில் தங்க முலாம் பூசிய வடிவம் ஒன்று நடனம் ஆடும் வண்ணம் உள்ளது. கம்போடிய வடிவங்களில் விஷ்ணு இப்படி இருப்பார்.


அங்கோர் வாட் சிற்பக் காட்சி

எனினும் கைகளில் ஒன்றும் இல்லாததால் முடிவாக சொல்ல சற்று கடினமாக உள்ளது . மேலும் இதனை சிவன் கோயில் என்றும் சொல்கிறார்கள். .

இப்படி பிரமித்து நின்று விட்டு அருகில் ஆதி விநாயகர் மற்றும் திரிபுரசுந்தரி ஆலயம் சென்று அருமையான பூஜையை தரிசித்து விடை பெற்றோம்.

சிங்கை வந்தால் பாத்தாம் கண்டிப்பாக சென்று வாருங்கள். அங்கே நண்பர் திரு Dhani Hariadi
சேவை அற்ப்புதம்

PT. TITA PANORAMA INDAH TOURS & TRAVEL

Komplek TanjungPantun Blok P No. 4 Batam Island 29453, Indonesia.
Phone:+62 (778) 3306999
Fax: +62 (778) 456 797
Mobile Number: (+62) 81372788887

சில வினோத ஆயுதங்கள் !

இந்து மதம் என்பது இந்து மகா சமுத்திரத்தை விட மிகவும் ஆழமானது. அதனாலேயே பலரும் அதனை புரிந்துக்கொள்ள எத்தனிப்பதில்லை. அப்படியே முயற்சிக்கும் பலரும் அதன் தோற்றம் எழுத்து வரலாறு ஏன் கேள்வி வழி வரலாற்றையும் கடந்து நீடிப்பதால் தோல்வியுற்றே திரும்புகின்றனர். அப்படி இருக்கையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை மேலை நாடுகளின் கலை வல்லுனர்கள் இந்திய இந்து மதக் கலைசின்னங்களைப் பற்றி சற்று தாழ்வாகவே பார்த்ததில் தப்பில்லை என்றே தோன்றுகிறது. அதன் பின்னர் மெதுவாக நமது கலையை பற்றி புரிதல் வளர்ந்து இன்று ஒரு நல்ல மதிப்பை பெற்று இருந்தாலும், பொதுவாக அவர்கள் மனதில் அவற்றைப் பற்றிய கேள்விகளே அதிகம். அதை நாம் குற்றம் சொல்லக் கூடாது. இந்தியக் கலையானது அதை ஒட்டிய கதைகளை பிரதிபலித்தது. அதை புரிந்துக்கொள்ள அந்த கதைகளை மட்டும் அல்லாமல் அவற்றை சார்ந்து ஓடிய தத்துவங்களின் புரிதலும் தேவை படுகிறது. அப்படி இல்லாமால் வெறுமனே வந்து கோரை பற்களுடன், கொய்த தலைகளை ஏந்திய கைகளையும், மண்டையோட்டு மாலைகளையும், பூத கணங்கள் சூழ , பத்து கரங்களில் கொடிய ஆயுதங்கள் கொண்ட உருவங்களையெல்லாம் பார்க்கும்போது அவர்களுக்கு ஏற்பட்ட முதல் அபிப்பிராயம் தவறாக இருந்ததில் தப்பில்லைதானே !

அதே மண்ணில் பிறந்து வளர்ந்த நமக்கே, முத்தொழில்களில் அழிக்கும் கடவுள் என்று சிவனை பார்க்கும்போது, இடுகாட்டில் , உடல் முழுவதும் சாம்பலை பூசி, பேய்களுடன் ஆடும் அவனது கோலத்தை ரசிப்பது சற்று கடினமே. அவனது லிங்க ரூபம் அதனை ஒட்டிய கருத்துக்கள் பக்கம் போகவே தேவையில்லை. அதுவும் இந்த காளாமுகர், காபாலிகர் , பாசுபதர், பைரவர் வழிபாடு என்று இப்படிஅடுக்கிக் கொண்டே போகலாம்.

எனினும் எப்படி இருந்திருக்கலாம் என்ற கேள்வி கிளம்புவதை ஆதரிக்கும் இந்த மதத்தின் தத்துவார்த்த பின்புலம் அழகு.

சிற்பக்கலையில் ஒரு சில இடங்களில் பழைய கோட்பாடுகள் அங்காங்கே தென்படுகின்றன. திரு கணபதி ஸ்தபதி அவர்களின் அருமையான நூலை கொண்டு சிலவற்றை ஆராயாலாம் Indian Sculpture and Iconography .

ஹளபேடு கோயிலில் எங்கும் சிற்பம் தான். அதில் ஒரு சிவ பைரவர் ரூபம் நமது ஆராய்ச்சிக்கு இன்று உதவுகிறது.

ஹோய்சலர்களின் கலை – ஒரு சிறு இடம் கூட விடாமல் எங்கு பார்த்தாலும் ஏதாவது இருக்கும். அரக்க பரக்க வரும் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று பார்க்க கூட நேரம் இல்லாமல் வெளியே ஆம்னி பஸ் ஹார்ன் சத்தம் கேட்டு ஓடி ஓடிப் பார்ப்பதே அதிகம். அப்படி இருக்கையில் இந்த சிலையை நின்று பார்ப்பவர் சற்று அதிர்ச்சி அடைவது சிவனின் இடது கையில் இருக்கும் ஆயுதத்தை கண்டு.

என்ன இது என்று யோசித்துக்கொண்டே , இதெல்லாம் இந்த நூலில் இருக்குமா என்ற சந்தேகத்துடனேயே புரட்டினேன்.

அங்கே


” கட்வங்கம் : இந்த தடி கால் துடை எலும்பினால் செய்யப்பட்டது. அதன் மேலே ஒரு மண்டையோடு பொருத்தப்பட்டு இருக்கும். தடியை சுற்றி ஒரு பாம்பு மண்டையோட்டின் கண் துவாரத்தின் வழி வெளியே வந்து படம் எடுத்து ஆடும். சில இடங்களில் தடி மரத்தால் ஆனதாகவும் இருக்கலாம். பொதுவாக காபாலிக வடிவங்களில் இதனை காணாலாம். இது சிவனின் ஆயுதம். இது சில யோகிகள் மற்றும் ரிஷிகள் கையிலும் இருக்கும். தடி இரண்டு முக தூரமும், இரண்டு விரல் தடிமனும், மண்டையோடு ஐந்து விரல் அகலமும் ஏழு விரல் நீளமும் இருக்க வேண்டும் “

அது மட்டும் இல்லை கூடவே படமும் அப்படியே அச்சில் எடுத்தவாறு இருந்தது. நண்பர் ஓவியர் திரு ராகவேந்திர பிரசாத் அவர்கள் உதவியுடன் இதோ நமக்கு இன்னும் தெளிவான படம்.

இந்தி பற்றி விவாதிக்கும் பொது நண்பர் திரு சுவாமிநாதன் அவர்கள் சோமநாதபுரம் நான்முகன் சிற்பம் ஒன்றைக் கொடுத்து உதவினார். அங்கே இன்னும் ஒரு அபூர்வ வகை ஆயுதம்.

பிரம்மாவின் வலது கையில் உள்ள கருவியை உற்று பாருங்கள்.

மீண்டும் பிரசாத் உதவியுடன்

படைக்கும் கடவுளின் கையில் இருக்கும் இது என்ன என்பதே அவரது கேள்வி.

மீண்டும் நூலைப் புரட்டினேன்.

“சிறுக்’ , ’சுருவம்’ : இவை கரண்டிகள். பிரம்மனின் கருவிகள். யாக சாலையில் யாக குண்டத்தில் தீக்கு நெய்யை உற்ற உதவும் கருவிகள் இவை. யாகம் முடியும் கடை நாளில் பூர்ணஹுதி என்னும் வழக்கில் பல்வேறு காணிக்கைகளை யாக குண்டத்தில் போட இந்தக் கருவிகள் உதவும். ’சிறுக்’ என்பது கட்டையால் ஆன கரண்டியாகும். சுருவம் சற்று வேறுபடும். சதுர வடிவில் இருக்கும் இதன் தலையில் பசு , யானை மற்றும் இதர பிராணிகளின் தலைகளின் வடிவங்கள் அலங்கரிக்கும். இவற்றின் அளவு ஒரு முழமாக இருக்கும். ”

மிகவும் அருமையான வடிவம். அது எழுப்பும் கேள்விகளும் அதிகம். எனினும் தற்போது எனது தேடல் யானை தலையுடன் இருக்கும் ஒரு சுருவம்!!

சேரன்மாதேவியில் உள்ள சோழ பாண்டிய ஆலயமும் அதன் ரகசியமும் – பாகம் 2

நிலவறை, சுரங்கம், புதையல் – மன்னர்கள் , பொக்கிஷம் – இப்படி அடுக்கியவுடனே நமக்குள் மளமள என படித்த சரித்திர கதைகள் , கேட்ட வதந்திகள் அனைத்தும் கண்முன்னே ஓடும். சிறுவயது முதலே இவை நமக்குள் ஏதோ ஒரு தாக்கத்தை உண்டாக்குவதை மறுக்க முடியாது. (அதுவும் இப்போது திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி நிலவறைகள் ரொம்ப புகழ் பெற்றதாயிற்றே) இன்றும் நாம் இவை பற்றி ஆவலுடன் படிக்கிறோம் , பெரிய பெரிய ஹாலிவுட் இதை வைத்து படங்கள் எடுக்கிறார்கள் என்பதைக் கொண்டே இதன் பால் நமக்கு இருக்கும் ஒரு ஈர்ப்பை அறியலாம். அப்படி என்ன இருக்கு இந்த சுரங்கங்களில் என்று நீங்கள் கேட்கலாம். கோயில்கள் நமது பாரம்பரியத்தை மட்டும் காக்கவில்லை , அந்நாட்களில் மன்னனும் ஆண்டியும் அவனிடத்தில் சரண் அடைந்து அவனுக்கு தந்த செல்வத்தையும் பேணிக் காத்தன. ஊர் மக்களுக்கு ஒரு வங்கி போல பணி புரிந்த பல தகவல்களை நாம் கல்வெட்டுகளில் படிக்கலாம். பொதுவாக மன்னர்கள் சண்டை போட்டுக்கொண்டாலும் நாடு பிடித்தாலும் அவர்கள் கோயில் சொத்தை ஒன்றும் செய்வதில்லை. எனவே அவை வளர்ந்தன. காய் நிறைந்த மரம் அடி வாங்குவது போல – வடக்கே கஜினியும் தெற்கே மாலிக் கபூரும் இந்த செல்வக் கொழிப்பை சூறையாட வந்தபோது – இதே நிலவறைகள் செல்வத்தை மட்டும் அல்ல பல செப்புத் திருமேனிகளை அவர்கள் கையில் சிக்கி அழியாமல் பாதுகாத்தன. அப்படி பெசிகொண்டிருந்த எங்கள் ஆர்வத்தை பார்த்துவிட்டு , எங்கள் கோயில் நிலவறைக்குள் செல்கிறீர்களா என்று சேரன் மாதேவி கோயில் காவலர் கேட்டவுடன் வெகு நாளைய கனவை நினைவாக்க உடனே தலை ஆட்டினோம்.

இன்னும் இதை பற்றி படிக்க வேண்டும் என்றால் டாக்டர் திரு நாகசாமி அவர்களது தளத்தில்
படிக்கலாம் – Underground Secret Treasuries in Ancient Temples

கடைசியில் வரும் குறிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது .. ...” கடைசியாக காலம் சென்ற திரு T. G. ஆரவாமுதன் , புகழ்பெற்ற நாணயவியல் வல்லுநர், ‘Portrait Sculpture in South India’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியவர், எனக்கு ஒருவர் சொன்னது – தஞ்சை பெரிய கோயில், அவர் சிறு வயதில் நடந்த சம்பவம், கண்ணை கட்டி தன்னை ஒரு நிலவறைக்கு கூட்டிச் சென்றதாகவும், அங்கே மிகவும் அற்புத செப்புத் திருமேனிகள் பல இருந்ததாகவும் கூறினார். பின்னர் பல முறை முயன்றும் அந்த பாதையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினார். நினவில் அந்த அறைக்கு செல்லும் பாதை இரு கருங்கல் சுவர்களுக்கு நடுவில் இந்தது என்றும் கூறினார். இதை போல பல நிலவறை – சுரங்கங்கள் இருப்பது சாத்தியமே என்றாலும் அவற்றை கண்டுபிடிப்பது தற்செயலாக நடந்தால் தான் சாத்தியம் “

சரி நமது நிலவறைக்கு வருவோம். அது அர்த்த மண்டபத்திலேயே இருந்தது.

அதுவரை இருந்த மின்சாரம் சட்டென போனது. எங்கும் ஒரே இருள், அந்நாட்களில் இப்படி தானே இருந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டே அருகில் சென்றோம்.

ஆலயத்தின் கதவின் பக்கத்தில் – அந்த நாட்களில் தரையில் மற்ற இடத்தில இருக்கும் அதே கல்லைபோன்ற அரைக்கால் கொண்டு மூடி இருப்பார்கள் – இன்று அதை அகற்றிவிட்டு இருப்பு கதவு போடப்பட்டிருந்தது.

அந்த நிலவறையின் அமைப்பு அபாரம். தரையில் இருந்த கதைவை அகற்றியதும் சுமார் ஏழு அடிக்கு பள்ளம். அதற்குள் ஒரு பக்கத்தில், சற்றே உயர்ந்த இடத்தில, அந்நாளில் அங்கும் ஒரு தடுப்பு கல் இருந்திருக்க வேண்டும் ஒரு சிறு சுரங்கம் பக்கவாட்டில் சென்றது. அதனுள் நாங்கள் தவழ்ந்து சென்றோம். எங்கும் கும்மிருட்டு.

பாதை ஒரு இடத்தில முடிந்தது. வலது புறத்தில் காவலர் எவர்ரெடி டார்ச் கொண்டு வழி காட்ட – ஒரு அறை – அந்த அறை – நான்கு அடி உயரம் தான்.

படம் எடுக்க டார்ச் ஆஃப் பண்ண சொல்ல – ஒரு நிமிடம் இதயம் தட தட என்று அடித்துக்கொண்டது.

ஆயிரம் ஆண்டு பழமையான நிலவறைக்குள் இருக்கிறோம் என்ற பூரிப்பு – அதனுள் ஏதாவது கிடைத்ததா என்று கேட்ட பொது – இல்லை சார். நாங்கள் வரும் முன்னரே…

இந்த நிலவறைக்கு மட்டும் ஒரு குரல் இருந்தால் அது என்னென்ன கதைகள் சொல்லுமோ !

கத்தி இன்றி சுத்தி இன்றி ஒரு ஆலயத்தை எப்படி வீழ்த்துவது !

புரிகிறது – தலைப்பு சற்று திகைப்பூட்டுவது தான். எனினும் நாம் இன்று பார்க்கப் போகிற காட்சிகள் அப்படி ஒரு தலைப்பை நியாயப்படுத்துகின்றன. இந்தியாவில் சரித்திர சின்னங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்று சொல்வார்கள். அது இப்படி கிடக்கும் என்று கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை. நண்பர் சங்கருடன் அரக்கோணம் பக்கம் சில கோயில்களைத் தேடி செல்லும் வழியில் தொலைவில் ஏதோ ஒரு அமைப்பு தென்பட்டது. மிகவும் பயிற்சியான உருவம்போல இருந்தது. ஒருவேளை ..


காரை நிறுத்தச் சொலி இறங்கி அதை நோக்கி ஓடினோம். அருகே செல்ல செல்ல அது விஸ்வரூபம் எடுத்தது. எங்கள் மனம் துக்கத்தால் கனக்க துவங்கியது.

காலுக்கு அடியில் சர சர என்று எதோ ஊறுவது போல இருந்தது. வரப்பை ஒரு பாம்பு தாண்டிச்சென்றது. ஆனால் நாங்கள் அதை பொருட்படுத்தாது மேலே சென்றது அந்த பாம்புக்கே அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் எதிரே நாங்கள் காணும் காட்சியால் ஏற்பட்ட அதிர்ச்சி அதற்க்கு தெரிய வாய்ப்பில்லை.

கருங்கல் தளம், செங்கல் திருப்பணி என்று நீண்டு உயர்ந்த பெரும் கோயில் எங்கள் கண்முன்னே சிதைந்து கிடந்தது. வெறும் செங்கல் கொண்டு இப்படியும் ஒரு கோயில் எழுப்ப முடியுமா என்று நாம் கொண்டாட வேண்டிய கோயில். நம்மவர்கள் செங்கல் திருடியும் தொங்கு பாலம் போல நிற்கும் செங்கல்களை பார்த்து அதை அப்படி கட்டிய திறனையும் வணங்கினோம்.

காலில்லாத நண்பர் நினைவு திடீரென மீண்டும் வர, சற்று தயங்கியே சென்றோம். கருவறை முக மண்டபம் என்று எங்கும் நாசம்.

நாங்கள் எந்த கோயிலுக்கு சென்றாலும் அங்கே கோயில் கோபுரங்களிலும் விமானங்களிலும் வளரும் சிறு சிறு செடிகளை பிடுங்கி போட்டு சிறு சிறு மராமத்து வேலைகளை செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்வோம். இந்தச் செடி என்ன செய்யும் என்று பலரும் அப்படி செய்வதில்லை. அவ்வாறு இருந்ததன் விளைவை இப்போது பாருங்கள். ஒரு பத்து வாலிபர்கள் சேர்ந்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை உழவாரப்பணி ஒரு சண்டே அவுட்டிங் மாதிரி செய்தால் போதுமே.

அப்படி செய்யாததால் மரத்தின் வேர் கோயிலை அப்படியே இரண்டாக பிளப்பதை பாருங்கள்.

என்ன சொல்வது – வார்த்தைகள் வரவில்லை. அருகில் இருக்கும் கம்பத்தை கொண்டு இதன் உயரத்தை கணக்கு போடுங்கள். இது ஏதோ தெரு முக்கு சிறு ஆலயம் அல்ல – அதன் காலத்தில் பெரும் முயற்சியுடன் எழும்பிய கம்பீர கோயில் . மனிதரிடத்தில் இன்று தோற்று அழியும் அவலம்.

ஊர் காரர்களுக்கு இது பெரிய விஷயம் அல்ல. அருகிலேயே புதிய கோயில் அமைத்து அதற்கு நன்கொடை வசூலித்து ( நாங்கள் போகும் போதே அது ஒரு பக்கம் சாயத் துவங்கிவிட்டது !) அவர்கள் தங்கள் கடமையை செய்து விட்டனர். ஆனால் இப்படி ஒரு அற்புத புராதன சின்னத்தை சிதைத்து மண்ணிலும் மரத்திலும் புதைக்க விட்டதன் கரை நம் நெஞ்சை விட்டு என்றும் போகாது.

ஹனுமான் எப்படி பாண்டவர்களின் கொடியில் சென்று அமர்ந்தார்!!

பொதுவாக கோவில் கோபுரங்களில் சுதை வடிவங்களையே பார்க்க முடியும் – கல் சிற்பங்களை பார்ப்பது கடினம் – அதிலும் அரிய புராண கதைகளை கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட சிறு புடைப்புச் சிற்பங்களை காண்பது மிக அரியது . அதனால் தான் திருக்குறுங்குடி கோயில் கோபுரத்தில் இப்படி ஒரு அரிய மகாபாரதக் கதையை கண்டபோது நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.

இந்த முறை சென்றபோது புனரமைப்புப் பணிகளின் காரணமாக சவுக்கு சாரம் கட்டி இருந்ததால் நானும் அரவிந்தும் மேலே ஏறிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

நாம் முன்னரே அங்கு உள்ள ஒரு அரிய கருடனின் கதையை பார்த்துள்ளோம். அதே போல இதுவும் ஒரு மிக அரிய வடிவம்.

அமர்சித்ரா கதைப் புத்தங்களில் படித்த நினைவு இருந்ததால் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இது வரை இதனைக் கல்லில் இப்படிச் செதுக்கி நாங்கள் பார்த்ததில்லை.

இந்தக் கதை ஒரு பிற்சேர்க்கை என்றே நினைத்து வந்தேன்.

ஒரு சிறு குரங்கு போல அமர்ந்து இருக்கும் அனுமன், வலிமை வாய்ந்த பீமன் தனது கதாயுதத்தால் ஏதோ ஒரு சிறு குச்சியை வழியில் இருந்து ஒதுக்குவது போல அனுமனின் வாலை தள்ளி விட முயற்சி செய்கிறான்.

என்ன கதை இது ?

பீமன், திரௌபதிக்காக சௌகந்திக மலரைக் கொண்டுவரச் செல்கிறான் . அப்போது வழியில் ஒரு குரங்கு படுத்துக் கிடப்தை காண்கிறான். குரங்கின் வால் தனது பாதையில் குறுக்கே இருப்பதை கண்டு வாலை நகர்த்துமாறு குரங்கை அதட்டுகிறான். பீமனுக்கு தனது உடல் பலத்தில் இருந்த பெரும் நம்பிக்கை அங்கே ஆணவமாக மாறுகிறது. அதனை சரி செய்ய அனுமன் தன தம்பியுடன் விளையாடுகிறார்.

வயதானதால் தன வாலை தன்னால் நகர்த்திக்கொள்ள தனக்கு சக்தி போதவில்லை என்றும், முடிந்தால் பீமனை தாண்டி குதித்து செல்லச் சொல்கிறார் . மேலும் ஆத்திரம் அடைகிற பீமன் தாண்டி செல்ல மறுக்கிறான்.

நீ யார் என்று அனுமன் கேட்க, பீமன் , தான் குந்தியின் புதல்வன், சத்ரியன் என்றெல்லாம் சொல்கிறான்.

அப்போது என்னை எளிதாக நீ தாண்டி குதித்துவிட்டு போகலாமே என்று அவனை அனுமன் கிண்டல் செய்கிறார்.

அதை கேட்டு மிகவும் கோபம் அடைந்த பீமன், கடலையே தாண்டி குதித்த அனுமன் தனது அண்ணன் என்றும், இந்த சாதாரண வாலைத் தாண்டி குதிக்க ஒரு நொடி ஆகாது என்றும் கூறுகிறான்.

அப்படியானால் தன வாலை எடுத்து ஓரமாக ஒதுக்கி விட்டு செல்லுமாறு அனுமன் கூற, பீமன் வாலை நகர்த்த முயற்சிக்கிறான். தன முழு பலத்தை கொண்டு முயற்சித்தும் அவனால் அந்த வாலை ஒன்றுமே செய்ய முடியவில்லை.

எதிரில் இருப்பது வெறும் குரங்கு அல்ல என்று உணர்த்த பீமன், தன கர்வம் அடங்கி வணங்குகிறான்.

’நான் தான் உன் அண்ணன் அனுமன்’ என்று தனது விஸ்வரூபத்தை காட்டுகிறார் அனுமன். மேலும் பீமன் தேடி வந்த மலரை அடைய எளிய வழி ஒன்றையும் கூறுகிறார். தன அண்ணன் தன்னை அணைக்கும்போது பீமன் தன உடல் புத்துணர்வு பெறுவதை உணர்கிறான். அனுமன் அவனுக்கு வரம் அளிக்கிறார். தாம் மேற்கொள்ளும் மகாபாரதப் போரில் தமதுகொவெற்றிக்கு உதவ வேண்டுகிறான் பீமன். அப்படியே அவரும் வரம் அளிக்கிறார். ”அர்ஜுனின் தேரின் மேலே பறக்கும் கொடியில் நானே அமர்ந்து உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தருகிறேன்” என்று அனுமன் அபயம் அளிக்கிறார்.

பக்தியை எப்படி வர்ணிப்பது – சிலையில் ?

ஆடவல்லானின் ஆடல் கோலத்தை பலரும் பாடியுள்ளனர், விழா எடுத்துக் கொண்டாடியுள்ளனர். தத்துவபூர்வமான விளக்கங்கள் பல வெளிவந்துள்ளன. அவைகளின் சிறப்பை நாம் எளிதில் உணர்ந்து அனுபவிக்க, அந்த அற்புத நடனத்தை இன்றும் நாம் கொண்டாட, அவரை கல்லில் செதுக்கியும் உலோகத்தில் வார்த்தும் சிறப்பித்த சிற்பிகளும் ஒரு முக்கியக் காரணம்.

அவர்களின் அற்புத கலையின் சிறப்பைப் போற்றி பெருமைப்படவே இந்த பதிவு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், அந்த அழகை உலோகத்திலும் உயிர் பெற செய்யும் தன்மையை நாம் புரிந்துக்கொள்ள இன்றைய பதிவு.

நண்பர் அர்விந்த் அவர்களின் படங்கள் இல்லையென்றால் கண்டிப்பாக இப்படி ஒரு பதிவை எழுத முடியாது. அலங்கரிக்கப்பட்ட ஆடல் வல்லானின் அழகுக் கோலம், அருங்காட்சியக சூழலில் அல்ல, ஆலயத்தில்! சுழன்று ஆடுவதைப்போல் காணப்படும் இந்த தோற்றத்தை எதிரில் நின்று பார்க்கும் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் அதிசயம்தான்! அந்த அழகு வதனத்தின் தேஜஸ் மற்றும் அந்த முத்திரைக் காட்டும் கையை பார்க்கும் பொழுது அலைபாயும் நம் மனதிற்குள் ஒரு அதீத அமைதி உருவாகிறது.

ஜோதி ஸ்வரூபமாய் அவன் ஜொலி ஜொலிக்க, அருகில் சிவகாமி அம்மை தன் மணாளன் ஆடும் அழகை கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறாள்.

அம்மையின் முகத்தில் புன்சிரிப்பு, வெறும் சிரிப்பல்ல பெண்மைக்கே உரியான ஒரு பெருமித சிரிப்பு! நிற்கும் கோலத்தில் என்ன ஒரு நளினம்!

இருவரோடு முடியவில்லை, இன்னும் ஒருவர் இருக்கிறார்!

இது நம் காரைக்கால் அம்மை.

நாம் முன்னரே பலமுறை அவர்களை கல்லில் பார்த்துள்ளோம். ஆனால் செப்பு சிலைகளில் இதுவரை ஒன்றிரண்டு அருகாட்சியகங்களில் தான் பார்த்ததுண்டு.


படங்கள்: இணையத்தில் இருந்து.

இந்த சிலைகள் அம்மையாரின்வாழ்கையை விளக்குகின்றன , ஆனால் ஏதோ ஒரு குறை, அது அம்மையாரின் பக்தி! அதை எப்படி சிலையில் காட்டமுடியும்?

பக்தி என்பது ஒரு சாதாரண உணர்வோ உணர்ச்சியோ அல்லவே! அது ஒரு நிலை! பிறப்பு, வாழ்வு, இறப்பு என்ற சுழற்சியை விட்டு ஜீவன் வெளியே வந்து, உடல் என்னும் கூடு, ஆவி என்ற ஒரு அடையாளம் என்று இரண்டையும் தாண்டி , இறைவன் என்ற பரம்பொருளிடம் ஐக்கியம் ஆகும் நிலை. இதை சிலையில் எப்படி காட்டுவது? இந்த நிலையை எழுத்தில் வர்ணிக்கவே கடினமாக இருக்கிறது. அம்மையின் பாடலையே விளக்கமாக இடுகிறேன்

இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க என்றார்.

– என்றும் கெடுதலில்லாத இன்ப அன்பினை வேண்டிப் பின்னும் வேண்டுவாராய், `இனிப் பிறவாதிருக்கும் வரம் வேண்டும், மீண்டும் பிறவி உளதாயின் உன்னை என்றும் மறவாது இருக்கும் வரம் வேண்டும், இவற்றோடு இன்னும் ஒன்று வேண்டும், அது, அறவா! நீ ஆடும்போது, நான் மகிழ்ந்துபாடி உன் அடியின்கீழ் இருக்கவும் வேண்டும்` என்று வேண்டினார்.

இப்போது மீண்டும் அம்மையை பாருங்கள்.

புடவை சுற்றப்பட்டாலும், வெளியில் தெரியும் தாளம் போடும் கைகள் மற்றும் முகத்தை வைத்தே அந்த கலைஞனின் அற்புத திறனை நாம் உணர முடிகிறது. அம்மையின் கைகள் தாளம் போடும் போதே, சற்றே வளைந்து அவன் ஆட்டத்தில் லயித்து இருப்பது தெரிகிறது. தான் வேண்டிய வரத்தை அளித்த மகேசனின் மீதான அவரது அன்பு, அதனுடன் மேலே பார்க்கும் வண்ணம் கழுத்து நேராக நீண்டு, நாசிகள் சற்றே விரிந்து, அந்த முகத்தில் தெரிவது பக்தியா?

இல்லை இல்லை பக்திப் பரவசம் !!

சூபர் பில்லர் காண்டேஸ்ட் என்று ஒன்று இருந்தால் …

இப்போதெல்லாம் எங்கே பார்த்தாலும் ரியாலிட்டி ஷோ, டாலேண்ட் ஷோ என்று களை கட்டுகிறது. பலர் தங்கள் திறமைகளை வெளிக் காட்டி பலருடன் போட்டியிட்டு வெற்றி பரிசைத் தட்டி செல்வதென்பது கலைக்கும் வெற்றியே. அப்படி தூண்களை வடிப்பதில் ஒரு போட்டி வைத்தால் ? அப்படி ஒரு அணிவகுப்பை நாம் இன்று பார்க்கப் போகிறோம். நண்பர் அரவிந்துடன் நெல்லை சென்ற பொது நெல்லையப்பர் ஆலயத்தில் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் தான் சென்றோம். ( இருட்டுக்கடை மூடி இருந்தது !)

வெளித்தோற்றத்தில் வாயிற் காவலர்கள் ( ஆலயம் ஏழாம் நூற்றாண்டாக இருந்தாலும் நாம் பார்க்கும் தூண்களின் காலம் சுமார் பதினைந்தாம் நூற்றாண்டு / அதற்கு மேல் -) சுமார் தான் என்று சொல்ல வாய் எடுத்த பொது …

முழு வடிவம் கண்டு வாய் அடைத்துப் போனோம்.


ஒரே கால்லால் ஆன தூண் – இல்லை இல்லை தூண்கள் கொண்ட சிற்பம். ஒவ்வொரு தூண் வடிவமும் ஒரு விதம் – ஒரு தூண் அல்ல. வினோத தூண்களின் அணிவகுப்பு என்றே சொல்ல வேண்டும்.

அதிலும் இவை தான் புகழ் பெற்ற நாத தூண்கள் ! இத்தனை காலம் பக்தர்கள் பலரின் பலப்பரிட்சையை வென்று சங்கீதம் எழுப்பும் தூண்கள்.

ராட்சஸ தூண்கள் என்றால் இவை தானோ !

அளவால் மட்டும் சொல்ல வில்லை, வேலைப்பாட்டைப் பாருங்கள்.மயக்குகிறது.

இவை ஒரே கல் என்றால் நம்ப முடியவில்லையா ? நன்றாகப் பாருங்கள் – கல்லில் ஓடும் நரம்புகள் தெளிவாக தெரிகின்றன.


பார்த்துக் களைத்து இருந்த பொது இன்னும் சில கண்ணில் பட்டன. ஆஹா, இவை அந்த ராட்சஸ தூண்களுக்கு சளைத்தவையல்ல என்று நகர எத்தனிக்கும்போது

.

நல்ல கச்சேரியில் வித்வான் கடைசியில் தன்னுடைய சிக்நேசர் தில்லானா பாடி கைதட்டுதல் பெறுவது போல ஒன்றிரண்டு இங்கும்..

தூணின் அடியில் பாருங்கள்.

கல்லை ஒவ்வொரு சிறு தூண் வடிவமாகக் குடையும் போதே, நடுவில் கொஞ்சம் விட்டு அதனை ஒரு பந்து போல செதுக்கி உள்ளான் ( உருளி !!) – இதனை வெளியில் எடுக்க முடியாது ( உள்ளேயும் போட முடியாது !!)

இரண்டு என்று சொன்னேனே ! இதோ

கண்டுபிடித்தீர்களா ?


பெரிய கல்லில் எண்ணில் அடங்கா சிறு தூண்களை , அதுவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியில் , அதுவும் வெவ்வேறு சங்கீத ஒலிகளை எழுப்பும் வண்ணம் செதுக்குவது போதாது என்று அந்த மகாகலைஞன் உள் தூண் ஒன்றில் ஒரு சிறு அணிலை செதுக்கி நம்மை ஆச்சரியத்தில் ஸ்தம்பிக்க வைத்தான். தூண் போல நாமும் பல மணிநேரம் கழிந்தது தெரியாமல் நின்றோம்.